ஓம் நமச்சிவாய! திருவண்ணாமலை பற்றி நாம் அறியாத ரகசியங்கள் இத்தனையா? பக்தர்களே படிங்க
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை கோயில் பற்றி பக்தர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் பற்றி கீழே காணலாம்.

அனைத்திற்கும் ஆதியாக போற்றி வணங்கப்படுபவர் சிவபெருமான். சிவபெருமான் தலங்களிலே மிக மி முக்கியமானதாகவும், சக்திவாய்ந்ததாகவும் பக்தர்களால் போற்றி வணங்கப்படும் ஆலயம் திருவண்ணாமலை. ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை ஆலயத்தில் குவிந்து வருகின்றனர்.
அப்பேற்பட்ட திருவண்ணாமலை பற்றி நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய அற்புத தகவல்கள் குறித்து கீழே காணலாம்.
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையின் புகழ் என்னென்ன?
- திருப்புகழ், கந்தர் அனுபூதி, திருவெம்பாவை, திருவம்மானை, அருணாச்சல அஷ்டகம் போன்ற புனித நூல்கள் திருவண்ணாமலை திருத்தலத்திலே பிறந்தது.
- இந்த திருவண்ணாமலைதான் பிரம்மன், திருமாலின் ஆணவம் அழித்த தலம்.
- பார்வதி தேவிக்கு தன்பாதியைத் தந்து சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரர் கோலம் கொண்ட தலம்.
- கார்த்திகை தீபத்தில் மூலத்தலம்.
- அப்பர், சுந்தர், திருஞானசம்பந்தர் மற்றும் மாணிக்கவாசகர் நால்வரும் சிவபெருமானின் புகழ் பாடிய தலம் திருவண்ணாமலை.
- திருவண்ணாமலை உள்ளே சிவகங்கை தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் ஆகிய இரண்டு பெரிய குளங்கள் உள்ளது.
- கோயிலின் உள்ளே 142 சந்நிதிகள், 306 மண்டபங்கள், 1000 தூண்கள் கொண்ட ஆயிரங்கால் மண்டபம் உள்ளது.
- திருவண்ணாமலையில் 22 விநாயகர்கள் உள்ளனர். ஆயிரங்கால் மண்டபம் அடியில் பால ரமணர் தவம் செய்த பாதாள லிங்கம் உள்ளது.
- திருவண்ணாமலை திருக்கோயிலில் முருகப்பெருமான் இளையனார் என்று அழைக்கப்படுகிறார்.
- அருணகிரிக்காக முருகப்பெருமான் காட்சி தந்தது இதே திருவண்ணாமலையில்தான் ஆகும். இங்கு முருகப்பெருமான் 3 இடங்களில் காட்சி தருகிறார். கம்பத்திளையனார் என்ற பெயரில் வளைகாப்பு மண்டபத் தூணில் காட்சி தருகிறார்.
- சிவாலயங்களிலே காமதகனம் நடக்கும் ஒரே சிவாலயம் திருவண்ணாமலை மட்டுமே. அதேபோல, அருணகிரிக்கு விழா எடுக்கும் ஒரே ஆலயமும் இது மட்டுமே ஆகும்.
- திருவண்ணாமலையை கிரிவலம் வரும்போது ஒவ்வொரு இடத்தில் நின்று பார்த்தால் 27 வகை தரிசனத்தை காணலாம்.
- மகாதீப தரிசனம் கண்டால் அவர்களின் 21 தலைமுறையினருக்கும் புண்ணியம் கிட்டும் என்பது ஐதீகம் ஆகும்.
- திருவண்ணாமலை மலையின் கிழக்கில் இந்திர லிங்கம், தென்கிழக்கில் அக்னிலிங்கம், தென்மேற்கில் நிருதி லிங்கம், தெற்கில் எமலிங்கம், மேற்கில் வருணலிங்கம், வடமேற்கில் வாயுலிங்கம், வடக்கில் குபேரலிங்கம், வடகிழக்கில் ஈசான்ய லிங்கம் உள்ளது. கிரவலம் உலா வரும்போது இந்த எட்டு லிங்கங்களின் தரிசனமும் நாம் செய்துவிடலாம்.
- புராணங்களில் திருவண்ணாமலை கிருத யுகத்தில் அக்னி மலையாகவும், திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் தாமிர மலையாகவும் திகழ்ந்து, தற்போது இந்த கலியுகத்தில் கல் மலையாக திகழ்கிறது.
நினைத்தாலே முக்தி தரும் ஆலயமாக திகழும் சிவபெருமானின் திருவண்ணாமலை கோயிலில் ஒவ்வொரு மாத பெளர்ணமி, அமாவாசை நாட்களில் லட்சக்கணக்கில் பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். சமீபகாலமாக தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் அதிகளவு பக்தர்கள் குவிகின்றனர். இதனால், பக்தர்களின் பாதுகாப்பிற்காக தற்போது பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.





















