Gaza Attack: காசாவில் 200யை தாண்டிய பலி எண்ணிக்கை; முற்றுப்புள்ளி வைக்க வலுக்கும் கோரிக்கை
"இஸ்ரேல் - பாலஸ்தீன மோதல் தொடங்கியதிலிருந்து பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 212 பேர் பலியாகியுள்ளனர். இவர்களில் 61 பேர் குழந்தைகள். காசாவிலிருந்து இஸ்ரேலை நோக்கி 3000 ராக்கெட்டுகள் ஏவப்பட்டன. இதில் இஸ்ரேல் நாட்டவர் 10 பேர் இறந்துள்ளனர்.
இஸ்ரேல் - பாலஸ்தீன மோதல் இரண்டாவது வாரத்தை எட்டியிருக்கிறது. சர்ச்சைக்குரிய காசா ஸ்ட்ரிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 200ஐ கடந்துள்ளது. பாலதீன தரப்பில் 1500 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் இந்த மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை குரல்கள் வலுவடைந்துள்ளன.
அல்ஜசீரா பத்திரிகையின் செய்திக் குறிப்பில், "இஸ்ரேல் - பாலஸ்தீன மோதல் தொடங்கியதிலிருந்து பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 212 பேர் பலியாகியுள்ளனர். இவர்களில் 61 பேர் குழந்தைகள். காசாவிலிருந்து இஸ்ரேலை நோக்கி 3000 ராக்கெட்டுகள் ஏவப்பட்டன. இதில் இஸ்ரேல் நாட்டவர் 10 பேர் இறந்துள்ளனர். இவர்களில் ஒருவர் இந்தியப் பெண், ஒரு குழந்தையும் அடங்கும்" எனப் புள்ளிவிவரங்களுடன் சேத விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் பாலஸ்தீன மோதல் பின்னணி:
இஸ்ரேல் பாலஸ்தீன மோதல் 1967ல் தொடங்கியது எனலாம். 1967ல் மத்திய கிழக்குப் போர் நடைபெற்ற போது கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் கைப்பற்றியது. மேலும், ஒருங்கிணைந்த ஜெருசலேமே தங்கள் தலைநகரமாக இருக்கும் என்று அந்நாடு பிரகடனப்படுத்தியது. இஸ்ரேலின் இந்தப் பிரகடனத்தை இன்றளவும் பாலஸ்தீனம் ஏற்கவில்லை. அதேபோல், பெரும்பாலான உலக நாடுகள் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக ஏற்கவில்லை.
எதிரிக்கு எதிரி நண்பன் என்பது போல், ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும் அங்கீகரித்தார். இதையடுத்து இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே மோதல் தொடங்கியது.
ஹமாஸின் பங்கு என்ன?
பாலஸ்தீனத்தின் தன்னாட்சி பெற்ற பகுதியாக காசா ஸ்ட்ரிப் உள்ளது. இந்தப் பகுதியில் ஹமாஸ் அமைப்பு ஆட்சி செலுத்துகிறது. இந்த அமைப்பை பயங்கரவாத இயக்கமாக இஸ்ரேல் உள்ளிட்ட பல்வேறு உலகநாடுகளும் கருதுகின்றன. கடந்த 2017 முதல் ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவரானார் யாஹ்யா அல் சின்வார். அதன்பின்னர் அவ்வப்போது தாக்குதல் நடப்பதும் பின்னர் உலக நாடுகளின் மத்தியஸ்தால் போர் நிறுத்தம் ஒப்பந்தமாவதும் தொடர்கதையாகி வருகிறது.
மீண்டும் வெடித்த மோதல்
இரண்டாண்டுகளாக அமைதியாக இருந்த இஸ்ரேல் பாலஸ்தீனத்திடையே மீண்டும் மோதல் வெடித்தது எப்படி எனப் பார்ப்போம். பாலஸ்தீனர்கள் ஜெருசலேமில் அமைந்துள்ள அல் அக்ஸா மசூதியில் ரம்ஜானை முன்னிட்டு மே 8-ம் தேதி இரவில் தொழுகையில் ஈடுபட்டனர். சுமார் 90,000 பாலஸ்தீனர்கள் அப்பகுதியில் கூடியிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இஸ்ரேல் போலீஸார் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இதில் பாலஸ்தீனர்கள் பலர் காயமடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து பாலஸ்தீனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஹமாஸ் இயக்கத்தினர் வான்வழித் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி அளிக்கும் வகையில் இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் ராணுவத்துக்கும், ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது.
காசாவிலுள்ள ஹமாஸ் அமைப்பின் தலைவர் வீடு மீதும் இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.
இரு தரப்பும் மாறி மாறி ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகின்றன.
இதற்கிடையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல், பாலஸ்தீன் மோதல் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாலஸ்தீன பிரதமர் மம்மூத் அப்பாஸ் ஆகியோருடன் தனித்தனியாக தொலைபேசி வாயிலாக உரையாடியுள்ளார். இரு நாடுகளும் தங்களுக்குள் உள்ள கருத்து வேறுபாடுகளை களைந்து வன்முறையைக் கைவிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேபோல், ஐ.நா. தலைவர் அண்டோனியோ குத்ரேஸ், வன்முறைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இருப்பினும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலுடன் நடந்த காணொலி ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னரும் கூட கூட்டறிக்கை ஏதும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.