CM MK Stalin: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை பயணம் திடீர் ரத்து? உளவுத்துறை ரிப்போர்ட் காரணமா..?
கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் மூலம் வரும் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களுக்கான ஆய்வு கூட்டம் நடைபெறவிருந்தது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 9ஆம் தேதி செல்வதாக இருந்த திட்டம் திடீரென கைவிடப்பட்டுள்ளது.
கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் மூலம் வரும் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களுக்கான ஆய்வு கூட்டம் நடைபெறவிருந்தது. வருகின்ற 9ஆம் தேதி கோவையில் நடைபெறவிருந்த இந்த ஆய்வு கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆய்வு கூட்டத்தோடு செம்மொழி பூங்காவிற்கு அடிக்கல், 7 ஆயிரம் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட திட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு, மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் பணிகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில் முதல்வரின் பயண திட்டம் ஒத்திவைக்கப்படுவதாகவும், புதிய பயண திட்டம் விரைவில் வெளியிடப்படும் என முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முதல்வரின் பயணத் திட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டதற்கு உளவுத்துறை அளித்த ரிப்போர்ட்டே காரணம் என தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தீபாவளி பண்டிகை 12ஆம் தேதி வரும் நிலையில், கடை வீதிகளில் மக்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. அவர்களுக்கான பாதுகாப்பை வழங்குவதில் காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் மும்முரம் காட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலில் முதலமைச்சர் கோவை செல்லாமல், ஆய்வு கூட்டத்தை தீபாவளி முடிந்து வைத்துக்கொள்ளலாம் என உளவுத்துறை அறிக்கை அளித்துள்ளது என கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன் காரணமாகவே முதல்வரின் பயணத் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் கேராளாவில் நடந்த குண்டுவெடிப்பை தொடர்ந்து கோவை மாவட்ட எல்லையில் தீவிர கண்காணிப்பும் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. தீபாவளி நேரத்தில் எந்த அசம்பாவிதங்களும் தமிழ்நாட்டில் நடந்துவிடக்கூடாது என்பதில் கவனம் செலுத்தி வரும் தீவிர நடவடிக்கைகளை தமிழக காவல்துறை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

