Rohit Sharma: உலகக்கோப்பையை வென்றது பற்றியெல்லாம் பேசுவது இல்லை - இந்திய கேப்டன் சொல்வது என்ன?
எங்கள் கவனம் எல்லாம் வெற்றி பெறுவதில் தான் இருக்கிறது என்று இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.
கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் தொடங்கியது ஐசிசி உலகக் கோப்பை தொடர். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி, நாளை (நவம்பர் 15) நடைபெறும் அரையிறுதியின் முதல் சுற்றில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
நவம்பர் 16 ஆம் தேதி நடைபெறும் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியுடன் ஆஸ்திரேலிய அணி மோதுகிறது. இதில் எந்த அணி வெற்றி பெற்று உலகக் கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்களிடம் எகிறியுள்ளது.
இச்சூழலில், மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் அரையிறுதி போட்டியில் விளையாடுவதற்காக இரு அணி வீரர்களும் மும்பைக்கு இன்று வந்தனர்.
அப்போது நாங்கள் பிறக்கவில்லை:
இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள். முதல் போட்டியில் இருந்து கடைசி போட்டி வரை வீரர்களிடம் அதிக அழுத்தம் இருக்கும். அதை நாங்கள் கையாண்ட விதம் பாராட்டுக்குரியது. இதைத்தான் நாங்கள் தொடர விரும்புகிறோம். ஹர்திக் பாண்டியா எங்கள் அணியில் இல்லாத நிலையில் அந்த இடத்தை முகமது ஷமி சிறப்பாக செய்து வருகிறார்.
கடந்த 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை இந்திய அணி பெற்ற போது நாங்கள் பிறக்கவில்லை. அதன்பின், இரண்டாவது உலக கோப்பையை 2011 ஆம் ஆண்டு வென்றபோது எங்களில் பாதி பேர் கிரிக்கெட் விளையாடவில்லை.
எங்களை பொறுத்தவரை வீரர்களின் தற்போதைய மனநிலை எப்படி இருக்கிறது என்றால் இன்று என்ன நடக்கும் என்பது பற்றித்தான் அதிகம் இருக்கிறது. எங்கள் அணி வீரர்கள் கடந்த முறை உலகக் கோப்பையை வென்றது அல்லது அதற்கு முன்பாக முதல்முறையாக உலகக் கோப்பையை வென்றது பற்றியெல்லாம் பேசுவதை நான் பார்க்கவில்லை.
எங்கள் கவனம்:
தற்போது நடைபெற உள்ள போட்டியில் எப்படி சிறப்பாக செயல்படுவது, தங்களை எவ்வாறெல்லாம் மேம்படுத்திக்கொள்வது என்று தான் வீரர்களின் கவனம் இருக்கிறது. எங்கள் கவனம் எப்போதும் நிகழ்காலத்தில் இருக்கும். முதல் ஆட்டத்தில் இருந்து, இன்றுவரை வெற்றி பெறுவதில் கவனம் செலுத்தப்படுகிறது.
கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பது உங்களுக்குத் தெரியும். கடந்த காலத்தில் நடந்தவை கடந்த காலங்களிலேயே முடிந்து விடும். இன்று என்ன செய்யலாம் என்பதைப் பற்றிதான் நாங்கள் பேசுகிறோம். 10 ஆண்டுக்கு முன் நடந்தது பற்றியோ அல்லது கடந்த உலகக் கோப்பை பற்றியோ அதிக விவாதம் எங்களிடம் இப்போதைக்கு கிடையாது” என்று ரோகித் சர்மா கூறியுள்ளார்.
மேலும் படிக்க: Virat Kohli: கிரிக்கெட் கடவுள் சச்சினின் மூன்று சாதனைகள்... நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் முறியடிப்பாரா கிங் கோலி?
மேலும் படிக்க: Semi Final World Cup 2023: உலகக் கோப்பை அரையிறுதி வாய்ப்பை அசால்டாக தூக்கிய இந்தியா..! லீக் சுற்றில் நடந்தது என்ன?