ஒரு ஊரே கடலில் மிதந்து வருகிறது... உலகின் மிகப்பெரிய சரக்குக் கப்பல் பிரிட்டன் வந்தடைந்து!
நியூயார்க்கில் உள்ள 1,250 அடி உயர எம்பயர் ஸ்டேட் கட்டிடம், பாரிசில் 1,063 அடி உயர ஈபிள் கோபுரத்தை சாய்த்தால், எவர் ஆஷ் கப்பலே பெரிதாக இருக்கும்
உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பலான எவர் ஆஷ் பிரிட்டன் வந்தடைந்தது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் 3 மாதங்கள் உள்ள நிலையில், அப்போது பிரிட்டனில் ஏற்படும் பொருட்கள் பற்றாக்குறையை தவிர்க்க ஏராளமான நுகர்வோர் பொருட்களின் சரக்குகளுடன் பிரிட்டனுக்கு வந்துள்ளது எவர் ஆஷ்.
உலகின் முன்னணி கப்பல் தயாரிப்பு நிறுவனமான எவர் கிரீன் மெரைன் கப்பல் நிறுவனம் இந்த எவர் ஆஷ் கப்பலை உருவாக்கி இருக்கிறது. தைவான் நாட்டை தலைமையிடமாக கொண்ட இந்த எவர்கிரீன் மெரைன் நிறுவனம் எவர் எனத் தொடங்கும் சரக்குக் கப்பல்களை தயாரித்து வருகிறது. ஆயிரக்கணக்கான கண்டெய்னர்களை சுமந்துகொண்டு செல்ஃபோல்கின்னில் உள்ள ஃபெலிக்ஸ்ஸ்டோவ் துறைமுகத்துக்கு வந்தடைந்தது எவர் ஆஷ் என்ற ராட்சத கப்பல். இதனை கண்டதும் அங்குள்ள மக்கள் செல்போனில் வாகனங்களை நிறுத்திவிட்டு வேடிக்கை பார்க்க குவிந்தனர்.
2.35 லட்சம் டன் எடை கொண்ட இந்த ராட்சத கப்பல், கடந்த மார்ச் மாதம் சூயஸ் கால்வாயில் சிக்கி உலக கடல் வாணிபத்தையே ஸ்தம்பிக்க வைத்த எவர் கிவன் கப்பலை விட பெரியது. இரண்டு கப்பல்களையும் தயாரித்தது எவர் கிரீன் மெரைன் நிறுவனம் தான். இந்த கப்பல் வரும் புதன்கிழமை ஹாம்பர்க்கிற்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. பனாமா தீவுகளில் பதிவு செய்யப்பட்டு உள்ள இந்த பிரம்மாண்ட சரக்குக் கப்பல் 23,992 கண்டெய்னர்களை சுமந்து செல்லும்.
உலகின் மிகப்பெரிய சரக்குக்கப்பலாக இருந்து வந்த எச்.எம்.எம். அல்ஜெகிரஸை விட இது சுமந்து செல்லும் கண்டெய்னர்களின் எண்ணிக்கை 26 மடங்கு அதிகம். 1,312 அடி நீளமும் 201 அடி அகலமும் கொண்ட எவர் ஆஷ் சரக்குக் கப்பல் உலக கப்பல் வர்த்தகத்தின் அற்புதமான அடையாளமாக பார்க்கப்படுகிறது. இந்த கப்பல் 53 கோடி மொபைல் போன்கள் அல்லது 96 லட்சம் தொலைக்காட்சிகள் அல்லது 24 லட்சம் வாஷிங் மெஷின்களை எடுத்துச் செல்லும் திறன் கொண்டது. நியூயார்க்கில் உள்ள 1,250 அடி உயர எம்பயர் ஸ்டேட் கட்டிடம், பாரிசில் 1,063 அடி உயர ஈபிள் கோபுரத்தை சாய்த்தால், எவர் ஆஷ் கப்பலே பெரிதாக இருக்கும்.
பிரிட்டனில் அத்தியாவசிய பொருட்கள் விநியோகத்தில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக தட்டுப்பாடு ஏற்பட்டது. உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை காரணமாக மக்கள் தங்கள் அலமாரிகளில் உள்ள இடைவெளிகளின் படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தனர். கிறிஸ்துமஸ் நெருங்கி வரும் இந்த நேரத்தில் இது மிகப்பெரும் தலைவலியாக அந்நாட்டு மக்களுக்கு இருந்து வந்தது. இத்தகைய சூழலில் இத்தனை ஆயிரம் கண்டெய்னர்களுடன் எவர் ஆஷ் கப்பல் சரியான நேரத்து வந்திருப்பது பாதிப்பை கட்டுப்படுத்தும் என நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.
ஆனால், பிரிட்டனில் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதாக வெளியான தகவலை அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சனின் செய்தித் தொடர்பாளர் டூம்ஸ்டே மறுத்து உள்ளார். பிரிட்டனில் மிகச் சிறந்த உணவு விநியோகச் சங்கிலி இருப்பதாகவும், எத்தகைய சூழலிலையும் தாங்கும் கட்டமைப்பு உள்ளதாகவும் அவர் கூறி உள்ளார்.
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறிய பிரெக்ஸிட் முடிவு மற்றும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக லாரி டிரைவர்கள் மற்றும் உணவு பதப்படுத்தும் ஊழியர்கள் பலர் பணிக்கு வரவில்லை. தொழிலாளர்கள் பற்றாக்குறை காரணமாக உற்பத்தியும், சரக்கு போக்குவரத்தும் பிரிட்டனில் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.