Asian Champions Trophy 2023: சொந்த மண்ணில் களமிறங்கும் இந்தியா; நான்காவது முறையாக மகுடம் சூடுமா?
இதுவரை எந்தெந்த நாடுகள் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்தின என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023 தொடர் ஆகஸ்ட் மூன்றாம் தேதி தொடங்கவுள்ளது. இந்த தொடருக்கான அட்டவணை ஏற்கனவே ஆசிய ஹாக்கி கூட்டமைப்பு வெளியிட்டிருந்தது. இந்த தொடரின் முதல் போட்டியில் கொரியா மற்றும் ஜப்பான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. மூன்றாவது போட்டியில் இந்தியா பலமான சீனாவை எதிர்கொள்ளவுள்ளது. சென்னையில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி ஸ்டேடியத்தில் இந்த போட்டித்தொடர் நடக்கவுள்ளது. இந்தப் தொடரில், கொரியா, மலேசியா, பாகிஸ்தான், ஜப்பான், சீனா, இந்தியா என மொத்தம் 6 நாடுகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஆகஸ்ட் 3ஆம் தேதி தொடங்கும் தொடர் ஆகஸ்ட் 12ஆம் தேதி முடிவடையவுள்ளது. இதற்காக சென்னைக்கு இந்திய அணி உள்பட 6 நாடுகளைச் சேர்ந்த அணிகள் முகாமிட்டுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை ஆசிய ஹாக்கி கூட்டமைப்புடன் இணைந்து தமிழ்நாடு அரசு ஏற்பாடுகளை செய்துள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் சாம்பியன் பட்டத்தை தென் கொரியா வென்றது. இந்திய ஆண்கள் ஹாக்கி அணி (2011, 2016 & 2018) மற்றும் பாகிஸ்தான் (2012, 2013 & 2018) ஆகிய இரண்டும் தலா மூன்று கோப்பையை வென்றுள்ளன. இதில் மிகவும் முக்கியமாக பார்க்கப்படுவது, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இதுவரை ஆசிய சாம்பியன்ஸ் டிராபி தொடரை இதுவரை நடத்தியதில்லை.
இதுவரை எந்தெந்த நாடுகள் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்தின என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
2011ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரை முதன் முதலில் சீனா நடத்தியது. இதில் சீனா, இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், மலேசியா, தென் கொரியா என மொத்தம் 6 நாடுகள் பங்கேற்றன. இதில் இந்திய அணி கோப்பையை வென்றது.
2012ஆம் ஆண்டு கத்தார் நாடு தொடரை நடத்தியது. இந்த தொடரில், புதிதாக ஓமன் அணி பங்கேற்றது. கடந்த தொடரில் பங்கு பெற்ற தென் கொரிய அணி இந்த தொடரில் கலந்து கொள்ளவில்லை. இந்த ஆண்டு பாகிஸ்தான் தொடரை வென்றது.
2013ஆம் ஆண்டு ஜப்பான் தொடரை நடத்தியது. இதில் 2012ஆம் ஆண்டு போட்டிபோட்ட அதே 6 அணிகள் களமிறங்கின. ஆனால் இம்முறையும் பாகிஸ்தான் அணியே கோப்பையை வென்றது. மேலும் ஜப்பான் அணி அதாவது தொடரை நடத்தும் நாடு முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது.
2016ஆம் ஆண்டு மலேசியா தொடரை நடத்தியது. ஆனால் இம்முறை ஓமன் வெளியேறி, மீண்டும் தென் கொரியா தொடரில் களமிறங்கியது. ஆனால் இம்முறை இந்திய அணி கோப்பை வென்றது.
2018ஆம் ஆண்டு ஓமன் நாடு தொடரை நடத்தியது. இம்முறை சீனா தொடரில் கலந்துகொள்ளவில்லை. மாறாக தொடரை நடத்திய ஓமன் களமிறங்கியது. இந்த ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு கோப்பை பகிர்ந்து அளிக்கப்பட்டது. இதனால் இரு அணிகள்ம் வென்ற கோப்பைகளின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது.
2021ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணி தொடரை நடத்தியது. இதில் முதல் முறையாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இல்லாத இரண்டு அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. அதாவது, சௌத் கொரியா மற்றும் ஜப்பான் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தியது. இறுதிப் போட்டியில் வென்று முதல் முறையாக சௌத் கொரியா அணி கோப்பையில் தனது பெயரை பதிவு செய்தது.
நடைபெற்ற 6 தொடர்களில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் தலா மூன்று முறை கோப்பையை வென்றுள்ளது. ஒருமுறை சௌத் கொரியா கோப்பையை வென்றுள்ளது. இம்முறை சௌத் கொரியா நடப்புச் சாம்பியன் என்ற மனவலிமையோடும், இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் நடக்கும் தொடர் என்ற புத்துணர்வோடும், அதிக முறை இறுதிப் போட்டியில் விளையாடிய அணி என்ற அனுபவத்தோடு பாகிஸ்தானும் களமிறங்குகிறது.