2ஆவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்தியாவின் அட்டவணை அறிவிப்பு !
2ஆவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இந்திய அணியின் அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையேயான முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் சாம்பியனாக வரலாறு படைத்தது. இந்தப் போட்டியில் தோல்வி அடைந்தது தொடர்பாக இந்திய கிரிக்கெட் அணியின் மீது பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். அத்துடன் பலரும் இந்திய அணிக்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் 2ஆவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இந்திய அணியின் அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. ஐசிசியின் 2ஆவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான காலம் ஜூலை 2021 முதல் 2023ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்திய அணி தனது முதல் தொடராக ஆகஸ்ட் மாதம் 4ஆம் தேதி முதல் இங்கிலாந்து அணியுடன் இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது.
இந்தத் தொடருக்கு பிறகு வரும் நவம்பர் மாதம் நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்ய உள்ளது. நியூசிலாந்து அணி இந்தியாவில் 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க உள்ளது. முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு பிறகு இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் தொடர் இதுவாக இருக்கும்.
நியூசிலாந்து தொடருக்கு பின்பு இந்திய கிரிக்கெட் அணி டிசம்பர் மாதம் தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்ய உள்ளது. அங்கு இந்திய அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இதனைத் தொடர்ந்து 2022ஆம் ஆண்டு முதல் பாதியிலேயே இந்திய அணி இலங்கை அணிக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளது.
அந்தத் தொடருக்கு பின்பு ஆஸ்திரேலிய அணி 2022ஆம் ஆண்டு இறுதியில் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து பார்டர்-கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. அதில் 4 டெஸ்ட் போட்டிகள் இடம்பெற உள்ளன. இதைத் தொடர்ந்து இந்திய அணி 2023ஆம் ஆண்டு பங்களாதேஷ் சுற்றுப்பயணம் செய்து அங்கு இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. மொத்தம் இந்திய கிரிக்கெட் அணி 3 உள்நாடு டெஸ்ட் தொடர் மற்றும் 3 வெளிநாட்டு டெஸ்ட் தொடர் என 6 டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் 2ஆவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அட்டவணை:
இங்கிலாந்து vs இந்தியா- (5 டெஸ்ட்)(ஆகஸ்ட் 4 முதல் செப்டமர் 14 வரை)
இந்தியா vs நியூசிலாந்து(2 டெஸ்ட்) (நவம்பர் 2021)
தென்னாப்பிரிக்கா vs இந்தியா (3 டெஸ்ட்)(டிசம்பர் 2021-ஜனவரி 2022)
இந்தியா vs இலங்கை (3 டெஸ்ட்)(2022)
இந்தியா vs ஆஸ்திரேலியா(4 டெஸ்ட்)(2022)
பங்களாதேஷ் vs இந்தியா(2 டெஸ்ட்)(2023)
இவ்வாறு இந்திய அணி மொத்தம் 6 டெஸ்ட் தொடர்களில் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:தொடரும் டெயில்-எண்ட்டர்ஸ் பேட்டிங் சொதப்பல்.. சுதாரிக்குமா இந்தியா அணி?