IND vs SA 3rd T20: இன்று 3வது டி20! கம்பேக் தருமா சூர்யகுமார் படை? முட்டுக்கட்டை போடுமா தென்னாப்பிரிக்கா?
இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் 3வது டி20 போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில் வெற்றியைப் பெற இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 போட்டிகளில் ஆடி வருகிறது. இரு அணிகளும் மோதிய முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.
இன்று 3வது டி20:
மொத்தம் 4 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் தொடரில் முன்னிலைப் பெறப்போவது யார்? என்பதை தீர்மானிக்கும் 3வது டி20 போட்டி இன்று நடக்கிறது. கடந்த போட்டியில் பந்துவீச்சு மைதானத்தில் நன்றாக எடுபட்டதால் இரு அணிகளும் பேட்டிங்கில் திணறினர். ஆனாலும் ஸ்டப்ஸின் சிறப்பான ஆட்டத்தால் தென்னாப்பிரக்கா அணி அபார வெற்றி பெற்றது.
இந்திய அணியைப் பொறுத்தவரை தொடக்க வீரர்களாக சாம்சன் – அபிஷேக் சர்மா ஆடி வருகின்றனர். சாம்சன் முதல் போட்டியில் சதம் விளாசிய நிலையில், கடந்த போட்டியில் டக் அவுட்டானார். அபிஷேக் சர்மா தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்திய அணியின் வருங்கால தொடக்க வீரருக்கான வரிசையில் இருக்கும் அவர் தொடர்ந்து சொதப்பி வருவது கவலை அளிக்கும் விதமாக உள்ளது.
கம்பேக் தருமா இந்திய பேட்டிங்?
இதனால், இன்றைய போட்டியில் அவர் பேட்டிங்கில் ஃபார்மிற்கு திரும்ப வேண்டியது அவசியம் ஆகும். கேப்டன் சூர்யகுமார் யாதவ் கடந்த போட்டியில் சொதப்பினார். அவரிடம் இருந்து நீண்ட இன்னிங்சை ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். மிடில் ஆர்டரில் திலக் வர்மா சிறப்பாக ஆட வேண்டியது அவசியம் ஆகும். ஹர்திக் பாண்ட்யா தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். இந்திய அணியின் புது ஃபினிஷர் ரோலை செய்து வரும் ரிங்குசிங் மீண்டும் ஃபார்முக்கு திரும்ப வேண்டியது அவசியம் ஆகும்.
தென்னாப்பிரிக்க அணியைப் பொறுத்தவரை ரியான்- ஹென்ட்ரிக்ஸ் நல்ல தொடக்கத்தை அளித்தால் இந்திய அணிக்கு சவால் ஆகும். கேப்டன் மார்க்ரம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் இந்திய அணிக்கு மிகப்பெரிய சவால் ஆகும். கடந்த போட்டியில் தனி ஆளாக போராடி தென்னாப்பிரிக்காவை வெற்றி பெற வைத்த ஸ்டப்ஸ் இந்த போட்டியிலும் சிறப்பாக ஆடினால் தென்னாப்பிரிக்காவிற்கு கூடுதல் பலமாகும். கிளாசென் ஃபார்முக்கு திரும்பினால் இந்திய அணிக்கு மிகப்பெரிய சவால் காத்திருக்கும்.
முன்னிலைப் பெறப்போவது யார்?
பந்துவீச்சைப் பொறுத்தவரை இந்திய அணியில் அர்ஷ்தீப்சிங் கட்டுக்கோப்பாக வீச வேண்டியது அவசியம் ஆகும். ஆவேஷ்கான், ஹர்திக் பாண்ட்யா விக்கெட்டுகள் வீழ்த்த வேண்டியது அவசியம் ஆகும். கடந்த போட்டியில் சுழலில் அசத்திய வருண் சக்கரவர்த்தி, பிஷ்னோய் இந்த போட்டியிலும் சுழலில் அசத்த வேண்டியது அவசியம் ஆகும்.
தென்னாப்பிரிக்க அணியில் ஜான்சென், கோட்ஸி, சிமலென், மகாராஜ் கட்டுக்கோப்பாக பந்துவீசினர். இந்த போட்டியிலும் அவர்கள் கட்டுக்கோப்பான பந்துவீச்சைத் தொடர்ந்தால் இந்திய அணிக்கு சவால் நிறைந்திருக்கும். இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெறவே முனைப்பு காட்டும். ஐபிஎல் ஏலம் நெருங்கும் வேளையில் இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டவே விரும்புவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. செஞ்சுரியன் மைதானத்தில் நடக்கும் இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு நடைபெற உள்ளது.