கோலாகலமாக நடைபெற்ற மாம்புள்ளி புனித பிரான்சிஸ் சவேரியார் திருத்தல ஆலயதிருத் தேர் பவனி திருவிழா ....!
குத்தாலம் அருகே புனித பிரான்சிஸ் சவேரியார் திருத்தல ஆலயத்தில் திருத்தேர் பவனிவிழாவை முன்னிட்டு நடைபெற்ற திருபலியில் உலக அமைதிக்காக சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
குத்தாலம் அடுத்த மாம்புள்ளி புனித பிரான்சிஸ் சவேரியார் திருத்தல ஆலயத்தில் நடைபெற்ற திருத்தேர் பவனிவிழாவில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.
மாம்புள்ளி புனித பிரான்சிஸ் சவேரியார் திருத்தலம்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா மாம்புள்ளி கிராமத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற புனித பிரான்சிஸ் சவேரியார் திருத்தலம். இந்த ஆலயத்தின் 29 -ஆம் ஆண்டு தேர் பவனி திருவிழா கடந்த மாதம் 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து பத்து நாட்கள் மன்றாட்டு மாலை, நவநாள் ஜெபம், திருபலி உள்ளிட்ட பல்வேறு வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெற்றன.
திருத்தேர் பவனி
அதனைத் தொடர்ந்து விழாவில் முக்கிய நிகழ்வான சிறப்பு திருபலி மற்றும் திருத்தேர் பவனி நடைபெற்றது. குத்தாலம் பங்குத்தந்தை ஜெர்லின் கார்டன் தலைமையில் நடைபெற்ற திருபலியில் செல்வத்தை அல்ல கடவுளை நம்புவோர் தளிரென தழைப்பர் என்ற இறை வார்த்தையை மையைப் படுத்தி இறை உரையாற்றினார். இந்த சிறப்பு திருபலியில் உலக அமைதிக்காகவும், விவசாயம் செழிக்கவும், இயற்கை பேரிடர் பாதிப்புகளில் இருந்து மக்கள் பாதுகாத்திடவும், மனித நேயம் நிலைத்திட வேண்டி மக்களோடு இணைந்து சிறப்பு பிரார்த்தனை வழிபாடு நடத்தினர்.
மத பாகுபாடு இல்லாத வழிபாடு
இந்த வழிபாட்டில் கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி பிற சமய மக்களும் நல்லிணக்கத்தோடு கலந்துகொண்டு கொண்டனர். தொடர்ந்து தேர் பவனியில் புனித பிரான்சிஸ் சவேரியார் திருவுருவம் தாங்கிய பூக்களால் அலங்கரித்த தேர்கள் ஆலய வளாகத்தில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. திருபலி மற்றும் தேர் பவனி நிகழ்வில் அருள் தந்தையார்கள், அருள் சகோதரிகள், அன்பிய குழுவினர், பங்கு மக்கள், நாட்டான்மையார்கள், கிராமவாசிகள், ஸ்ரீ நாகமுத்து மாணவர் குழு மற்றும் மகளிர் சுய உதவி குழுக்கள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.