Income Tax: மனைவிக்கு வீட்டு வாடகை கொடுத்து ரூ.1.80 லட்சம் வரியை சேமிக்கலாம் - எப்படி? முழு விவரம் இதோ..!
Income Tax: வீட்டு வாடகையை கணக்கில் காட்டி வரிச் சுமையை குறைப்பது எப்படி என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
Income Tax: வீட்டு வாடகையை கணக்கில் காட்டி வரிச் சுமையை குறைப்பது எப்படி என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
வருமான வரிச் சுமையை குறைக்க ஆலோசனை:
2023-24 நிதியாண்டிற்கான வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், வரும் 31ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. வரி செலுத்துவோர் விரைவாக பணத்தைத் திரும்பப் பெறவும், கடைசி நிமிட அவசரத்தைத் தவிர்க்கவும் வருமான வரி தாக்கல் பணிகளை விறுவிறுப்பாக செய்து வருகின்றனர். இந்த சூழலில் வரியைச் சேமிக்க பல்வேறு உத்திகளைக் கையாளலாம். குறிப்பாக தேசிய ஓய்வூதிய அமைப்பு, பணியாளர் வருங்கால வைப்பு நிதி, ஈக்விட்டி இணைக்கப்பட்ட சேமிப்புத் திட்டம், தபால் அலுவலக மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் மற்றும் நிலையான வைப்புத்தொகை போன்ற திட்டங்களில் பணத்தை முதலீடு செய்யலாம். அதுதொடர்பான ஆவணங்களை சமர்பித்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை வரிவிலக்கும் பெறலாம்.
வாடகை மூலம் வரி விலக்கு:
வரியைச் சேமிப்பதற்கான மற்றொரு சிறந்த வழிமுறை, வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA). உங்கள் மனைவிக்கு வீட்டு வாடகை கொடுப்பதன் மூலம் பணத்தை சேமிப்பதுடன், வரிச்சுமையையும் குறைக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? அதுவும் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் வரை வரியைச் சேமிக்க உங்களுக்கு வாய்ப்புள்ளது. இதற்காக நீங்கள் உங்கள் மனைவியுடன் சரியான வாடகை ஒப்பந்தத்தை பெறுவதோடு, ஒப்பந்தத்தில் வாடகைத் தொகை மற்றும் பிற விதிமுறைகளை தெளிவாக குறிப்பிட வேண்டும்.
வீட்டு வாடகை மூலம் வரி விலக்கு பெறுவது எப்படி?
நோட்டரியின் முத்திரை மற்றும் கையொப்பத்துடன் கூடிய வாடகை ஒப்பந்தத்தை எந்த நீதிமன்றத்திலிருந்தும் பயனாளர்கள் பெறலாம். எச்ஆர்ஏவின் கீழ் வாடகையை வங்கி பரிமாற்றம் அல்லது காசோலை மூலம் செலுத்த வேண்டும். இதனால் பணம் செலுத்தியதற்கான ஆதாரம் உங்களிடம் இருக்கும். இவ்வாறு செய்வதன் மூலம் நீங்கள் நிறைய வரியை மிச்சப்படுத்தலாம் மற்றும் பணத்தையும் நீங்கள் சேமிக்கலாம்.
HRA ஐப் பெற, முதலில் உங்கள் முதலாளி வழங்கிய HRA அளவை கவனியுங்கள். பிறகு செலுத்தப்பட்ட வாடகையைக் கணக்கிட்டு, மீதமுள்ள தொகையைத் தீர்மானிக்க உங்கள் அடிப்படைச் சம்பளத்தில் 10 சதவீதத்தைக் கழிக்கவும். இதன் மூலம் நீங்கள் ஒரு பெருநகரத்தில் வசிக்கிறீர்கள் என்றால, நீங்கள் செலுத்திய வாடகையில் 50 சதவிகிதத்தை திருமப்க் கோரலம். அதுவே பெருநகரம் அல்லாத நகரங்களில் தங்கியிருப்பவர்கள் 40 சதவிகித பணத்தை திரும்பக் கோரலாம்.
ரூ.1,80,000 வரியைச் சேமிக்கலாம்..!
உதாரணமாக, ஒருவரது மாத வருமானம் ஒரு லட்ச ரூபாய் என்று கருதுவோம். இதில் 20 ஆயிரம் ரூபாய் HRA (House Rent Allowance) அடங்கும். அதாவது ஆண்டிற்கு 2 லட்சத்து 40 ஆயிரம் வீட்டு வாடகை கொடுப்பணவாக ஊதியத்தில் பெறுகிறீர்கள். உங்கள் மனைவிக்கு வீட்டு வாடகையாக மாதம் ரூ.25,000 செலுத்துகிறீர்கள். அதன்படி, ஆண்டிற்கு வாடகை கட்டணமாக 3 லட்ச ரூபாய் செலுத்துகிறீர்கள். அடிப்படை சம்பளத்தில் 10 சதவீதம் அதாவது 12 மாதங்களுக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் ஆக உள்ளது. அந்த தொகையை உங்களது மொத்த வாடகையில் இருந்து கழித்தால், மீதமுள்ள ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை வரியில்லா வீட்டு வாடகை கொடுப்பனவாக பெறலாம்.
HRA ஐப் பெறும்போது, வாடகை ஒப்பந்தம் செல்லுபடியாகும் என்பதையும், அதைச் செய்வதில் எந்த மோசடியும் செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பேங்க் ஸ்டேட்மெண்ட் அல்லது காசோலை மூலம் மட்டுமே வாடகையை செலுத்துங்கள். இதன் மூலம் பணம் செலுத்திய விவரங்கள் உங்களிடம் இருக்கும். இது தவிர, உங்கள் மனைவியும் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்கிறார் என்பதை உறுதிப்படுத்தவும்.