Graha Pravesh: எந்தெந்த மாதத்தில் வீடு கிரகப்பிரவேசம் செய்யக்கூடாது? ஏன் தெரியுமா?
சித்திரை முதல் பங்குனி வரை 12 மாதங்களில் எந்தெந்த மாதத்தில் வீடு கிரகப்பிரவேசம் செய்யலாம்? புதிய வீட்டிற்கு மாறலாம்? என்பதை கீழே விரிவாக காணலாம்.
தமிழ் மாதங்களான சித்திரை முதல் பங்குனி வரை 12 மாதங்களும் தனிச்சிறப்புகள் வாய்ந்தது ஆகும். இந்த ஒவ்வொரு மாதத்திலும் சில சுபநிகழ்வுகளை செய்யலாம் என்றும், சில சுபநிகழ்வுகளை தவிர்க்கலாம் என்றும் ஜோதிட சாஸ்திரங்களில் கூறப்படுகிறது.
சொந்தமாக வீடு என்பது ஒவ்வொருவரின் கனவாகும். அப்படி சொந்தமாக வீடு கட்டுபவர்கள் தங்களது சொந்த வீட்டிற்கு குடி புகும்போது நல்ல நாள் பார்த்தே செல்வார்கள். செல்வ செழிப்புடன் வாழப்போகும் வீட்டிற்கு எந்த மாதத்தில் குடிபோகலாம்? கிரகப்பிரவேசம் செய்யலாம்? என்பதை கீழே விரிவாக காணலாம்.
சித்திரை:
தமிழ் வருட நாட்காட்டியின் முதல் மாதமாக சித்திரை கருதப்படுகிறது. தமிழ் புத்தாண்டின் முதல் மாதமான இந்த சித்திரையில் புது வீட்டிற்கு குடி போவதை தாராளமாக செய்யலாம். கிரகப்பிரவேசங்கள் செய்வதற்கு சித்திரை மாதம் சிறந்த மாதம் ஆகும். ஆனால், சித்திரையில் பெரும்பாலும் திருமணம் செய்வதை தவிர்ப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வைகாசி:
தமிழ் மாதங்களில் சுபகாரியங்களுக்கு மிகவும் சிறந்த மாதம் வைகாசி மாதம் ஆகும். இதனால், புதியதாக வீட்டிற்கு குடி போகுதல், கிரகப்பிரவேசம் செய்தல், வாடகை வீடு மாறுதல் உள்ளிட்டவை இந்த மாதத்தில் தாராளமாக செய்யலாம்.
ஆனி:
திருமாலின் வாமன அவதாரத்தால் அழிக்கப்பட்ட மகாபலி சக்கரவர்த்தி தனது ராஜ்ஜியம் முழுவதும் இழந்த மாதமாக ஆனி அமைந்துள்ளது. இதனால், வீடு குடிபோகுதல், கிரகப்பிரவேசம் செய்வது மற்றும் வாடகை வீட்டிற்கு செல்வது போன்றவற்றை ஆனியில் தவிர்ப்பது நல்லது ஆகும். இந்த மாதத்தில் புது வீடு கட்டும் பணியை தவிர்ப்பதும் நல்லது ஆகும்,
ஆடி:
இலங்கையை ஆண்ட இராவணன் தனது இலங்கை தேசத்தை இழந்த மாதமாக ஆடி அமைந்துள்ளது. ஆடி மாதம் மிகச்சிறந்த ஆன்மீக மாதமாக இருந்தாலும் கிரகப்பிரவேசம், புது வீடு குடிபுகுதல் போன்ற சுபகாரியங்களுக்கு ஏற்ற மாதமாக கருதப்படுவது இல்லை. இதனால், ஆடியில் வீடு, மனை போன்ற காரியத்தை தவிர்ப்பது நல்லது ஆகும்.
ஆவணி:
முழுமுதற்கடவுளான விநாயகப் பெருமானுக்கான விநாயகர் சதுர்த்தி, திருமாலுக்குரிய கிருஷ்ண ஜெயந்தி, மகாபலி மன்னன் வீடு திரும்பும் ஓணம் பண்டிகைகள் கொண்டாடப்படும் ஆவணி மாதம் வீடு கட்டுதல், கிரகப்பிரவேசம் செய்தல், புதிய வீட்டிற்கு குடிபுகுதல் போன்ற நிகழ்வுகளுக்கு மிகவும் உகந்தது ஆகும்.
புரட்டாசி:
நரசிம்ம மூர்த்தியால் இரணியன் அவரது சொந்த அரண்மனையிலே சூரசம்ஹாரம் செய்யப்பட்ட மாதம் புரட்டாசி. இதனால், இந்த மாதத்தில் வீடு குடிபுகுதல், கிரகப்பிரவேசம் செய்தல், வீடு கட்டும் பணியைத் தொடங்குவது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது ஆகும்.
ஐப்பசி:
வீடு கிரகப்பிரவேசம் செய்வதற்கு, வாடகை வீட்டிற்கு மாறுவதற்கு, புது வீடு கட்டும் பணியை தொடங்குவதற்கு ஐப்பசி மாதம் மிகவும் உகந்த மாதம் ஆகும்.
கார்த்திகை:
முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த மாதம் கார்த்திகை மாதம் ஆகும். இந்த மாதத்தில் அனைத்து சுபகாரியங்களும் செய்யலாம். இதனால், கார்த்திகையில் வீடு குடிபுகுதல், கிரகப் பிரவேசம் என அனைத்து விசேஷங்களும் செய்யலாம்.
மார்கழி:
மார்கழி பொதுவாக சுபகாரியங்களுக்கு ஏற்ற மாதமாக கருதப்படுவது இல்லை. கடும் குளிர் காலமான இந்த மார்கழியில்தான் துரியோதனன் தனது ராஜ்ஜியத்தை இழந்தார். இதனால், இந்த மாதத்தில் சுபகாரியங்கள் செய்வதை தவிர்ப்பது நல்லது. குறிப்பாக, கிரகப்பிரவேசம், வீடு குடி புகுதல், வாடகை வீட்டிற்கு மாறுவது ஆகியவற்றை தவிர்ப்பதும் நல்லது ஆகும்,
தை:
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் தை மாதம் சுபகாரியங்களுக்கு மிக மிக உகந்த மாதம் ஆகும். இந்த மாதத்தில் வீடு குடிபுகுதல், கிரகப்பிரவேசம், வாடகை வீட்டிற்கு மாறுதல், திருமணம் என அனைத்து சுபகாரியங்களும் செய்யலாம்.
மாசி:
சிவபெருமான் ஆலகால விஷம் அருந்திய மாதமாக மாசி உள்ளது. மாசி மாதத்தில் சிறப்பான விசேஷ நாட்கள் இருந்தாலும் இந்த மாதம் புதிய வீடு குடிபுகுதல், கிரகப்பிரவேசம் மற்றும் வீடு கட்டும் பணியை தொடங்குதல் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது ஆகும்.
பங்குனி:
12வது மாதமாக கருதப்படும் பங்குனி மாதத்தில் கிரகப்பிரேவசம், புது வீடு கட்டும் பணியை தவிர்ப்பதே சிறந்தது ஆகும். ஏனென்றால், சிவபெருமான் சினம் கொண்டு மன்மதனை எரித்தது இந்த மாதத்திலே ஆகும். ஆனால், பங்குனியில் வாடகை வீட்டிற்கு மாறலாம் என்று கூறப்படுகிறது.
இவ்வாறு ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகிறது.