இதுதான் ரிவெஞ்ச்.. அமெரிக்க வீரரின் ஆணவத்தை அடக்கிய குகேஷ் - என்ன செய்தார்?
தனது ராஜா காயைத் தூக்கி வீசிய அமெரிக்க செஸ் வீரர் நகமுராவை வீழ்த்தியது மட்டுமின்றி அவருக்கு பாடம் புகட்டியுள்ளார் குகேஷ்.

இந்தியாவின் இளம் செஸ் வீரர் குகேஷ். தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர் சர்வதேச அளவில் பல திறமை வாய்ந்த செஸ் சாம்பியன்களை வீழ்த்தியுள்ளார். இவர் தற்போது அமெரிக்காவில் உள்ள மிசோரியில் நடந்து வரும் கிளட்ச் செஸ் சாம்பியன்ஸ் தொடரில் பங்கேற்றுள்ளார்.
வீழ்ந்த பின் எழுந்த குகேஷ்:
இந்த தொடரின் முதல் நாளான இன்ற குகேஷ் தனது முதல் போட்டியில் ஜாம்பவானான மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டார். அந்த போட்டியில் அவர் தோல்வி அடைந்தார். அதன்பின்பு, அவருக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த நகமுராவிற்கும் இடையே நடந்த போட்டியில் அவரை தோற்கடித்தார்.
பின்னர், குகேஷிற்கும் காருனாவிற்கும் இடையே போட்டி நடந்தது. இந்த போட்டியிலும் குகேஷ் வெற்றி பெற்றார். இதனால், இன்றைய நாள் முடிவில் இந்த தொடரில் புள்ளிப்பட்டியலில் குகேஷ் முதலிடத்தில் உள்ளார்.
பாடம் புகட்டிய குகேஷ்:
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் கடந்த சில தினங்களுக்கு முன்பு குகேஷுடன் நடந்த ஆட்டத்தில் நகமுரா வெற்றி பெற்ற பிறகு, குகேஷின் ராஜா காயைத் தூக்கி வீசினார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனாலும், குகேஷ் எந்தவித எதிர்ப்பையும் காட்டாமல் பொறுமையாகவே இருந்தார். பின்னர், நகமுராவிற்கு கைகொடுத்து விளையாட்டின் ஒற்றுமையையும், முக்கியத்துவத்தையும் உணர்த்தினார்.
When arrogance got humbled in just 3 weeks 🗿#Gukesh #Hikaru pic.twitter.com/2wH3TQyYx6
— Deepu (@deepu_drops) October 28, 2025
இந்த நிலையில், இன்று தனது ராஜா காயை தூக்கி வீசிய நகமுராவை வீழ்த்திய பிறகு எந்தவொரு ஆர்ப்பாட்டமும் காட்டாமல் குகேஷ் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டார். குகேஷின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
மகிழ்ச்சி:
இந்த நாள் முடிவில் குகேஷ் 6 புள்ளிகளுக்கு 4 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளார். இதில் குகேஷ் தான் ஆடிய இரண்டு மோதிய 3 வீரர்களுடனும் இரண்டு முறை ஆடினார். அதில் கார்ல்சனுடன் மோதிய முதல் சுற்றில் தோல்வி அடைந்தாலும், இரண்டாவது சுற்றை ட்ரா செய்தார்.
நகமுராவுடன் முதல் சுற்றில் வெற்றி பெற்ற பிறகு, இரண்டாவது சுற்றை டிரா செய்தார். காருனாவுடன் இரண்டு சுற்றிலும் வெற்றி பெற்று அசத்தினார். குகேஷ் முதலிடத்தில் உள்ள நிலையில், கார்ல்சன் 2வது இடத்தில் உள்ளார். நகமுரா 3வது இடத்தில் உள்ளார். காருனா ஒரு வெற்றி மட்டுமே இன்று பெற்றார். குகேஷ் இதுதொடர்பாக கூறியதாவது, இது தோல்வியுடனே தொடங்கியது. ஆனால், இந்த போட்டியில் நான் இன்னும் மகிழ்ச்சியுடனே உள்ளேன் என்று கூறினார்.
சர்வதேச செஸ் தொடர்:
இந்த தொடரைப் பொறுத்தமட்டில் வீரர்கள் முதல் நாளில் வெற்றி பெற்றால் ஒரு புள்ளியும், 2வது நாளில் வெற்றி பெற்றால் 2 புள்ளிகளும், 3வது நாளில் வெற்றி பெற்றால் 3 புள்ளிகளும் வழங்கப்படும். முதல் நாள் வெற்றிக்கு 1000 டாலர்களும், 2வது நாள் வெற்றிக்கு 2 ஆயிரம் டாலர்களும், 3வது நாள் வெற்றிக்கு 3 ஆயிரம் டாலர்களும் போனஸ் பரிசாகவும் வழங்கப்படும்.
கோவாவில் அடுத்தாண்டு நடைபெற உள்ள சர்வதேச செஸ் தொடரில் இந்தியாவின் சார்பில் குகேஷ் பங்கேற்க உள்ளார். அவருடன் ப்ரக்யானந்தா, அர்ஜுன் எரிகைஸி பங்கேற்கின்றனர்.





















