Joe Root Record: டிராவிட் சாதனையை தகர்த்து, சச்சினின் சாதனையை சமன் செய்த ஜோ ரூட்.. புதிய லிஸ்ட்..!
டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சினின் சாதனையை சமன் செய்ததோடு, டிராவிட்டின் சாதனையை முறியடித்து, இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் புதிய மைல் கல்லை எட்டியுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சினின் சாதனையை சமன் செய்ததோடு, டிராவிட்டின் சாதனையை முறியடித்து, இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் புதிய மைல் கல்லை எட்டியுள்ளார்.
ஆஷஷ் டெஸ்ட் தொடர்:
ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஷ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே 4 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில், ஆஸ்திரேலிய அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், தொடரின் கடைசி போட்டி ஓவல் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தொடர் யாருக்கு?
தொடரை கைப்பற்றுவது யார் என்பதை உறுதி செய்யும் இந்த போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 283 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியும் 295 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இதனால், 12 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி, 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் 389 ரன்களை குவித்துள்ளது. இன்னும் இரண்டு நாட்கள் மிச்சம் இருப்பதால், இந்த போட்டியில் ஏதாவது ஒரு அணி நிச்சயம் வெற்றி பெற்று விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முடிவினை அறிய ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
ஜோ ரூட் சாதனை:
இந்த நிலையில், இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரான ஜோ ரூட் ஓவல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 3 ரன்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 91 ரன்களையும் சேர்த்தார். இதன் மூலம் தான் டெஸ்ட் போட்டி வரலாற்றில் சச்சினின் சாதனையை சமன் செய்ததோடு, ராகுல் டிராவிட்டின் சாதனையையும் முறியடித்துள்ளார். அதன்படி, டெஸ்ட் தொடர்களில் அதிகமுறை 300+ ரன்களை சேர்த்த வீரர் என்ற பட்டியலில், முதலிடத்தில் உள்ள சச்சினின் சாதனையை சமன் செய்துள்ளார்.
டெஸ்ட் தொடரில் அதிக முறை 300+ ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியல்:
சச்சின் டெண்டுல்கர் - 19 முறை
ஜோ ரூட் - 19 முறை
ராகுல் டிராவிட் : 18 முறை
பிரையன் லாரா : 18 முறை
ரிக்கி பாண்டிங் : 17 முறை
அலெஸ்டர் குக் : 17 முறை
அதிக அரைசதங்கள்:
ஓவல் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் ஜோ ரூட் அரைசதம் கடந்ததன் மூலம், இங்கிலாந்து அணிக்காக சர்வதேச போட்டிகளில் அதிக அரைசதம் விளாசிய வீரர் என்ற, அந்த அணியின் முன்னாள் கேப்டன் குக்கின் சாதனையையும் சமன் செய்துள்ளார். தற்போது வரை அவர் 134 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 60 அரைசதங்கள் மற்றும் 30 சதங்களை விளாசியுள்ளார்.
இங்கிலாந்திற்காக அதிக அரைசதங்களை அடித்த வீரர்:
90 – அலஸ்டர் குக்
90 – ஜோ ரூட்
68 – இயன் பெல்
66 – கிரஹாம் கூச்
64 – ஜெஃப்ரி பாய்காட்