"நாடு கடத்துங்க" டிரம்ப் ஸ்டைலில் சட்டவிரோத குடியேறிகளுக்கு குறி வைத்த அமித் ஷா
அமெரிக்க அதிபர் டிரம்ப் பாணியில் சட்டவிரோத குடியேறிகளை அடையாளம் கண்டு, நாட்டை விட்டு வெளியேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார்.

சட்டவிரோத குடியேறிகளை அடையாளம் கண்டு, நாட்டை விட்டு வெளியேற்றும்படி டெல்லி காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார். அமெரிக்க அதிபராக சமீபத்தில் பதவியேற்ற டிரம்ப், சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்திய நிலையில், அதே பாணியை கையில் எடுத்துள்ளார் அமித் ஷா.
சட்டவிரோத குடியேறிகளுக்கு குறி:
இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றது முதல், பல்வேறு அதிரடிகளை அரங்கேற்றி வருகிறார். அதில் முக்கியமானது, சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறி வசிப்பவர்களை வேட்டையாடி, அவரவர் நாடுகளுக்கு திருப்பி அனுப்புவது. அந்த வகையில், சமீபத்தில், இந்தியாவைச் சேர்ந்த 205 பேர் அமெரிக்காவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டனர்.
இந்த நிலையில், டிரம்பின் அதே பாணியை கையில் எடுத்துள்ளார் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. டெல்லி காவல்துறை உயர் அதிகாரிகள் உடனான கூட்டத்தில், "சட்டவிரோத குடியேறிகளை அடையாளம் கண்டு, நாடு கடத்த வேண்டும்" என அமித் ஷா தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத குடியேறிகளின் ஊடுருவல் பிரச்னை தேசிய பாதுகாப்புடன் நேரடியாக தொடர்புடையது. இதை தீவிரமாக கையாள வேண்டும். டெல்லியில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை அடையாளம் கண்டு நாடு கடத்த வேண்டும்.
அதிரடி காட்டும் அமித் ஷா:
சட்டவிரோத குடியேறிகள் தங்குவதற்கு வசதி ஏற்படுத்தி தந்து, ஆவணங்களைப் பெற உதவும் முழு நெட்வொர்க்கிற்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். டெல்லியில் சட்டவிரோத குடியேறிகளின் ஆக்கிரமிப்பு பிரச்னையை புதிய அரசாங்கம் இரும்புக்கரம் கொண்டு கையாளும் என்று டெல்லி குடிமக்கள் உறுதியாக நம்ப வேண்டும்.
டெல்லி - என்.சி.ஆர் பகுதியில் செயல்படும் கும்பல்களை ஒழிப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். குற்றங்களைக் கட்டுப்படுத்துவதில் தொடர்ந்து மோசமாகச் செயல்படும் காவல் நிலையங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்றார்.
இந்தக் கூட்டத்தில் புதிதாக பதவியேற்ற ரேகா குப்தா, டெல்லி உள்துறை அமைச்சர் ஆஷிஷ் சூட், டெல்லி காவல் ஆணையர் சஞ்சய் அரோரா மற்றும் பிற மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதையும் படிக்க: TN Govt School Admission: அரசுப்பள்ளிகளில் நாளை முதல் மாணவர் சேர்க்கை; என்னென்ன வசதிகள்? பட்டியலிட்ட பள்ளிக் கல்வித்துறை!

