திருக்கடையூர் கோயிலில் தருமபுரம் ஆதீன மடாதிபதிக்கு கலசபிஷேகம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு
தருமபுரம் ஆதீன குரு மகா சன்னிதானத்தின் ஜென்ம நட்சத்திர விழாவை முன்னிட்டு திருக்கடையூர் கோயிலில் சிறப்பு பூஜைகள் யாகங்கள் நடத்தப்பட்டு கலசபிஷேகம் செய்து வைக்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான உலக புகழ் பெற்ற அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தகடேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. புராண காலத்தில், பக்த மார்க்கண்டேயர் உயிரை பறிப்பதற்காக, எமன் பாசக்கயிற்றை வீசியபோது, மார்க்கண்டேயர், இங்கிருக்கும் சிவலிங்கத்தை கட்டியணைத்தார். அப்போது, இறைவன் தோன்றி, எமனை சம்ஹாரம் செய்ததாக, ஆலய வரலாறு கூறுகின்றது. அழித்தல் தொழில் நின்று போனதால் பாரம் தாங்காத பூமா தேவியின் வேண்டுகோளுக்கு இணங்க, எமனை, சிவபெருமான் மீண்டும் உயிர்ப்பித்தார்.
இதனால் இங்கு, ஆயுள் சம்பந்தமான, வழிபாடுகள் 60, 80,100 வயது பூர்த்தி அடைந்தவர்கள் ஆயூஷ் ஹோமம் திருமணங்கள் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டால் ஆயுள் விருத்தி கிடைக்கும் என்பதால் இவ்வாலயத்தில் ஆண்டின் 365 நாட்களும் திருமணமும், யாகங்களும் நடைபெறும் ஒரே ஸ்தலாமாகும். இத்தகைய பல்வேறு சிறப்புகள் வாய்ந்த கோயிலுக்கு நாள் தோறும், அரசியல் பிரமுகர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள், சினிமா பிரபலங்கள் என பலரும் வந்து செல்கின்றனர். இந்நிலையில் இத்தலத்தில் சிறப்பு பூஜைகள் செய்து சுவாமியை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம் என்பதால் தருமபுரம் ஆதீன மடாதிபதியின் ஜென்ம நட்சத்திர தினமான இன்று காலை 7 மணிக்கு தருமபுரம் ஆதீனம் 27 -வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வருகை தந்தார்.
அவரை பூரண கும்பம் மரியாதை கொடுத்து வரவேற்றனர். கோயிலுக்குள் சென்ற தருமபுரம் ஆதீனம் குருமகா சன்னிதானம் கோபூஜை, கஜ பூஜை செய்தார். தொடர்ந்து கோயில் சங்கு மண்டபத்தில் கால சம்ஹார மூர்த்தியை எழுந்தருள செய்து 16 கலசங்கள் மற்றும் 108 சங்குகள் வைக்கப்பட்டு கணபதி, நவகிரக, ஆயுஷ், தன்வந்திரி, சுதர்சன மகாலட்சுமி, அஷ்டலட்சுமி, நட்சத்திர சாந்தி ஹோமங்கள் செய்யப்பட்டு ருத்ராபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து குருமகா சன்னிதானத்திற்கு தட்சிணாமூர்த்தி சன்னதியில் கலாசபிஷேகம் மற்றும் தீபாராதனை செய்து வைக்கப்பட்டது.
CM MK Stalin: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை பயணம் திடீர் ரத்து? உளவுத்துறை ரிப்போர்ட் காரணமா..?
தொடர்ந்து தருமபுரம் ஆதீன குருமகா சன்னிதானம் கள்ள விநாயகர், சுவாமி, அம்பாள் மற்றும் கால சம்ஹார மூர்த்தி சன்னதிகளில் சிறப்பு வழிபாடு நடத்தினார். பின்னர் குரு மகா சன்னிதானம் திருக்கடையூர் கோயில் தேவஸ்தான சிப்பந்திகளுக்கு அடையாள அட்டை மற்றும் சீருடைகளை வழங்கியதுடன், கோயில் வளாகத்தில் ரோட்டரி சங்கம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அர்ச்சனை சீட்டு கவுன்ட்டரை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீன கட்டளை தம்பிரான்கள், தருமபுரம் ஆதீன தலைமை பொது மேலாளர் ரங்கராஜன், ஆதீன கோயில்களின் தலைமை கண்காணிப்பாளர் மணி, பாடசாலை நிர்வாக செயலர் ஆடிட்டர் குரு சம்பத்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.