(Source: ECI/ABP News/ABP Majha)
DMDK Candidate Anand: நான் தி.மு.க.வில் இணைகிறேனா? - தே.மு.தி.க. வேட்பாளர் ஆனந்த் பரபரப்பு அறிக்கை!
நான் திமுகவில் இணையப்போவதாக வரும் தகவல் பொய்யானது - தேமுதிக வேட்பாளர் எஸ்.ஆனந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஈரோடு இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெற உள்ள நிலையில், தற்போதே அரசியல் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.
ஈரோடு இடைத்தேர்தல்
ஈரோடு இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27-ந் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரையில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த இடைத்தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் ஆனந்த் என்பவர் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில், தே.மு.தி.க. வேட்பாளர் தி.மு.க.வில் இணையப்போவதாக தகவல்கள் வெளிவந்தது. இதுதொடர்பாக, தே.மு,தி.க. வேட்பாளர் ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
“ தே.மு.தி.க. ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளரும், கிழக்கு தொகுதி தே.மு.தி.க. வேட்பாளருமான எஸ்.ஆர். ஆனந்தாகிய நான், தி.மு.க. கட்சியில் இணையப் போவதாக இன்று தினசரி நாளிதழில் செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. நடைபெற உள்ள இடைத்தேர்தலில் ஆதாயம் தேடுவதற்காக இதுபோன்ற தவறான செய்தி பரப்பி, ஈரோடு மக்கள் என்மீது வைத்துள்ள நம்பிக்கையை கெடுக்கின்ற எண்ணத்தோடு, ஆளுங்கட்சி மற்றும் ஆண்ட கட்சிகள் செயல்படுகிறேதோ என்ற சந்தேகம் எனக்கு எழுந்துள்ளது.
தி.மு.க.வில் இணைகிறேனா?
மேலும் இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடும் தே.மு.தி.க.விற்கு களங்கும் வகையில் இதுபோன்ற உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடும் நாளிதழை வன்மையாக கண்டிக்கிறேன். இதுபோன்ற வதந்திகளுக்கு செவிசாய்க்காத எனது ஈரோட்டு மக்கள் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் தே.மு.தி.க.விற்கு ஆதரவாக வாக்களித்து, மாபெரும் வெற்றியடைய செய்வார்கள் என்பதை மனப்பூர்வமாக நம்புகிறேன் என்றும், தே.மு.தி.க. மாநகர் மாவட்ட செயலாளர் ஆனந்த் ஆகிய நான் தற்போதும் எபபோதும் கேப்டன் மற்றும் அண்ணியார் அவர்களுடன்தான் பயணிப்பேன் என்பதையும் இந்த அறிவிப்பின் மூலம் உறுதிபட தெரிவித்துக்கொள்கிறேன்.”
இவ்வாறு அவர் அறிவித்துள்ளார்.
ஈரோடு இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியில் அ.தி.மு.க. போட்டியிடுவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருந்தாலும், வேட்பாளர் யார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. மேலும். எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் மோதலால் யார் களமிறங்குவார்கள்? இரட்டை இலை சின்னம் முடங்குமா? என்ற கேள்விகளெல்லாம் எழுந்துள்ளது. ஈரோடு இடைத்தேர்தலில் அ.ம.மு.க. வேட்பாளராக சிவபிரசாத் களமிறங்குகிறார்.
மேலும் படிக்க: Gutka Ban: குட்கா தடைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு - அமைச்சர் மா.சுப்பிரமணியன்..! விரைவில் புதிய சட்டமா?
மேலும் படிக்க:MNM Website Hacked: மக்கள் நீதி மய்யத்தின் அதிகாரபூர்வ இணையதளம் முடக்கம்; ஹேக்கர்களுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என ட்வீட்..!