IND vs SL, 1st Test, Mohali: இலங்கையை சுருட்டி இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியா..! அஸ்வின், ஜடேஜா அபாரம்..!
IND vs SL, Innings Highlight: பஞ்சாபில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.
இந்தியா மற்றும் இலங்கை அணி மோதிய முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மொகாலியில் கடந்த 4-ந் தேதி தொடங்கியது. இந்த போட்டியின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணியினர் போட்டியின் மூன்றாவது நாளான இன்றே வெற்றிக்கனியை பறித்துள்ளனர். இந்திய அணி இந்த டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் இரண்டாவது நாளான நேற்று இலங்கை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில், போட்டியின் மூன்றாவது நாளான இன்று ஆட்டம் தொடங்கியது முதலே இந்திய பந்துவீச்சாளர்கள் அபாரமாக ஆதிக்கத்தை செலுத்தினர். களத்தில் நீண்ட நேரமாக நீடித்து வந்த நிசங்கா – அசலங்கா ஜோடியை பிரித்தனர். பும்ரா பந்துவீச்சில் அசலங்கா 24 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அவர் ஆட்டமிழந்த பிறகு அந்த அணியின் விக்கெட் சீட்டுக்கட்டு போல சரியத் தொடங்கியது. அடுத்து வந்த விக்கெட் கீப்பர் டிக்வெல்லா 2 ரன்னில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த லக்மல், எம்புல்டேனியா, விஸ்வா பெர்ணாண்டோ மற்றும் லகிரு குமாரா டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தனர், இதனால், முதல் இன்னிங்சில் இலங்கை அணி 174 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பதும் நிசங்கா மட்டும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 133 பந்தில் 11 பவுண்டரியுடன் 61 ரன்களை எடுத்தார். இந்திய அணியில் 175 ரன்கள் குவித்த ஜடேஜா சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார்.
இதனால், பாலோ ஆன் ஆகிய இலங்கை அணி தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்து ஆடியது. இந்த போட்டியில் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலே தொடக்க வீரர் திரிமன்னே டக் அவுட்டாகி வெளியேறினார். முதல் இன்னிங்சில் சிறப்பாக ஆடிய பதும் நிசங்கா 6 ரன்களில் அஸ்வின் பந்தில் அவுட்டானார். பின்னர், கேப்டன் கருணரத்னேவும் 27 ரன்களில் ஆட்டமிழக்க, அந்த 45 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. பின்னர், மேத்யூசும், டி சில்வாவும் சிறிது நேரம் நீடித்து நின்றனர். டி சில்வாவும் 30 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த அசலங்கா அதிரடியாக ஆடினர். அவர் 9 பந்தில் 2 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 20 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் கோலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
121 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் விழுந்ததால் இலங்கை அணியினர் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடினர். அந்த அணியின் விக்கெட் கீப்பர் டிக்வெல்லா நிதானமாக ஆடினார். ஆனால், அவருக்கு சரியான ஒத்துழைப்பு அளிக்காமல் லக்மல், எம்புல்டேனியா, பெர்ணான்டோ, லகிரு குமாரா சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால், இலங்கை அணி 176 ரன்களுக்கு இரண்டாவது இன்னிங்சில் சுருண்டது. இதனால், இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இரண்டாவது இன்னிங்சில் இந்திய பந்துவீச்சாளர் அஸ்வினும், ஜடேஜாவும் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர். முகமது ஷமி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த போட்டியில் 4 விக்கெட் கைப்பற்றியதன் மூலம் அஸ்வின் டெஸ்டில் கபில்தேவை காட்டிலும் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்