Texas Shooting: டெக்சாஸ் பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூடு - திட்டத்தை முன்கூட்டியே பேஸ்புக்கில் பகிர்ந்த கொலையாளி
தாய் நிறுவனமான மெட்டாவின் செய்தித் தொடர்பாளர் ஆண்டி ஸ்டோன் இது குறித்து கூறுகையில், சட்ட அமலாக்க அதிகாரிகளின் தற்போதைய விசாரணைக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறோம் என தெரிவித்துள்ளார்
அமெரிக்காவில், பள்ளிக்குள் புகுந்து 19 குழந்தைகள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்த 15 நிமிடங்களுக்கு முன் பள்ளியை தாக்கும் திட்டத்தை பேஸ்புக்கில் வெளியிட்டது தெரியவதுள்ளது.
18 வயது இளைஞர்..
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உவால்டி என்ற சிறிய பகுதி உள்ளது. இது மெக்ஸிகோவின் எல்லைப்பகுதியில் இருந்து சிறிது தொலைவில் உள்ள கிராமமாகும். இந்த கிராமத்தில் தான் உலகை அதிரவைத்துள்ள இந்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது. இங்குள்ள பள்ளி ஒன்றினுள் துப்பாக்கி மற்றும் ரைஃபிளுடன் புகுந்த 18 வயது இளைஞர் சரமாரியாகத் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 19 குழந்தைகள் மற்றும் 2 ஆசிரியர் உள்பட 21 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
சரமாரியாக துப்பாக்கிச்சூடு..
துப்பாக்கிச்சூடு நடத்திய தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் எதிர் தாக்குதல் நடத்தியதில் அந்த இளைஞரும் சுட்டுக்கொல்லப்பட்டார். கடந்த 2018க்குப் பிறகு பள்ளிக்குள் புகுந்து மாணவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவது இது முதல் முறையாகும். கடந்த 2018ம் ஆண்டு ஃப்ளோரிடா மாகாணத்தில், பார்க்லாண்டில் உள்ள பள்ளிக்குள் புகுந்த நபர் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 14 பள்ளி மாணவர்கள் மற்றும் 3 ஆசிரியர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். தொடக்கப்பள்ளிக்குள் புகுந்து குழந்தைகளை சுட்டுக்கொல்வது 2012க்குப் பிறகு இதுவே முதல் முறையாகும். 2012ம் ஆண்டு கன்னெக்டிகட் பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளிக்குள் புகுந்த நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 20 குழந்தைகள் மற்றும் 6 ஆசிரியர்கள் கொல்லப்பட்டனர்.
பேஸ்புக்கில் முன் கூட்டியே பகிரப்பட்ட திட்டம்
பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு 15 நிமிடத்திற்கு முன், பேஸ்புக்கில் பள்ளியை தாக்கும் திட்டத்தை துப்பாக்கிச்சூடு நடத்திய 18 வயது இளைஞர் பகிர்ந்து கொண்டதாக அம்மாகாண ஆளுநர் கிரெக் அபோட் தெரிவித்துள்ளார். அவர் இந்த துப்பாக்கிச்சூட்டுக்கு AR-15 ரக துப்பாக்கியை பயன்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்தார்.
துப்பாக்கிச்சூடு நடத்த பள்ளிக்கு செல்வதற்கு முன் அந்த நபர் துப்பாக்கியால் தனது பாட்டியை சுட்டதாகவும், பின்னர் பள்ளியில் 19 குழந்தைகளையும், 2 ஆசிரியர்களையும் சுட்டுக்கொன்றதாக தெரிவித்துள்ளார்.
அந்த நபரின் முதல் பேஸ்புக் பதிவில் 'நான் என் பாட்டியை சுடப் போகிறேன்' என்றும், "இரண்டாவது பதிவில் 'நான் என் பாட்டியை சுட்டுக் கொன்றேன் என்றும், மூன்றாவது பதிவில், பள்ளிக்கு வருவதற்கு 15 நிமிடங்களுக்குள் 'நான் ஒரு தொடக்கப் பள்ளியை சுடப் போகிறேன்' என்றும் பதிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர பேஸ்புக் முடிவு
டெக்சாஸ் மாகாண ஆளுநரின் இந்த செய்தியாளர் சந்திப்புக்கு பிறகு அறிக்கை ஒன்றை வெளியிட்ட பேஸ்புக் நிறுவனம், துப்பாக்கியால் சுட்ட அந்த நபரின் பேஸ்புக் பதிவுகள் பயங்கரமான சோகம் நிகழ்ந்த பிறகு கண்டுபிடிக்கப்பட்டது என தெரிவித்துள்ளது. பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவின் செய்தித் தொடர்பாளர் ஆண்டி ஸ்டோன் இது குறித்து கூறுகையில், சட்ட அமலாக்க அதிகாரிகளின் தற்போதைய விசாரணைக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறோம் என தெரிவித்துள்ளார்.