Taliban Ban : ஆணுறை, கருத்தடைக்கு தடை.. தலிபான் தடாலடி காரியம்.. தொடர்ந்து ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் பெண்கள்
அமெரிக்க ஆதரவு அரசு அமைவதற்கு முன்பு தலிபான்கள் ஆட்சி செய்தபோது இருந்த கடும் கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டு வருவது உலக நாடுகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது
கடந்த 2021-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆதரவு அரசாங்கத்தை கவிழ்த்து தலிபான்கள் ஆட்சியை பிடித்தனர். அவர்கள் ஆட்சியை கைப்பற்றியது முதல் அந்த நாட்டில் ஏராளமான கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்க ஆதரவு அரசு அமைவதற்கு முன்பு தலிபான்கள் ஆட்சி செய்தபோது இருந்த கடும் கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டு வருவது உலக நாடுகளை கவலையில் ஆழ்த்தியது. விதிக்கப்பட்டு வரும் பிற்போக்கான விதிகள் காரணமாக அந்த நாட்டு மக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிக்க தடை:
குறிப்பாக, பெண்களுக்கு எதிராக கொண்டு வரப்படும் மோசமான கட்டுப்பாடுகள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, ஆப்கானிஸ்தானில் உள்ள பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிப்பதற்கு தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து உள்ளுர் மற்றும் வெளிநாட்டு அரசு சாரா நிறுவனங்களில் பெண்களை பணியில் அமர்த்துவதை நிறுத்த வேண்டும் என தலிபான் அரசு கட்டுப்பாடு விதித்தது. இது நிலைமையை மேலும் மோசமாக்கியது.
இப்படி, பெண்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு வரும் நிலையில், பெண்களின் உரிமைகள் தங்களுக்கு முக்கியமல்ல என தலிபான் விளக்கம் அளித்தது.
கருத்தடை மருந்துகளை பயன்படுத்த கட்டுப்பாடு:
பெண்களை ஒடுக்கும் நடவடிக்கையின் அடுத்த கட்டமாக, புது அறிவிப்பு ஒன்றை தலிபான் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆப்கானிஸ்தானின் இரண்டு முக்கிய நகரங்களில் கருத்தடை மருந்துகளை பயன்படுத்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அங்கு, கருத்தடை மருந்துகள் விற்கப்படுவதை தலிபான்கள் நிறுத்தியுள்ளனர்.
வீட்டுக்கு வீடு சென்று, இல்லத்தரசிகளை தலிபான்கள் மிரட்டி வருவதாக கூறப்படுகிறது. அதேபோல, கருத்தடை மருந்துகள் மற்றும் உபகரணங்களை மருந்து கடைகளில் இருந்து தலிபான்கள் அப்புறப்படுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து பெயர் சொல்ல விரும்பாத மருத்து கடை உரிமையாளர் கூறுகையில், "இரண்டு முறை துப்பாக்கியுடன் எனது கடைக்கு வந்து, கருத்தடை மாத்திரைகளை விற்பனைக்கு வைக்கக் கூடாது என மிரட்டினர். அவர்கள் காபூலில் உள்ள ஒவ்வொரு மருந்தகத்தையும் தொடர்ந்து சோதனை செய்து வருகிறார்கள். நாங்கள் கருத்தடை மருந்துகள் விற்பதை நிறுத்திவிட்டோம்" என்றார்.
தன்னை தலிபான்கள் மிரட்டியதாக இல்லத்தரசி ஒருவர் கூறியுள்ளார். "பலமுறை அச்சுறுத்தப்பட்டேன். நீங்கள் வெளியில் சென்று மக்கள் தொகையைக கட்டுப்படுத்தும் மேற்கத்திய கருத்தை ஊக்குவிக்க அனுமதிக்க மாட்டோம். இது தேவையற்ற வேலை" என்றார்.
இதுகுறித்து மற்றோரு மருந்துகடை உரிமையாளர் கூறுகையில், "கருத்தடை மாத்திரைகள் மற்றும் டெப்போ-புரோவேரா ஊசி போன்ற பொருட்களை இந்த மாத தொடக்கத்தில் இருந்து மருந்தகத்தில் வைக்க அனுமதிக்கப்படவில்லை. மேலும் தற்போதுள்ள இருப்புகளை விற்க நாங்கள் மிகவும் பயப்படுகிறோம்" என்றார்.