IND vs ZIM 3rd T20: இன்று 3வது டி20! வெற்றியை தொடருமா இந்தியா? தோல்விக்கு பழிதீர்க்குமா ஜிம்பாப்வே?
இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் மோதும் 3வது டி20 போட்டி இன்று ஹராரேவில் மாலை நடக்கிறது.
டி20 உலகக்கோப்பையை இந்திய அணி கைப்பற்றிய பிறகு, இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. சுப்மன்கில் தலைமையில் ஐ.பி.எல். தொடரில் அசத்திய இந்திய இளம் வீரர்களை கொண்டு இந்திய அணி களமிறங்கியுள்ளது.
இந்தியா - ஜிம்பாப்வே:
ஹராரேவில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இதையடுத்து, நடைபெற்ற 2வது டி20 போட்டியில் இந்திய அணி தனது ஃபார்முக்கு திரும்பியது. இளம் வீரர் அபிஷேக் சர்மா 47 பந்துகளில் சதம் அடித்து மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ருதுராஜ் 77 ரன்களும், ரிங்குசிங் 48 ரன்களும் எடுத்து இந்திய அணி இமாலய ரன்களை குவிக்க உதவினர். இதனால், அந்த போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் இருக்கும் சூழலில், இன்று இரு அணிகளும் மோதும் 3வது டி20 போட்டி நடக்கிறது. ஹராரேவில் நடக்கும் இந்த போட்டியில் கடந்த போட்டியின் வெற்றியை தக்க வைக்க இந்திய அணி முழு வீச்சில் களமிறங்கும். அதேநேரத்தில், கடந்த போட்டியின் தோல்விக்கு பழி தீர்க்கும் வகையில் ஜிம்பாப்வே வீரர்கள் களமிறங்குவார்கள். இதனால் இந்த போட்டியிலும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கலாம்.
அதிரடி காட்டுமா இந்திய இளம் படை? நெருக்கடி தருமா ராசா படை?
இந்திய அணியின் டாப் ஆர்டர்கள் சுப்மன்கில், அபிஷேக் சர்மா, ருதுராஜ் கெய்க்வாட் நல்ல ஃபார்மில் இருப்பது இந்திய அணிக்கு பலம் ஆகும். முதல் டி20யில் சொதப்பிய ரியான் பராக், துருவ் ஜோரலும் அதிரடியாக ஆட வேண்டியது அவசியம். ரிங்கு சிங் தனது அதிரடியை இந்த போட்டியிலும் தொடர்ந்தால் இந்திய அணி இமாலய ரன்களை குவிக்கும்.
அதேபோல, ஜிம்பாப்வே அணியின் டாப் ஆர்டர்களான இன்னோசென்ட், மாதவரே, பென்னட், மையர்ஸ் அதிரடியாக ஆட வேண்டியது அவசியம். கடந்த போட்டியில் அதிரடி காட்டிய பென்னட் இன்னும் சற்று நேரம் கூடுதலாக அதிரடி காட்டியிருந்தால் அந்த அணிக்கு சாதகமாக ஆட்டம் மாறியிருக்கலாம். கேப்டன் சிக்கந்தர் ராசா ஃபார்முக்கு திரும்ப வேண்டியது அவசியம்.
பந்துவீச்சு பலம்:
இந்திய அணிக்கு பலமாக பந்துவீச்சு அமைந்துள்ளது. முகேஷ்குமார், ஆவேஷ்கான் வேகத்தில் பக்கபலமாக உள்ளனர். அபிஷேக் சர்மா, ரவி பிஷ்னோய், வாஷிங்டன் சுந்தர் சுழலில் முக்கிய பங்காற்றுகின்றனர். குறிப்பாக, பிஷ்னோய் சுழலில் அசத்துவது இந்திய பந்துவீச்சுக்கு பலமாகும்.
ஜிம்பாப்வே அணியைப் பொறுத்தமட்டில் பென்னட், முசர்பானி, சதாரா, சிக்கந்தர் ராசா சிறப்பாக பந்துவீசினால் இந்திய அணிக்கு நெருக்கடி ஏற்படும். இதனால், கடந்த போட்டியில் செய்த தவறை ஜிம்பாப்வே அணி இந்த போட்டியில் செய்யாமல் தவிர்க்க வேண்டியது அவசியம். இந்த போட்டி இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது.