திருச்சி: தாருகாவனேசுவரர் கோவில் தீர்த்தவாரி நிகழ்ச்சி - பக்தர்கள் நீராட தடை விதிப்பு
திருப்பராய்த்துறை தாருகாவனேசுவரர் கோவிலில் தீர்த்தவாரி நிகழ்ச்சி இன்று நடக்கிறது. காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் பக்தர்கள் நீராட தடைவிதிக்கப்பட்டுள்ளது.
குடகு மலையில் இருந்து புறப்பட்டு பூம்புகாரில் கலக்கும் காவிரி ஆற்று கரையில் புனித நீராட 3 இடங்கள் பிரசித்தி பெற்றதாகும். இதில் ஐப்பசி முதல் நாள் அன்று திருப்பராயத்துறையிலும், ஐப்பசி கடைசிநாளில் மயிலாடுதுறையிலும் புனித நீராடி அங்குள்ள சிவபெருமானை வணங்கினால் துன்பம் நீங்கி இன்பம் பெருகும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்புமிக்க திருப்பராயத்துறை திருச்சி மாவட்டத்தில் உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற பசும்பொன் மயிலாம்பிகை உடனுறை தாருகாவனேசுவரர் கோவில் உள்ளது. இக்கோவில் அப்பர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் போன்றோர்களால் பாடல்பெற்ற தலமாகும். இதனை தொடர்ந்து ஐப்பசி முதல்நாளையொட்டி இங்கு இன்று (செவ்வாய்க்கிழமை) துலா முழுக்கு என்னும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. வழக்கமாக காவிரி ஆற்றில் சாமியை அழைத்து சென்று புனித நீராட்டு செய்வார்கள். ஆனால் தற்போது, காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் சாமியை காவிரி ஆற்றுக்கு அழைத்து செல்லும் நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதுமட்டுமின்றி பக்தர்களும் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. தீர்த்தவாரியையொட்டி இன்று காலை அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அதன் பின்னர் மாலையில் அம்மன் குடிபுகும் நிகழ்ச்சியும் நடக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மண்டல இணை ஆணையர் செல்வராஜ் மேற்பார்வையின் பேரில் உதவி ஆணையர் லட்சுமணன், திருப்பராய்த்துறை ஊராட்சி மன்ற தலைவர் பிரகாசமூர்த்தி, தக்கார் ஹேமலதா, கோவில் செயல் அலுவலர் ராகினி ஆகியோர் செய்து வருகின்றனர்.
தீர்த்தவாரி நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் வருகைதருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் திருப்பராய்த்துறை ஊராட்சி மன்றத்தின் சார்பில் கோவில் மற்றும் அம்மன் திருவீதி உலா வரும் பகுதியில் கொசு மருந்து அடிக்கப்பட்டது. காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் பக்தர்கள் காவிரி ஆற்றில் இறங்காதவாறு திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலை யையொட்டி தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது. தடுப்பு கம்பிகளை தாண்டி யாரும் உள்ளே செல்லாதவாறு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த பணிகளை திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் நேற்று ஆய்வு செய்தார். அவர் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை பார்வையிட்டார். அப்போது, அவர் காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகமாக சென்று கொண்டிருப்பதால் பக்தர்களை குளிக்க அனுமதிக்க வேண்டாம் என அறிவுறுத்தினார். இதேபோல் ஸ்ரீரங்கம் தாசில்தார் குணசேகரன் முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்தார். வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை, அறநிலையத்துறை ஆகிய துறையினர் முன்னெச்சரிக்கை பணிகளை செய்து வருகின்றனர். இதுபோல் அம்மாமண்டபம் உள்ளிட்ட அனைத்து படித்துறைகளிலும் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று (செவ்வாய்க்கிழமை) பக்தர்களால் துலா ஸ்தானம் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்