World Population : நாளையுடன் 800 கோடியைத் தொடும் உலக மக்கள் தொகை.. ஐநா தெரிவிக்கும் சுவாரஸ்யங்கள்..
2050-ஆம் ஆண்டுவாக்கில் உலக மக்கள்தொகையில் பாதிக்கும் மேல், இந்தியா, பாகிஸ்தான், தான்சானியா, எகிப்து, உள்ளிட்ட 8 நாடுகளில்தான் அடங்கியிருக்கும் என்றும் ஐநா முன்னதாகத் தெரிவித்துள்ளது
உலகின் ஒட்டுமொத்த மக்கள்தொகை நாளையுடன் 800 கோடியைத் தொடப்போகிறது எனும் தகவல் வெளியாகி உள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் புதிய மக்கள்தொகை மதிப்பீட்டில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக மக்கள்தொகை 700 கோடியில் இருந்து 800 கோடியைத் தொடுவதற்கு மொத்தம் 12 ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளது. இந்நிலையில், 900 கோடியைத் தொடுவதற்கு மேலும் 15 ஆண்டுகள் ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
BREAKING 🚨: World population is projected to hit 8 billion in a few hours pic.twitter.com/TlGYl7Fc7w
— Latest in space (@latestinspace) November 11, 2022
இந்தத் தகவலை கடந்த ஜூலை 11ஆம் உலக மக்கள் தொகை தினத்தன்று ஐநா வெளியிட்டிருந்தது. தற்போது கிட்டத்தட்ட 800 கோடியை நெருங்கியுள்ள மக்கள் தொகை எண்ணிக்கை, நாளை இந்த இலக்கைத் தாண்டும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
அன்டோனியோ குட்டரஸ் நம்பிக்கை!
இப்படி 800 கோடியை அடைந்து மக்கள் தொகை புதிய உச்சத்தை எட்டுவது ஒரு பக்கம் அச்சத்தை ஏற்படுத்தினாலும், ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் இதுகுறித்து பெரும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
“ஊட்டச்சத்து, பொது சுகாதாரம் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள அறிவியல் முன்னேற்றங்கள் மற்றும் மேம்பாடுகளுக்கு இது ஒரு சான்று.
நமது வாழ்நாளை நீட்டித்து, மகப்பேறுகால குழந்தை இறப்பு விகிதத்தை வெகுவாகக் குறைத்துள்ள மருத்துவத்துறையின் மகத்துவத்தை போற்றுவதற்கான நேரம் இது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், ”உலக மக்கள்தொகை 800 கோடியை எட்டுவது என்பது, நமது பூமியைக் காக்கும் நம்முடைய கூட்டுப் பொறுப்பை நினைவூட்டும் விஷயமாகும். நமது பொறுப்புகளில் எங்கே பின்தங்கியிருக்கிறோம் என்று சிந்திக்க வேண்டும். நமது மனித குடும்பம் பெரிதாக வளரும்போது, அது மேலும் பிளவுபடவும் செய்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
சீனாவை பின்னுக்குத்தள்ளி முதலிடம் பிடிக்கும் இந்தியா?
மேலும் சீனாவின் மக்கள்தொகை அடுத்த ஆண்டு முதல் குறையத் தொடங்கும் என்றும் இந்தியா உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக மாறும் என்றும் எதிர்ப்பார்ப்பதாக அறிவித்து இந்தியர்களுக்கு ஐநா அதிர்ச்சியூட்டியுள்ளது.
2021ஆம் ஆண்டின்படி சீனாவின் கருவுறுதல் விகிதம் 1.16 ஆகும். கொரோனா தொற்றுப் பரவல் சீனாவைச் சேர்ந்த பலரது குழந்தை பெற்றுக்கொள்ளும் விருப்பத்தின் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், சீனாவில் பிறப்பு விகிதம் இந்த ஆண்டு மிகவும் வீழ்ச்சியடையும் என்றும் மக்கள்தொகை ஆய்வாளர்கள் முன்னதாகத் தெரிவித்துள்ளனர்.
அந்நாட்டில் ஏற்கெனவே பிறப்பு விகிதமானது 10.6 மில்லியனில் இருந்து 10 மில்லியனுக்கும் கீழே குறைந்துள்ளதாகவும், 2020ஆம் ஆண்டை விட 11.5 விழுக்காடு பிறப்பு விகிதம் குறைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
8 நாடுகளில் அதிக மக்கள்தொகை
முன்னதாக சீன தலைநகர் பெய்ஜிங்கில் கடந்த ஆண்டு தம்பதிகள் மூன்று குழந்தைகளைப் பெற அனுமதி வழங்கப்பட்டது. பிறப்பு விகித அளவை சீராக்க இவ்வாறு அறிவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
வரும் காலத்தில் 2050ஆம் ஆண்டுவாக்கில் உலகின் மக்கள்தொகையில் பாதிக்கு மேல், இந்தியா, பாகிஸ்தான், தான்சானியா, எகிப்து, எத்தியோப்பியா, காங்கோ, பிலிப்பைன்ஸ், நைஜீரியா ஆகிய 8 நாடுகளில் தான் அடங்கியிருக்கும் என்றும் ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.