ICC T20 World Cup 2021 : "தோனியை ஆலோசகராக நியமித்தது நல்ல முடிவுதான்... ஆனால்..." - கபில்தேவ் பேட்டி
இந்திய கிரிக்கெட் அணியின் டி20 உலககோப்பை அணிக்கான ஆலோசகராக தோனி நியமிக்கப்பட்டது குறித்து கபில்தேவ் கருத்து தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டித் தொடர் வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இந்திய ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இந்திய அணியின் ஆலோசகராக முன்னாள் இந்திய கேப்டனும், மூன்று உலககோப்பைகளை வென்றவருமான எம்.எஸ்.தோனியையும் நியமித்து இந்திய கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது. மீண்டும் இந்திய அணிக்குள் தோனி நுழைந்ததை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில், தோனியின் நியமனம் குறித்த முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டனும், முதல் உலககோப்பையை வென்ற இந்திய கேப்டனுமாகிய கபில்தேவ் கருத்து தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கபில்தேவ் இதுதொடர்பாக பேசியதாவது, “ இந்திய அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருப்பது நல்ல முடிவு. ஒரு கிரிக்கெட் வீரர் ஓய்வு பெற்றவுடன் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு பிறகுதான் அவர் மீண்டும் அமைப்பிற்கு வர வேண்டும் என்று நான் எப்போதும் எண்ணுவேன். ஆனால், உலக கோப்பை வர உள்ளதால் இதுவொரு முக்கிய நிகழ்வு. ரவிசாஸ்திரியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் இது மிகவும் முக்கியமானதே.
நான் துபாயில் இருந்தபோது தோனியிடம் இதுதொடர்பாக பேசினேன். அவர் டி20 உலககோப்பைக்கு மட்டுமே ஆலோசகராக செயல்பட ஒப்புக்கொண்டுள்ளார். நானும் என்னுடைய ஆடியவர்களுடன் இதுதொடர்பாக விவாதித்தேன். அவர்களும் ஒரே கருத்தை தெரிவித்தனர். நான் கேப்டன், துணை கேப்டன் மற்றும் ரவிசாஸ்திரியிடமும் பேசினேன். அதனால்தான் நாங்கள் ஒரே முடிவுக்கு வந்தோம்.
இன்றைய கிரிக்கெட் வீரர்கள் முற்றிலும் மாறுபட்ட சிந்தனை கொண்டவர்கள். அவர்களுக்கு ஏதாவது கூற வேண்டும் என்று விரும்பினால், உங்களால் முடிந்தவரை ஓடுங்கள். உங்கள் உடல்திறனை வளர்த்துக் கொள்ளுங்கள். வலைப்பயிற்சியிலும், போட்டிகளிலும் முடிந்தவரை பந்துவீசவும்.
இன்றைய கிரிக்கெட் வீரர்கள் தங்களது பெரும்பாலான நேரங்களை ஜிம்களில் செலவிடுகின்றனர். ஆனால், ஜிம் என்பது மழைக்காலங்களில் அல்லது உங்களது உடல் வலுவை வளர்ப்பதற்கு அதுவும் ஒரு வாய்ப்புதான். மைதானத்தில் ஓடுவதை காட்டிலும் ஜிம் சிறப்பாக இருந்திடாது. “
இவ்வாறு அவர் கூறினார்.
கபில்தேவ் இந்தியாவின் தலைசிறந்த ஆல்ரவுண்டராக வலம் வந்தவர். இந்திய கிரிக்கெட்டை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச்சென்றதில் கபில்தேவின் பங்கு மிகவும் முக்கியமானது. கபில்தேவிற்கு பிறகு இந்திய அணியில் அவரது இடத்தை நிரப்ப 25 ஆண்டுகள் ஆகியும் இதுவரை சரியான வீரர் அமைந்ததில்லை.
யுவராஜ் சிங், சேவாக், சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் பேட்டிங்குடன் சுழற்பந்து வீச்சில் சிறப்பாக வீசி ஆல்ரவுண்டராக இருந்தாலும், வேகப்பந்து வீச்சுடன் கூடிய ஆல்ரவுண்டர் இதுவரை எதிர்பார்த்த அளவிற்கு அமையவில்லை என்பதே உண்மை. தற்போது, ஹர்திக் பாண்ட்யா அந்த இடத்தை அவ்வப்போது பூர்த்தி செய்து வருகிறார்.