விக்டோரிய மகாராணி பரிசளித்த 121 ஆண்டுகள் பழமையான பரிசுப்பொருள் கண்டுபிடிப்பு
விக்டோரியா மகாராணி இங்கிலாந்து படை வீரர்களுக்கு பரிசளித்த 121 ஆண்டுகள் பழமையான சாக்லேட் பார் டப்பா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற இரண்டாம் பூவர் போரின் போது போரிட்ட பிரித்தானியப் பேரரசு துருப்புக்களுக்கு விக்டோரியா மகாராணி பரிசளித்த 121 ஆண்டுகள் பழமையான சாக்லேட் பார் கொண்ட தகரத்தால் செய்யப்பட்ட டப்பா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
11 அக்டோபர் 1899 முதல் 31 மே 1902 வரை தென்னாப்பிரிக்கக் குடியரசு மற்றும் ஆரஞ்சு விடுதலை இராஜ்ஜியம் என்ற இரண்டு தன்னாட்சி பொருந்திய நாடுகளுக்கு எதிராக பிரித்தானியப் பேரரசு போரிட்டது. ஆப்ரிகன் மொழியில் இரண்டாம் விடுதலைப் போர் அல்லது இரண்டாம் ஆங்கில-பூவர் போர் என்று அழைக்கப்படுகிறது.
கண்டறியப்பட்ட சாக்லேட் சர் ஹென்றி எட்வர்ட் பாஸ்டன்-பெடிங்ஃபீல்ட் என்ற ஆங்கில பிரபுக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. மேலும், அந்த சாக்லேட் டப்பாவில், "எனது, இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்" என்ற இங்கிலாந்து இளவரசி கைப்பட எழுதிய வாசகமும், இளவரசி உருவப் படமும் இடம் பெற்றிருந்தன.
போரின் போது துருப்புக்களிடம் புத்துணர்ச்சியை அதிகரிக்க இங்கிலாந்து இளவரசி 100,000 அரை பவுண்டு (226 கிராம்) சாக்லேட் பார்களை பரிசளித்தார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இங்கிலாந்து தேசிய அறக்கட்டளை இதுகுறித்து கூறுகையில், " 100 ஆண்டுகளுக்கு முன்பாக பரிசளிக்கப்பட்ட சாக்லேட்டின் உண்மையான உரிமையாளரைக் கண்டுபிடிப்பது மிகவும் அரிதான ஒரு காரியம். ஏனெனில் பெரும்பாலான வீரர்கள் அவற்றை சாப்பிட்டிருப்பார்கள்" என்று தெரிவித்தது.
இரண்டாம் பூவர் போரில் பிரித்தானிய படை வெற்றி பெற்றது; இரு குடியரசுகளும் ஐக்கிய இராச்சியத்தில் இணைக்கப்பட்டன. இறுதியாக, இவ்விரு குடியரசுகளும் 1910இல் தென்னாப்பிரிக்க ஒன்றியத்தில் அங்கமாயின என்பது வரலாறு.