உள்ளே சென்ற கம்பீர்.. 12 வீரர்களை வெளியே அனுப்பிய கொல்கத்தா! வெளியானது பட்டியல்
2024 ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக தக்கவைத்துள்ள வீரர்களின் பட்டியலை கொல்கத்தா அணி இன்று வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் நடைபெறும் மிகப் பெரிய கிரிக்கெட் லீக் போட்டி என்றால் அது ஐபிஎல் எனப்படும் இந்தியன் பிரீமியர் லீக்தான். கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் உலகில் மற்ற நாடுகளில் நடத்தப்படும் கிரிக்கெட் தொடர்களை விடவும் அதிகம் கவனிக்கப்படும் தொடராக உள்ளது.
இதில், வீரர்கள் விளையாடுவதில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் தொடர்ந்து அதே அணியில் பயிற்சியாளராகவோ, அலோசகராகவோ அதே அணியில் நீடிக்க வேண்டும் என அந்தந்த அணியின் ரசிகர்கள் தொடங்கி நிர்வாகம் வரை அனைவரும் விரும்புவது இங்கு வாடிக்கையாக உள்ளது.
எதிர்பார்ப்பை கிளப்பிய கொல்கத்தா அணி:
இந்த அடிப்படையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் ஆலோசகராக இருந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னாள் கேப்டனுமான கவுதம் கம்பீரின் ஒப்பந்த காலம் முடிந்ததால், தற்போது மீண்டும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கே திரும்பியுள்ளார்.
கம்பீர் ஆலோசகராக செயல்பட்ட இரண்டு ஆண்டுகளிலும் லக்னோ சிறப்பாக விளையாடியது என்றே சொல்லலாம். 2022 மற்றும் 2023 தொடர்களில் புள்ளிபட்டியலில் மூன்றாவது இடம் பிடித்து பிளே ஆப் வரை சென்றது. எனவே, கொல்கத்தா அணிக்கு கம்பீர் ஆலோசகராக திரும்புவதால், பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த நிலையில், 2024 ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக தக்கவைத்துள்ள வீரர்களின் பட்டியலை கொல்கத்தா அணி இன்று வெளியிட்டுள்ளது. ஷ்ரேயாஸ் ஐயர், நிதிஷ் ராணா, ரிங்கு சிங், ஜேசன் ராய், ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன் உள்ளிட்ட 13 வீரர்களை அந்த அணி தக்க வைத்துள்ளது.
ஸ்கெட்ச் போட்ட கம்பீர்:
அதே சமயத்தில், சகீப் அல் ஹாசன், நாராயண் ஜெகதீசன் உள்ளிட்ட 12 வீரர்களை அணி நிர்வாகம் விடுவித்துள்ளது. கம்பீரின் ஆலோசனையின் பேரிலேயே, அதிக வீரர்களை கொல்கத்தா அணி நிர்வாகம் விடுவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கவுதம் கம்பீர், கொல்கத்தா அணியில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை விளையாடினார். இது கேப்டனாக இருந்த கம்பீர் தலைமையில் கொல்கத்தா அணி இரண்டு முறை அதாவது 2012 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் கோப்பையை வென்றது. அதேபோல் இவரது தலைமையில் மொத்தம் 5 முறை கொல்கத்தா அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இது மட்டும் இல்லாமல் 2014ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் போட்டியில் கொல்கத்தா அணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றார்.
2017ஆம் ஆண்டுக்குப் பின்னர் கொல்கத்தா அணியில் இருந்து வெளியேறிய கம்பீர் சற்று ஏறக்குறைய 8 ஆண்டுகளுக்குப் பின்னர் அணிக்கு திரும்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.