China Vs Israel America: ஈரானுக்கு ஆதரவாக நுழைந்த சீனா; இஸ்ரேலுக்கு கடும் கண்டனம்; என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா.?
ஈரானுக்கு எதிரான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் சீனா, தற்போது இஸ்ரேலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இது எதற்காக தெரியுமா.?

அமெரிக்கா இஸ்ரேல் இணைந்து ஈரானுடன் போரிட்டு வரும் நிலையில், கமேனி கொலையில் தொடங்கி, சீனா கண்டனங்களை பதிவு செய்து, மெல்ல மெல்ல இந்த போர் விவகாரத்திற்குள் நுழைந்து வருகிறது. அந்த வரிசையில், தற்போது இஸ்ரேலுக்கு ஒரு கண்டனத்தை தெரிவித்துள்ளது. இந்த கண்டனம் எதற்காக என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
ஈரானின் அடுத்த தலைவர் நியமன விவகாரத்தில் தலையிடும் அமெரிக்கா, இஸ்ரேல்
பிப்ரவரி 28-ம் தேதி, ஈரான் மீது அமெரிக்க, இஸ்ரேல் கூட்டுப் படைகள் தாக்குதலை தொடங்கின. அதற்கு ஈரானும் பதிலடி கொடுக்கத் தொடங்கியது. எனினும், போரின் முதல் நாளிலேயே, ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி மற்றும் சுமார் 45 முக்கிய தலைவர்கள் இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து, உச்ச தலைவர் கொலைக்கு நிச்சம் பழிவாங்குவோம் என்று கூறிய ஈரான், தாக்குதல்களை தீவிரப்படுத்தியது. இஸ்ரேலுக்கு எதிராக மட்டுமல்லாமல், அமெரிக்க, இஸ்ரேல் படைகளுக்கு ராணுவ தளங்களை கொடுத்து உதவும் அரபு நாடுகள் மீதும் தாக்குதல்களை தொடங்கியது. இதனால், துபாய், குவைத், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட அரபு நாட்டுப் பகுதிகள் பாதிப்புக்கு உள்ளாகின.
இதனிடையே, ஈரானின் அடுத்த தலைவர் யார் என்பது குறித்த தகவல்கள் வெளிவரத் தொடங்கின. இடைக்கால தலைமைக் குழு ஒன்றும் நியமிக்கப்பட்ட நிலையில், ஈரானின் அடுத்த உச்ச தலைவராக யார் நியமிக்கப்பட்டாலும், அவரையும் கொல்லுவோம் என இஸ்ரேல் பகிரங்கமாக எச்சரித்தது.
மறுபுறம், ஈரானின் அடுத்த தலைவராக மறைந்த அலி கமேனியின் மகன் மொஜ்தபா தேர்ந்தெடுக்கப்படலாம் என்று வெளியான தகவல்களுக்கு எதிரப்பு தெரிவித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அவரை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியதோடு, அவர் ஒரு முட்டாள் என்றும் கூறி, ஈரானின் அடுத்த தலைவர் நியமனத்தில் தன்னுடைய பங்களிப்பு இருக்க வேண்டும் என்று கூறினார். வெனிசுலாவில் செய்ததைப் போல், ஈரான் தலைவரை தேர்ந்தெடுப்பதிலும் தான் நேரடியாக தலையிடப் போவதாகவும் அறிவித்தார்.
கண்டுகொள்ளாமல் உச்ச தலைவரை நியமித்த ஈரான்
இந்நிலையில், ட்ரம்ப்பின் சொல்லை உதாசீனப்படுத்திவிட்டு, புதிய உச்ச தலைவராகவும், மத குருவாகவும் அலி கமேனியின் 2-வது மகன் மொஜ்தபாவை நியமித்துள்ளது ஈரான். புதிய உச்ச தலைவரை தேர்வு செய்வதற்காக 88 மதகுருமார்களைக் கொண்ட மதகுருமார் சபை ஆலோசனை நடத்திய நிலையில், "ஒரு தீர்க்கமான வாக்கெடுப்பின் மூலம், நிபுணர்கள் சபை, அயதுல்லா செய்யத் மொஜ்தபா ஹொசைனி கமேனியை, ஈரான் இஸ்லாமியக் குடியரசின் புனித அமைப்பின் மூன்றாவது தலைவராக நியமித்தது," என்று மதகுருமார் சபை அறிக்கை வெளியிட்டது.
இஸ்ரேல், அமெரிக்காவிற்கு சீனா கண்டனம்
இப்படிப்பட்ட சூழலில், ஈரானின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என்று கூறி, இஸ்ரேலுக்கு சீனா கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது. இது குறித்து பேசியுள்ள சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் குவே ஜியாகுன், ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியை எந்த வகையிலும் குறி வைப்பதை சீனா எதிர்ப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், ஈரானின் தலைமை மாற்றம், அதன் உள்நாட்டு விவகாரம் என்றும், ஈரானின் அரசியலமைப்பின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு எனவும் கூறியுள்ளார். அதனால், எந்த காரணத்தை காட்டியும், ஒரு நாட்டின் உள் விவகாரங்களில் மற்ற நாடுகள் தலையிடுவதை சீன அதிபர் ஷி ஜின்பிங் எதிர்ப்பதாகவும் குவே ஜியாகுன் தெரிவித்துள்ளார். அதோடு, ஈரானின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு முழுமையாக மதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதன் மூலம், ஈரான் விவகாரத்திற்குள் சீனா நுழைந்திருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், ஈரான் மீது வலிமையான தாக்குதலை நடத்தப் போவதாக ட்ரம்ப் கூறியுள்ளார். அப்படி செய்தால், சீனா ஈரானுக்கு உதவுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படி சீனா உதவும் பட்சத்தில், இது இன்னும் மிகப்பெரிய போராக மாறும் வாய்ப்புள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்...
ட்ரெண்டிங் செய்திகள்






















