’வெறித்தனமாக’ பார்ட்டி செய்த ஃபின்லாந்து பிரதமர்! - போட்டுத்தாக்கிய எதிர்கட்சிகள்!
சமூக ஊடகங்களில் இருந்து எடுக்கப்பட்டதாகக் கருதப்படும் காட்சிகளில், அவரும் ஃபின்னிஷ் பிரபலங்கள் உட்பட அவரது நண்பர்களும் நடனமாடுவதையும் பாடுவதையும் காணலாம்.
ஃபின்லாந்து பிரதமர் சன்னா மரின் 'வெறித்தனமாக’ பார்ட்டி செய்த வீடியோ ஒன்று அண்மையில் லீக்கானதில் அது பெரிய சர்ச்சையை சந்தித்திருக்கிறது. இதனால் அவர் பெரிய அளவிலான எதிர்வினையை சந்தித்து வருகிறார்.
சமூக ஊடகங்களில் இருந்து எடுக்கப்பட்டதாகக் கருதப்படும் காட்சிகளில், அவரும் ஃபின்னிஷ் பிரபலங்கள் உட்பட அவரது நண்பர்களும் நடனமாடுவதையும் பாடுவதையும் காணலாம்.
இதை அடுத்து அவர் எதிர் கட்சிகளின் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். எதிர்கட்சித் தலைவர்களில் ஒருவர் அவரை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று கோரினார். அவர் போதைப் பொருள் உட்கொண்டிருக்கலாம் என்கிற சந்தேகத்தில் இது கூறப்பட்டது.
View this post on Instagram
36 வயதான சன்னா மரின் தான் போதைப்பொருள் உட்கொண்டதாக வெளியான கருத்தை மறுத்தார், அவர் மதுவை மட்டுமே குடித்ததாகவும், "வெறித்தனமான முறையில்" பார்ட்டி செய்ததாகவும் கூறினார்.
உலகின் இளைய பிரதமர்களில் ஒருவரான மரின் பார்ட்டிகளில் கலந்து கொள்வதை அடிக்கடிச் செய்து வருகிறார். இதை அவர் ரகசியமாக வைத்திருப்பதில்லை மேலும் அவர் இசை விழாக்களில் கலந்துகொள்வதையும் அடிக்கடி செய்து வருகிறார்.
கடந்த வாரந்தான் சன்னா மரின் "உலகின் சிறந்த பிரதமர்" என்று ஜெர்மன் செய்தி நிறுவனமான பில்டால் அழைக்கப்பட்டார்.
இதை அடுத்து வியாழன் அன்று இந்த வீடியோ வெளியானது. அது குறித்து கருத்து தெரிவித்த அவர், தான் படமாக்கப்படுவது தனக்கு தெரியும் என்றும் ஆனால் அந்த வீடியோ பகிரங்கமாகிவிட்டதுதான் வருத்தமளிப்பதாக இருந்ததாகவும் கூறினார்.
"நான் நடனமாடினேன், பாடினேன், பார்ட்டி செய்தேன் அவை முற்றிலும் சட்டபூர்வமான விஷயங்கள்தான். நான் சட்டத்துக்குப் புறம்பான சூழலில் என்றுமே இருந்ததில்லை," என்று மேலும் அவர் கூறினார்.
எதிர்க்கட்சித் தலைவரான ரிக்கா புர்ரா, பிரதமர் மீது "சந்தேகத்தின் நிழல்" படிந்திருப்பதாகக் கூறி, சன்னா மரின் தாமாக முன்வந்து போதைப்பொருள் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் அழைப்பு விடுத்தார்.
மற்ற எதிர்க்கட்சி அரசியல்வாதிகள், பிரதமர் மற்றும் ஊடகங்கள் என இருதரப்பும் மிக முக்கியமான உள்நாட்டு பிரச்சினைகளுக்கு பதிலாக பார்ட்டி பற்றி பேசுவதாக விமர்சித்துள்ளனர்.
இதற்கு பதிலளித்துள்ள சன்னா மரின் " என் வயதுடைய பலரைப் போலவே எனக்கு குடும்ப வாழ்க்கை உள்ளது, எனக்கு வேலை வாழ்க்கை உள்ளது மற்றும் எனது நண்பர்களுடன் செலவழிக்க எனக்கு ஓய்வு நேரம் உள்ளது" எனக் கூறியுள்ளார்.
அரசியல்வாதி என்பதால் தனது நடத்தையை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறினார்.
சன்னா மரின் டிசம்பர் 2019 முதல் பின்லாந்தில் ஆட்சியில் உள்ளார். மேலும் அவரது கட்சியின் ஆதரவைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளார்.