WTC Final: பவுமா பாய்ஸ்னா சும்மாவா! இந்தியா, ஆஸி.க்கு ஆப்பு வைக்கும் தென்னாப்பிரிக்கா?
இலங்கை அணியுடன் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்குச் சென்றுள்ளதால் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் சுவாரஸ்யத்தை அதிகரிப்பதற்காக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை ஐசிசி அறிமுகப்படுத்தியுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி அடுத்தாண்டு நடைபெற உள்ளது. இறுதிப்போட்டிக்குச் செல்லப்போவது யார்? என்பதை தீர்மானிக்கும் போட்டித் தொடர்கள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்:
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குச் செல்லும் அணி சதவீதத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டு வருகிறது. இறுதிப்போட்டிக்குச் செல்லும் அணிகளாக இந்தியா – ஆஸ்திரேலியா இருந்து வந்த நிலையில், தற்போது இரு அணிகளுக்கும் புது சவாலாக தென்னாப்பிரிக்கா உருவெடுத்துள்ளது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரை 3-0 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி ஆஸ்திரேலியா 4-0 என்ற கணக்கில் தொடரை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஆடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியை இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்தியா முதலிடத்திற்கு முன்னேறியது. ஆஸ்திரேலியா தற்போது 2வது இடத்தில் இருந்தது.
ட்விஸ்ட் வைத்த தென்னாப்பிரிக்கா:
இந்த நிலையில், இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 233 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தென்னாப்பிரிக்கா அணியின் இந்த பிரம்மாண்ட வெற்றியால் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கான தரவரிசைப் பட்டியலில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இதுவரை இரண்டாவது இடத்தில் இருந்த ஆஸ்திரேலியா 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்கா அணி 59.26 சதவீதம் பெற்று இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்திய அணி 61.11 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது. புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடத்திற்கு இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் மாறி, மாறி வந்து கொண்டிருக்கிறது.
நெருக்கடியில் இந்தியா, ஆஸ்திரேலியா:
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற இந்தியா அடுத்து வரும் 4 போட்டிகளில் 3 போட்டிகளில் கட்டாயம் வெற்றி பெறுவதுடன் ஒரு போட்டியை டிரா செய்ய வேண்டும். தொடரை 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றால் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு செல்வது உறுதியாவதுடன், ஆஸ்திரேலியாவிற்கு பெரும் நெருக்கடி ஏற்படும்.
தென்னாப்பிரிக்கா அணி இலங்கை அணியை 2-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்வதுடன், பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரையும் வெற்றி பெற்றால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது மிக எளிதாகும். அவ்வாறு தென்னாப்பிரிக்கா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு தற்போது பிரகாசமாக இருப்பதால் இந்திய அணிக்கும், ஆஸ்திரேலிய அணிக்கும் அடுத்தடுத்த போட்டிகள் சவாலாக மாறியிருக்கிறது.
ஆஸ்திரேலிய மைதானம் இந்திய அணிக்கு சவாலானதாக இருக்கும் என்றாலும், முதல் போட்டியில் பெற்ற வெற்றி இந்திய அணிக்கு உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அடுத்தடுத்த போட்டிகளில் கட்டாயம் வெற்றி பெற இரு அணிகளும் முனைப்பு காட்டும்.