Hardik Pandya Comeback: 4 மாதங்களுக்கு பின் மீண்டும் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா...ரசிகர்கள் உற்சாகம்!
ஒரு நாள் உலகக் கோப்பைக்கு பின்னர் இந்திய அணி வீரர் ஹர்திக் பாண்டியா DY பாட்டீல் T20 கோப்பையில் களம் இறங்கியுள்ளார்.
ஐ.பி.எல் 2024:
சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல் லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானது. அந்த அளவிற்கு ஐ.பி.எல் போட்டிகளில் சுவரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடும் 17வது சீசன் நடைபெற உள்ளது.
இந்நிலையில் ஐ.பி.எல் தொடரின் அட்டவணை பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியானது. அதன்படி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் விளையாட உள்ளன. இதில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் போட்டி மார்ச் 24 ஆம் குஜராத் மாநிலம் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. முன்னதாக, இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு இப்போதே ரசிகர்களிடம் எகிறியுள்ளது. அதற்கான காரணம் என்னவென்றால் கடந்த முறை குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா இந்த முறை மும்பை இந்தியன்ஸ் அணியை கேப்டன் பொறுப்பில் இருந்து வழிநடத்த இருக்கிறார்.
மீண்டும் களத்திற்கு வந்த ஹர்திக் பாண்டியா:
முன்னதாக கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியின் போது வங்கதேச அணிக்கு எதிரான போட்டியின் போது கணுக்காலில் ஏற்பட்ட காயத்தால் அந்த தொடரில் இருந்து விலகினார். அந்த வகையில் கடந்த 4 மாதங்களாக நடைபெற்ற சர்வதேச போட்டிகளில் ஹர்திக் பாண்டியா விளையாடவில்லை. காயம் காரணமாக ஓய்வில் இருந்த அவர் அதில் இருந்து குணமடைந்து தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
அதன்படி பயிற்சி செய்யும் வீடியோக்களையும் சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். அந்தவகையில் கடந்த வாரம் தனது உடற்தகுதியை மதிப்பிடும் வகையில் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்குத் சென்று அங்கு உடற்தகுதி தேர்வை வெற்றிகரமாக முடித்தார்.
HARDIK PANDYA IS BACK....!!!!
— Johns. (@CricCrazyJohns) February 26, 2024
- Hardik is leading Reliance 1 in the DY Patil T20 tournament. pic.twitter.com/hKnuArA5Wu
இந்நிலையில் தான் மும்பையில் நடைபெற்று வரும் DY பாட்டீல் T20 கோப்பையில் பங்கேற்று விளையாடியுள்ளார். இதன் மூலம் அவர் கடந்த 4 மாதங்கள் கழித்து களத்தில் இறங்கியுள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். அதேபோல் இஷான் கிஷான் மற்றும் ராகுல் திரிபாதி ஆகியோரும் விளையாடி வருகின்றனர். மார்ச் 9 ஆம் தேதி முடிவடையும் DY பாட்டீல் T20 போட்டியில் பல முன்னணி இந்திய வீரர்கள் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Virat Kohli IPL Record: IPL-ல் ஒரு சீரிஸில் அதிக ரன்களை விளாசிய வீரர்! விராட் கோலியின் சாதனை!
மேலும் படிக்க: Dhruv Jurel: அறிமுக டெஸ்ட்.. ஆட்டநாயகன் விருது.. அசத்திய துருவ் ஜூரல்..