Dravid Son: அன்று மூத்த மகன்! இன்று இளைய மகன்! டிராவிட் வாரிசுகளுக்கு கர்நாடக அணியில் இடம்!
விஜய் மெர்ச்சண்ட் கோப்பைக்கான கர்நாடக அணிக்கான உத்தேச பட்டியலில் ராகுல் டிராவிட்டின் இரண்டாவது மகனுக்கு இடம் கிடைத்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமானவர் ராகுல் டிராவிட். இந்திய அணிக்காக நீண்ட ஆண்டுகள் கிரிக்கெட் வீரராகவும், பயிற்சியாளராகவும் பல சாதனைகளை படைத்துள்ளார். இவருக்கு சமித் மற்றும் அன்வய் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
கர்நாடக அணியில் டிராவிட் மகன்:
இந்தியாவில் 14 வயதுக்குட்பட்டோர், 16 வயதுக்குட்பட்டோர், 18 வயதுக்குட்பட்டோர், சீனியர் வீரர்கள் என பல வயது பிரிவில் பல உள்ளூர் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மிகவும் பிரபலமான உள்ளூர் கிரிக்கெட் தொடர் விஜய் மெர்சண்ட் கோப்பை ஆகும். 16 வயதுக்குட்பட்டோருக்கான விஜய் மெர்சண்ட் தொடர் வரும் டிசம்பர் 6ம் தேதி தொடங்க உள்ளது.
இந்த தொடருக்கான ஒவ்வொரு மாநில அணிகளும் தயார் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் கர்நாடக அணிக்கான உத்தேச பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த பட்டியலில், ராகுல் டிராவிட்டின் இரண்டாவது மகன் அன்வய் பெயர் இடம்பெற்றுள்ளது. மொத்தம் 35 பேர் கொண்ட பெயர் பட்டியலில் 3 விக்கெட் கீப்பர்களில் ஒருவராக ராகுல் டிராவிட்டின் மகன் பெயர் இடம்பெற்றுள்ளது. டிராவிட் மகன் அன்வய்யுடன் ஆதித்யா ஜா மற்றும் ஜாய் ஜேம்ஸ் பெயரும் விக்கெட் கீப்பர்களாக இடம்பெற்றுள்ளது.
தந்தையை போல மிளிர்வார்களா?
அன்வய் சிறுவயது முதலே கிரிக்கெட்டில் தீவிர ஆர்வம் உள்ளவராக திகழ்கிறார். 14 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் தொடரில் தும்கூர் மண்டல அணிக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 200 ரன்களை பெங்களூர் மண்டல அணிக்காக எடுத்துள்ளார். மேலும், அந்த தொடரில் பெங்களூர் அணிக்காக கேப்டனாகவும் ஆடியுள்ளார்.
தந்தையைப் போலவே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அன்வய்யின் அண்ணன் சமித்தும் கிரிக்கெட் வீரர் ஆவார். அவர் ஆல்ரவுண்டராக திகழ்கிறார். அவர் தற்போது கர்நாடக அணிக்காக ஆடி வருகிறார். தற்போது கூச் பெகார் டிராபியில் கர்நாடக அணிக்காக சமித் ஆடி வருகிறார். வதோராவில் நடைபெற்ற பரோடா அணிக்கு எதிராக 141 பந்துகளில் 71 ரன்கள் சமித் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாராட்டும், விமர்சனமும்:
இந்திய அணிக்காக பல்வேறு சாதனைகளை படைத்த ராகுல் டிராவிட்டின் இரண்டு மகன்களும் கர்நாடக அணிக்காக கிரிக்கெட் அணியில் ஆடி வருவதற்கு பலரும் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர். அதேசமயம், ராகுல் டிராவிட்டின் மகன்கள் என்பதாலே மிக எளிதாக வாய்ப்பு கிடைத்ததாகவும் சிலர் விமர்சித்து வருகின்றனர். விமர்சனத்திற்கு பதில் தரும் விதமாக ராகுல் டிராவிட்டின் மகன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்களா? என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
51 வயதான ராகுல் டிராவிட் இந்திய அணிக்காக 164 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 36 சசதங்கள், 5 இரட்டை சதங்கள், 63 அரைசதங்கள் உள்பட 13 ஆயிரத்து 288 ரன்கள் எடுத்துள்ளார். 344 ஒருநாள் போட்டிகளில் ஆடி 12 சதங்கள், 83 அரைசதங்கள் உள்பட 10 ஆயிரத்து 889 ரன்கள் எடுத்துள்ளார். 89 ஐபிஎல் போட்டிகளில் ஆடி 11 அரைசதங்கள் உள்பட 2 ஆயிரத்து 174 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.