Turkey Earthquake: துருக்கி நிலநடுக்கம்; 12 நாட்களுக்குப் பின் உயிருடன் இளைஞர் மீட்பு - தொடர் நம்பிக்கையில் மீட்புக்குழு
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி, சிரியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில் 12 நாட்களுக்குப் பின் உயிருடன் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி, சிரியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில் 12 நாட்களுக்குப் பின் உயிருடன் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.
துருக்கி நிலநடுக்கம்:
துருக்கி- சிரியா எல்லைப்பகுதியான காசியான்டெப் மாகாணத்தில் அமைந்துள்ள நூர்டகி நகரத்திற்கு கிழக்கே 26 கிலோமீட்டர் தொலைவில் 4.1 கிலோமீட்டர் ஆழத்தில் கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான நிகழ்ந்த இந்த நிலநடுக்கத்தால் துருக்கி மற்றும் சிரியாவில் பல கட்டிடங்கள் சீட்டுகட்டு போல் சரிந்து மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. என்ன நடக்கப்போகிறது என மக்கள் அதிர்ச்சியில் இருந்து உணர்வதற்குள் அடுத்ததாக துருக்கியின் ஹரமனமராஸ் மாகாணத்தில் உள்ள எல்பிஸ்டன் மாவட்டத்தில் 7.5 என்ற ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஐந்து முறை ஏற்பட்ட நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை நேரம் என்பதால் மக்கள் இடிபாடுகளுக்குள் சிக்கினர். உடனடியாக களத்தில் இறங்கிய மீட்பு படையினர் மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலநடுக்கத்தால் துருக்கி 5 முதல் 6 மீட்டர் வரை நகர்ந்து இருக்க கூடும் என ஆராய்ச்சியாளர்கள் கணித்த நிலையில் நாளுக்கு நாள் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
12 நாட்களுக்கு பிறகு மீட்பு:
மோப்ப நாய், ட்ரோன் கேமரா உள்ளிட்டவை உதவியுடன் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை கண்டறியும் பணி இரவு, பகலாக நடக்கிறது. மேலும் இந்தியா மற்றும் ரஷ்யா போன்ற பல்வேறு நாடுகளை சேர்ந்த மீட்பு படையினரும் ஈடுபட்டுள்ளனர். சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுமார் 50 லட்சம் பேர் வரை வீடுகளை இழந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சிரியாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடமாடும் வீடுகளை வழங்க கத்தார் அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் துருக்கியில் 12 நாட்களுக்குப் பின் இடிபாடுகளுக்குள் இருந்து 45 வயதுள்ள நபர் மீட்கப்பட்டுள்ளார். கிட்டதட்ட 278 மணி நேரம் கடந்த நிலையில் அவர் மீட்கப்பட்டுள்ள சம்பவம், மீட்புக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதேபோல் 250 மணி நேரத்தை 3 பேரும் நேற்று மீட்கப்பட்டனர். இன்னும் பலர் சிக்கியிருக்கலாம் என்பதால் தொடர்ந்து மீட்பு பணி நடைபெறுகிறது. இதேபோல் துருக்கியில் இடிபாடுகளுக்கு அடியில் இருந்து ஒரு பூனை காப்பாற்றப்பட்ட நிலையில், அது தன்னை காப்பாற்றியவரை விட்டு நகர மறுக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளது.