Cheteshwar Pujara: முதல் தர கிரிக்கெட்டில் அதிக இரட்டை சதங்கள்.. சர் டான் பிராட்மேன் பட்டியலில் இணைந்த புஜாரா..!
முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த சௌராஷ்டிரா அணி 8 விக்கெட்டுக்கு 578 ரன்கள் எடுத்து இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்ட சேதேஷ்வர் புஜாரா, அடுத்த மாதம் தொடங்கப்படவுள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்திய அணியின் கதவை தட்டியிள்ளார். ரஞ்சி டிராபியில் ஜார்கண்ட் அணிக்கு எதிராக நின்று இரட்டை சதம் அடித்தார்.
இதன்மூலம், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் தேர்வாளர்கள் புஜாராவின் பெயர் மீண்டும் கண்ணில் படும். அனேகமாக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி இன்று (ஜனவரி 8) மாலைக்குள் அறிவிக்கப்படலாம். இதற்கு சற்று முன், ரஞ்சியில் சேதேஷ்வர் புஜாராவின் இரட்டை சதம், தேர்வாளர்களை இக்கட்டான நிலைக்கு தள்ளியது.
ஜார்கண்ட் அணிக்கு எதிரான இந்த போட்டியில் டாஸ் வென்ற சௌராஷ்டிரா கேப்டன் ஜெய்தேவ் உனட்கட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதல் நாளிலேயே சௌராஷ்டிரா பந்துவீச்சாளர்கள் ஜார்கண்ட் அணியை 142 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தனர். இதையடுத்து, ஆரம்பம் முதலே சௌராஷ்டிரா அணி வலுவாக பேட்டிங் செய்தது.
முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த சௌராஷ்டிரா அணி 8 விக்கெட்டுக்கு 578 ரன்கள் எடுத்து இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. அந்த அணியில் புஜாரா 243* ரன்களும், பிரேரக் மன்கட் 12 பவுண்டரிகள் உட்பட 104* ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
மிகப்பெரிய சாதனை படைத்த புஜாரா:
ரஞ்சி டிராபியில் ஜார்கண்ட் அணிக்கு எதிரான போட்டியில் இரட்டை சதம் அடித்ததன்மூலம் புஜாரா சிறப்பான சாதனை ஒன்றை படைத்துள்ளார். இந்த இரட்டை சதத்தின் மூலம், புஜாரா முதல் தர போட்டியில் அதிக இரட்டை சதங்கள் அடித்த நான்காவது பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்தார்.
புஜாராவின் முதல் தர போட்டியில் இது 17வது இரட்டை சதமாகும். ஜார்கண்ட் அணிக்கு எதிரான ஆட்டத்தின் மூன்றாவது நாளில் புஜாரா தனது இரட்டை சதத்தை பூர்த்தி செய்தார். சௌராஷ்டிரா அணிக்காக விளையாடிய புஜாரா 30 பவுண்டரிகள் உதவியுடன் 243* ரன்கள் எடுத்தார். இதையடுத்து, முதல் தர போட்டியில் அதிக இரட்டை சதங்கள் அடித்த பேட்ஸ்மேன் ஆஸ்திரேலிய முன்னாள் ஜாம்பவான் சர் டான் பிராட்மேன் இடம்பிடித்திருக்கும் பட்டியலில் புஜாரா இடம் பிடித்தார். சர் டான் பிராட்மேன் முதல் தர போட்டியில் 37 இரட்டை சதங்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார். இதன்பிறகு, 36 இரட்டை சதங்கள் அடித்த இங்கிலாந்து முன்னாள் ஜாம்பவான் வாலி ஹம்மண்ட் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
𝗗𝗼𝘂𝗯𝗹𝗲 𝗗𝗲𝗹𝗶𝗴𝗵𝘁 𝗳𝗼𝗿 𝗖𝗵𝗲𝘁𝗲𝘀𝗵𝘄𝗮𝗿 𝗣𝘂𝗷𝗮𝗿𝗮! 💯💯
— BCCI Domestic (@BCCIdomestic) January 7, 2024
A spectacular 2⃣0⃣0⃣ in Rajkot from the Saurashtra batter! 👏👏
Follow the match ▶️ https://t.co/xYOBkksyYt#RanjiTrophy | #SAUvJHA | @IDFCFIRSTBank | @saucricket | @cheteshwar1 pic.twitter.com/ofLZSf2qcl
முதல் தர கிரிக்கெட்டில் மொத்தம் 22 இரட்டைச் சதங்கள் அடித்த இங்கிலாந்தின் பட்சி ஹென்ட்ரன் பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்துள்ளார். இதற்குப் பிறகு, இங்கிலாந்தின் ஹெர்பர்ட் சட்க்ளிஃப், இங்கிலாந்தின் ராம்பிரகாஷ் மற்றும் இந்தியாவின் சேதேஷ்வர் புஜாரா ஆகியோர் தலா 17 முதல் தர இரட்டைச் சதங்களுடன் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளனர். மேலும், இந்த பட்டியலில் இடம்பிடித்த ஒரே இந்திய வீரர் சேதேஷ்வர் புஜாரா என்பதுதான் குறிப்பிடத்தக்கது.
முதல் தர கிரிக்கெட்டில் அதிக இரட்டை சதம் அடித்த பேட்ஸ்மேன்கள்:
- 37 இரட்டை சதங்கள் - பிராட்மேன் (ஆஸ்திரேலியா)
- 36 இரட்டை சதங்கள் - ஹம்மண்ட் (இங்கிலாந்து)
- 22 இரட்டை சதங்கள் - ஹென்ட்ரன் (இங்கிலாந்து)
- 17 இரட்டை சதங்கள் - சட்க்ளிஃப் (இங்கிலாந்து)
- 17 இரட்டை சதம் - ராம்பிரகாஷ் (இங்கிலாந்து)
- 17* இரட்டை சதம் - புஜாரா (இந்தியா)
ரஞ்சி கோப்பை வரலாற்றில் அதிக இரட்டை சதங்கள்:
பேட்ஸ்மேன்கள் | விளையாடிய அணி | 200கள் |
---|---|---|
பராஸ் டோக்ரா | இமாச்சல பிரதேசம்/புதுச்சேரி | 9 |
சேதேஷ்வர் புஜாரா | சௌராஷ்டிரா | 8* |
அபினவ் முகுந்த் | தமிழ்நாடு | 7 |
அஜய் சர்மா | டெல்லி/இமாச்சல பிரதேசம் | 7 |
மனோஜ் திவாரி | பெங்கால் | 6 |