ODI World Cup : 2019, 2023 உலகக்கோப்பைகளில் இந்திய அணியின் மாற்றங்கள் என்ன? தொடரும் நட்சத்திரங்கள் யார்?
2019ம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியிலிருந்து, நடப்பாண்டு உலகக்கோப்பை தொடருக்கான அணியில் 7 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
கடந்த உலகக்கோப்பை தொடருடன் ஒப்பிடுகையில் நடப்பு உலகக்கோப்பை தொடரில், இந்திய அணியில் என்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
ஐசிசி உலகக்கோப்பை தொடர்:
ஐசிசியின் 13வது ஒருநாள் உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் 5ம் தேதி இந்தியாவில் தொடங்கி நடைபெற உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் ரவுண்ட் - ராபின் முறையில், நவம்பர் 19ம் தேதி வரையில் 48 போட்டிகளாக நடைபெற உள்ளன. இந்திய அணி தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ள உள்ளது. இதனிடையே, உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் அணிகள், தங்களது வீரர்களின் விவரங்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவும் 15 பேர் கொண்ட உலகக்கோப்பை தொடருக்கான அணியை அறிவித்துள்ளது.
இந்திய அணி விவரம்:
15 பேர் கொண்ட இந்த அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக செயல்பட உள்ளார். அதில், ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் , ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், முகமது ஷமி, அக்சர் படேல், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அதன் அடிப்படையில் நடப்பு உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில், கடந்த உலகக்கோப்பை தொடருக்கான அணியில் இருந்து 7 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
01. விஜய் சங்கருக்கு மாற்றாக ஷர்தூல் தாக்கூர்
கடந்த உலகக்கோப்பை தொடரில் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் என்ற அடிப்படையில், அம்பத்தி ராயுடுவிற்கு பதிலாக விஜய் சங்கர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால், காயம் காரணமாக தொடரிலிருந்து பாதியிலேயே வெளியேறினார். இந்நிலையில், அவருக்கான மாற்று வீரராக தான் நடப்பாண்டு உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் ஷர்தூல் தாக்கூர் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் பாண்டியாவுடன் சேர்ந்து மற்றொரு வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக அணியில் செயல்பட உள்ளார்.
02. சாஹலுக்கு மாற்றாக களமிறங்கும் அக்சர் படேல்:
யுஸ்வேந்திர சாஹல் 2019 உலகக் கோப்பையில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, 4/51 என்ற சிறந்த பந்துவீச்சையும் தேர்வு செய்தார். இருப்பினும், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 88 ரன்களை விட்டுக் கொடுத்து, உலகக் கோப்பையில் ஒரு போட்டியில் அதிக ரன்களை கொடுத்த இந்திய பந்துவீச்சாளர் என்ற மோசமான சாதனைய்யை படைத்தார். இதையடுத்து. கடந்த இரண்டு டி20 உலகக் கோப்பைகளுக்கும் அவர் தேர்வு செய்யப்படவில்லை. இந்நிலையில், ஒருநாள் உலகக்கோப்பை தொடரிலும் சாஹலுக்கு பதிலாக அக்ஷர் படேல் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஜடேஜா உடன் சேர்ந்து கூடுதல் சுழற்பந்து ஆல்ரவுண்டராக அக்ஷர் படேல் செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
03. புவனேஷ்வர்குமாருக்கு மாற்றாக முகமது சிராஜ்:
இந்திய அணியின் முக்கிய வேகப்பந்துவீச்சாளராக இருந்த புவனேஷ்வர் குமார், 2019ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் 6 போட்டிகளில் 10 விக்கெட்டுகளை சாய்த்தார். ஆனால், கடந்த சில காலங்களாக தொடர்ந்து காயத்தால் அவர் அவதிப்பட்டதால், இந்திய அணிக்காக புவனேஷ்வர் குமாரால் தொடர்ந்து விளையாட முடியவில்லை. அந்த இடத்தை தான் முகமது சிராஜ் நிரப்பியுள்ளார். தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருவதன் மூலம் உலகக்கோப்பை தொடருக்கும் தேர்வாகியுள்ளார். அண்மையில் நடந்து முடிந்த ஆசியக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில், இலங்கைக்கு எதிராக சிராஜ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
04. சூர்யகுமார் யாதவ் இன், மயங்க் அகர்வால் அவுட்:
கடந்த தொடரில் காயத்தால் பாதியில் வெளியேறிய விஜய் சங்கருக்கு மாற்றாக, மயங்க் அகர்வால் இந்திய அணியில் இடம்பெற்றார். ஆனால், அவர் ஒரு போட்டியில் கூட களமிறங்கவில்லை. இந்நிலையில் அவருக்கு மாற்றாக தான், நடப்பு உலகக்கோப்பை தொடரில் சூர்யகுமார் யாதவ் இடம்பெற்றுள்ளார். பினிஷர் ரோலில் இவர் முக்கிய பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
05. தினேஷ் கார்த்திக் இடத்த நிரப்பு இஷான் கிஷன்:
2019 உலகக் கோப்பையில் எம்எஸ் தோனியின் பேக்அப் விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக் இருந்தார். 3 போட்டிகளில் விளையாடினாலும் அவர் பெரிய தாக்கம் எதையும் ஏற்படுத்தவில்லை. இதனால் அவரது இடத்திற்கு இந்த முறை இஷான் கிஷான் மற்றும் கே.எல் ராகுல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இருவரும் சிறப்பான ஆட்டத்த வெளிப்படுத்தி வருவது, இந்திய அணிக்கு சாதகமாக அமைந்துள்ளது.
06.ரிஷப் பந்திற்கு பதிலாக ஷ்ரேயாஸ் அய்யர்
சொந்த மண்ணில் நடைபெற உள்ள உலகக்கோப்பையில் கேம் சேஞ்சராக இருப்பார் என எதிர்பார்க்கப்பட ரிஷப் பந்த், விபத்தில் சிக்கியதால் இந்திய அணியில் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக மற்றொரு டெல்லி வீரரான ஸ்ரேயாஸ் அய்யர், இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். அறுவை சிகிச்சைக்குப் பிறகு, சர்வதேச போட்டிகளுக்கு திரும்பிய வீரர் நடுகள வீரராக இந்திய அணிக்கு வலுசேர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
07. ஷிகர் தவானுக்கு பதிலாக சுப்மான் கில்
ஐசிசி தொடர்களில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வந்த தவான், கடந்த தொடரிலும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் 117 ரன்கள் சேர்த்தார். ஆனால், அதேபோட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக அந்த தொடரில் இருந்தே வெளியேறினார். அதன் பிறகு தவானின் ஃபார்ம் மோசமாக அவருக்கு மாற்றாக, இளம் வீரரான சுப்மன் கில் இந்திய அணியில் இடம்பெற்றார். வாய்ப்பை பயன்படுத்தி சிறப்பாக செயல்பட்ட சுப்மன் கில், தற்போது உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் இடம்பெற்றுள்ளார்.