Russia Jet - US drone Clash: பெரும் பதற்றம்.. அமெரிக்க ட்ரோன் மீது மோதிய ரஷ்ய ஜெட் விமானம்..! நடந்தது என்ன..?
அமெரிக்காவின் ட்ரோன் - ரஷ்யாவின் ஜெட் விமானங்கள் மோதிக்கொண்ட சம்பவம் இரு நாடுகள் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
![Russia Jet - US drone Clash: பெரும் பதற்றம்.. அமெரிக்க ட்ரோன் மீது மோதிய ரஷ்ய ஜெட் விமானம்..! நடந்தது என்ன..? Russian jet collides with, downs U.S. drone over Black Sea know full details Russia Jet - US drone Clash: பெரும் பதற்றம்.. அமெரிக்க ட்ரோன் மீது மோதிய ரஷ்ய ஜெட் விமானம்..! நடந்தது என்ன..?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/15/c0f7923d7f0a6bf159c7da3c3ed3dee51678849745929333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
உலகில் ராணுவ பலத்தில் மிகப்பெரிய நாடுகளாக விளங்குவது அமெரிக்காவும், ரஷ்யாவும் ஆகும். பல ஆண்டு காலமாகவே ரஷ்யாவிற்கும், அமெரிக்காவிற்கும் பனிப்போர் இருந்து வருகிறது. எந்த ஒரு விவகாரத்திலும் இரு நாடுகளும் இணைந்து ஒற்றுமையாக செயல்பட்டதாகவே பெரியளவில் வரலாறே இல்லை.
அமெரிக்க ட்ரோன் - ரஷ்ய ஜெட் மோதல்:
இரு நாடுகளும் ஒன்றை, ஒன்றை தீவிரமாக கண்காணித்துக் கொண்டே வருகின்றன. இந்த நிலையில், ரஷ்ய விமானப்படைக்கு சொந்தமான ஜெட் விமானம் ஒன்று கருங்கடல் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவிற்கு சொந்தமான ட்ரோன் மீது மோதியுள்ளது. இந்த சம்பவம் இரு நாடுகளுக்கு இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் போர் விமானமான ரஷ்யன் Su-27 ரக ஜெட், அமெரிக்காவின் ரீப்பர் ட்ரோனான MQ- 9 மீது மோதியது திட்டமிட்ட சதியா? விபத்தா? என்று பெரும் கேள்வி எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் இரண்டு தரப்பினரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
அமெரிக்கா குற்றச்சாட்டு:
மோதலில் சேதமடைந்த அமெரிக்காவின் ட்ரோன் இதுவரை மீட்கப்படவில்ல என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்க ராணுவத் தலைமையகமான பெண்டகன் இந்த சம்பவம் தொடர்பாக கூறியிருப்பதாவது, "ரஷ்யாவின் Su-27 ரகத்தைச் சேர்ந்த 2 ஜெட் விமானங்கள், சர்வதேச வான்வழி எல்லையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க ட்ரோன் மீது எண்ணெயை கொட்டினர். பின்னர், 30 முதல் 40 நிமிடங்கள் வரை அமெரிக்க ட்ரோனைச் சுற்றியே பறந்து வந்தனர். இதையடுத்தே, அமெரிக்காவின் ட்ரோன் மீது மோதினர்" என்று கூறியுள்ளது.
ரஷ்ய குற்றச்சாட்டு:
இந்த சம்பவம் தொடர்பாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருப்பதாவது, "அமெரிக்காவின் ட்ரோன் ரஷ்யாவின் எல்லைக்கு மிக அருகில் பறந்தது. மேலும், ரஷ்ய எல்லைக்குள் ஊடுருவ முயன்றது. அதை ரஷ்யா அனுமதிக்கவில்லை. அமெரிக்க ட்ரோனை இடைமறிக்கவே ரஷ்ய ஜெட்விமானங்கள் சென்றன. சூழ்ச்சியின் காரணமாக அமெரிக்க ட்ரோன் கட்டுப்பாடற்று சென்று விமானத்தில் மோதி நீர் பரப்பில் வீழ்ந்தது" என்று தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் விபத்தா? அல்லது திட்டமிட்டு அரங்கேறியதா? என்று இதுவரை உறுதியாகவில்லை என்றாலும் ரஷ்ய ஜெட் விமானங்கள் அமெரிக்காவின் ட்ரோனை இடைமறிக்க முயன்றதாக இரு தரப்பினரும் கூறியுள்ளனர். ரஷ்ய – உக்ரைன் போர் விவகாரத்தில் அமெரிக்கா உக்ரைனுக்கு ஆதரவாக வலுவான குரல் கொடுத்து வருகிறது. இந்த போர் உலக நாடுகள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமெரிக்க ட்ரோன் மீது ரஷ்ய ஜெட் விமானம் மோதியிருப்பது மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
மேலும் படிக்க:Air pollution: தாய்லாந்தில் உருவான காற்று மாசுபாடு - 2,00,000 பேர் மருத்துவமனையில் அனுமதி: வெளியான முக்கிய அறிவிப்பு
மேலும் படிக்க: Imran Khan Arrest : இம்ரான் கானை கைது செய்ய தீவிரம்; ஆதரவாளர்களிடமிருந்து வலுக்கும் எதிர்ப்பு; பாகிஸ்தானில் கலவரம்!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)