Thiruma On Armstrong Murder: ஆம்ஸ்ட்ராங் படுகொலை, “சரணடைந்தவர்கள் உண்மையான கொலையாளிகள் அல்ல - திருமாவளவன் அதிரடி
Thiruma On Armstrong Murder: ஆம்ஸ்ட்ராங்கிற்கு காவல்துறை உரிய பாதுகாப்பு அளித்திருக்க வேண்டும் என, திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Thiruma On Armstrong Murder: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரண்டைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் அல்ல என, விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
உரிய பாதுகாப்பு அளித்திருக்க வேண்டும் - திருமாவளவன்:
சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட, ஆம்ஸ்ட்ராங்கின் உடலை நேரில் பார்த்து அஞ்சலி செலுத்தினார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், ”ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் அல்ல. உண்மை குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்ய வேண்டும். 8 பேர் சரணடைந்துவிட்டதால், புலன் விசாரணையை காவல்துறை முடித்துவிடக் கூடாது. ஆம்ஸ்ட்ராங் போன்றோருக்கு காவல்துறை உரிய பாதுகாப்பு அளித்திருக்க வேண்டும். கூலிப்படை கும்பலை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர வேண்டும். பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ்வாதி கட்சி அலுவலகத்திலேயே, ஆம்ஸ்ட்ராங்கின் உடலை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும்” என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
உண்மையான குற்றவாளிகள் யார்? - செல்வப்பெருந்தகை
இதேபோன்று, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு, காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகையும் நேரில் அஞ்சலி செலுத்தினர். பின்பு செய்தியாளர்களை சந்தித்தவர், “ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றவாளிகள் என காவல்துறையினரிடம் சரணடைந்தவர்கள் மீது நம்பிக்கை இல்லை. உண்மையான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ்வாதி கட்சி அலுவலகத்திலேயே, ஆம்ஸ்ட்ராங்கின் உடலை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும்” என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
ஆளும் திமுக கூட்டணியில் உள்ள முக்கிய இரண்டு கட்சிகளின் தலைவர்களே இப்படி ஒரு கருத்தை கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கொலையாளிகள் தொடர்பான உண்மைத்தன்மை தொடர்பாக பொதுவெளியிலும் பல்வேறு சந்தேகங்கள் எழத்தொடங்கியுள்ளன.