Neeraj Chopra: இறுதிப்போட்டிக்கு முன்பே எலும்பு முறிவு - வெள்ளிப்பதக்கம் மூலம் நாட்டிற்கு பெருமை சேர்த்த நீரஜ் சோப்ரா
Neeraj Chopra: டைமண்ட் லீக் 2024 ஈட்டி எறிதல் போட்டியின் இறுதி ஆட்டத்தில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா கையில் எலும்பு முறிவுடன் பங்கேற்று பதக்கம் வென்றுள்ளார்.
Neeraj Chopra: டைமண்ட் லீக் 2024 ஈட்டி எறிதல் போட்டி தொடர்பாக, இந்திய வீரர் நீரஜ் சோப்ரா உருக்கமான பதிவு ஒன்ற வெளியிட்டுள்ளார்.
எலும்பு முறிவுடன் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா:
நீரஜ் சோப்ரா வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “ 2024 சீசன் முடிவடையும் போது, இந்த ஆண்டில் நான் கற்றுக்கொண்ட அனைத்தையும் திரும்பிப் பார்க்கிறேன். முன்னேற்றம், பின்னடைவுகள், மனநிலை மற்றும் பலவற்றைப் திரும்பி பார்க்கிறேன். திங்கட்கிழமை, நான் பயிற்சியின்போது காயம் அடைந்தேன் மற்றும் எக்ஸ்ரே என் இடது கையில் நான்காவது மெட்டாகார்பல் முறிந்திருப்பதைக் காட்டியது. இது மற்றொரு வேதனையான சவாலாக இருந்தது. ஆனால் எனது குழுவின் உதவியால் பிரஸ்ஸல்ஸில் (டைமண்ட் லீக் 2024) பங்கேற்க முடிந்தது. இது இந்த ஆண்டின் கடைசி போட்டியாகும், மேலும் எனது சீசனை டிராக்கில் முடிக்க விரும்பினேன். எனது சொந்த எதிர்பார்ப்புகளை என்னால் பூர்த்தி செய்ய முடியவில்லை என்றாலும், இது நான் நிறைய கற்றுக்கொண்ட பருவமாக உணர்கிறேன். நான் இப்போது திரும்பி வரத் தீர்மானித்துள்ளேன், முழு உடல் தகுதியுடன் தொடர்ந்து முன்னேறி செல்லவும் தயாராக இருக்கிறேன். உங்கள் ஊக்கத்திற்கு உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். 2024 என்னை ஒரு சிறந்த விளையாட்டு வீரராகவும், நபராகவும் ஆக்கியுள்ளது. 2025ல் சந்திப்போம்.” என நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
வெள்ளிப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா:
டைமண்ட் லீக் 2024ல் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் இந்திய தடகள வீரர், நிரஜ் சோப்ரா 2வது இடத்தைப் பிடித்தார். முதல் இரண்டு முயற்சிகளில் சற்று பின் தங்கினாலும், தனது மூன்றாவது முயற்சியில் 87.86 மீ தூரத்திற்கு ஈட்டியை எறிந்தார். இது நேற்றைய போட்டியில் அவரது சிறப்பான வெளிப்பாடாக அமைந்தது. ஆனால், கிரனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 87.87 மீ தூரத்திற்கு ஈட்டியை எறிந்து முதலிடம் பிடித்தார். அதாவது வெறும் 0.01 மீ வித்தியாசத்தில், நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கத்தை இழந்தார்.
கடந்த டைமண்ட் லீக் மற்றும் ஒலிம்பிக்ஸில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று அசத்தி இருந்தார். ஆனால், நடப்பாண்டில் நடந்து முடிந்த ஒலிம்பிக்ஸ் மற்றும் டைமண்ட் லீக் ஆகிய இரண்டிலுமே நீரஜ் சோப்ரா வெள்ளி மட்டுமே வென்று, தங்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டார். எலுமுபு முறிவுடன் பங்கேற்று வெள்ளிப்பதக்கம் வென்ற, நிரஜ் சோப்ராவ்ற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். அதேநேரம், காயத்திலிருந்து விரைந்து மீண்டு வரவும் நீரஜ் சோப்ராவிற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.