Dhoni Jersey in Raina Restaurant: ஃப்ரெண்ட்ஷிப்தான் சொத்து நமக்கு... ரெய்னாவின் உணவகத்தில் தோனியின் ஜெர்சி.. வைரலாகும் போட்டோ!
Dhoni Jersey in Raina Restaurant: 'சின்ன தல' என்று அன்புடன் அழைக்கப்படும் பிரபல கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தனது பெயரில் ஒரு உணவகத்தை தொடங்கியுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.
Dhoni Jersey in Raina Restaurant: 'சின்ன தல' என்று அன்புடன் அழைக்கப்படும் பிரபல முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தனது பெயரில் ஒரு உணவகத்தை தொடங்கியுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.
'ரெய்னா இந்தியன் உணவகம்'
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு கிரிக்கெட்டுக்கு பிறகு பிடித்தது எது என்று கேட்டால் ரெய்னாவின் டை-ஹார்ட் ஃபேன்ஸ் அனைவருமே கூறுவது உணவுதான். அவர் எவ்வளவு பெரிய உணவுப் பிரியர் என்பதை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை கொஞ்சம் ஸ்க்ரால் செய்தால் போதும். அவ்வபோது எதையாவது சமைப்பது, சாப்பிடுவது போன்ற வீடியோக்களை அவர் அடிக்கடி வெளியிட்டு வந்த நம்ம சின்ன தல, சமீபத்தில் ஆம்ஸ்டர்டாமில் தனது முதல் உணவகத்தை திறந்தார். இப்போது அந்த உணவகத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியபோது தோனி தனக்கு பரிசளித்த ஜெர்சியையும், தோனி கையொப்பமிட்ட தனது ஜெர்சியையும் உணவகத்தில் ப்ரேம் போட்டு வைத்துள்ளார். இது தான் இப்போது இணையவாசிகளிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது.
தல - சின்ன தல
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் போது மட்டுமல்ல, இந்திய அணிக்காக விளையாடும் போதும் மைதானத்திலும், மைதானத்தைக் கடந்து பொதுவெளியிலும் இவர்கள் இருவருக்கும் இருக்கும் நட்பு என்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்துவது மட்டுமல்லாமல், ரசிகர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கி வருகின்றனர். இதற்கிடையில், தோனி மற்றும் தனது ஜெர்சியை தான் தொடங்கிய உணவகத்தில் வைத்துள்ளார் சின்ன தல. இதனை பலர் ’நண்பேண்டா’ போன்ற கமெண்ட்டுகளையும், சிலர் இது ரெய்னாவின் வியாபார யுக்தி எனவும் கமெண்ட் செய்துள்ளனர்.
ஐரோப்பாவில் இந்திய உணவுகள்
சுரேஷ் ரெய்னா, இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஐரோப்பாவிற்கு மிகவும் உண்மையான சுவைகளை கொண்டு செல்ல விரும்புவதாக உணவகம் தொடங்கும்போது தனது இன்ஸ்டாகிராம் பதிவில் எழுதினார். அவரே ஒரு ஆர்வமுள்ள செஃப் என்பது நமக்கு தெரியும், தற்போது உணவு மீதான அவரது ஆர்வத்தை தனது புதிய முயற்சி மூலம் ஐரோப்பாவில் நிலைநாட்ட விரும்புகிறார். "வட இந்தியாவின் வளமான மசாலாப் உணவுகளில் இருந்து தென்னிந்தியாவின் நறுமண குழம்புகள் வரை எல்லாவற்றையும் அங்கு அறிமுக படுத்த திட்டமிட்டுள்ள ரெய்னா, இதனை இந்திய உணவுகளை ருசித்து சாப்பிடுபவர்களுக்கு சமர்ப்பணம் செய்வதாகவும் அந்த பதிவில் எழுதினார்.
வெளிநாட்டில் உணவகம் வைத்திருக்கும் பிரபலங்கள்
வெளிநாட்டில் இந்திய உணவகத்தை வைத்திருக்கும் பிரபலம் சுரேஷ் ரெய்னா மட்டுமல்ல. ஏற்கனவே, நியூயார்க் மற்றும் பர்மிங்காமில் உணவகங்களை வைத்திருக்கும் பிரியங்கா சோப்ரா மற்றும் ஆஷா போஸ்லே போன்றவர்களுடன் தற்போது ரெய்னா இணைந்துள்ளார். இதற்கிடையில், பிரபல கிரிக்கெட் வீரரும், முன்னாள் இந்திய கேப்டனுமான விராட் கோலியும் இந்தியாவில் தனது உணவகங்களை வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.