Russia Ukraine : அழுகை.. துப்பாக்கிச் சூடு, தங்கள் வாகனங்களில் ஓட்டை போடும் ரஷ்ய படை, மன சிதைவு கொடூரம்.. வெளியான உளவு தகவல்
உக்ரைனில் படையெடுத்துள்ள ரஷ்யப் படைகள் தற்போது மன உறுதி குன்றியுள்ள நிலையில் இருப்பதாகவும், பல வீரர்கள் தங்கள் வாகனங்களையே உடைத்து வருவதாகவும் அமெரிக்க உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது
உக்ரைனில் படையெடுத்துள்ள ரஷ்யப் படைகள் தற்போது மன உறுதி குன்றியுள்ள நிலையில் இருப்பதாகவும், பல வீரர்கள் தங்கள் வாகனங்களையே உடைத்து வருவதாகவும் அமெரிக்க உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. மன உறுதி குறைந்திருப்பதோடு, ரஷ்யப் படையினரின் உணவு, எரிபொருள் முதலானவையும் தொடர்ந்து குறைந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க உளவுத்துறை வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில், பெரும்பாலான ரஷ்யப் படையினர் போதுமான பயிற்சி இல்லாதவர்களாகவும், வயது குறைந்தவர்களாகவும் உள்ளனர். மேலும், உக்ரைன் படையின் எதிர் தாக்குதலையும் இத்தகைய ரஷ்ய வீரர்கள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை எனக் கூறப்படுகிறது. தாங்கள் நேரடி போருக்கு அனுப்பப்படுகிறோம் என்பது கூட ரஷ்யப் படையினர் பலருக்கும் தெரியவில்லை எனவும் அமெரிக்க உளவுத்துறை கூறியுள்ளது. மோதல் எதுவும் இல்லாமல் ஆயுதங்களைக் கீழ் இறக்குவது, போரைத் தவிர்க்க தங்கள் வாகனத்தின் டயர்களைப் பஞ்சர் செய்வது முதலானவற்றிலும் ரஷ்யப் படையினர் ஈடுபடுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
பிடிபட்ட ரஷ்யப் படையினரிடம் பெற்றுக் கொள்ளப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில் இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. உக்ரைன் தலைநகர் கீவ் அருகில் சுமார் 40 மைல் தூரத்திற்கான படை ஊர்ந்து வருவதாக செயற்கைக் கோள் படங்கள் உறுதி செய்துள்ள நிலையில், ரஷ்யப் படையினர் மன உறுதி குன்றி இருப்பதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.
பொறுமையாக நகர்வதன் மூலமாக மீண்டும் குழுவாகத் திறள்வதற்கும், போர்த் திட்டத்தை மீண்டும் மாற்றம் செய்வதற்கும் ரஷ்யப் படைக்குப் பயன்படும். மேலும், உக்ரைன் மீதான படையெடுப்பு தொடங்கியது முதலே ரஷ்யப் படையினர் ஆபத்துகளை எதிர்கொள்ளாமல் அதில் இருந்து விலகுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
பிரிட்டிஷ் உளவுத்துறை கைப்பற்றியுள்ள ஆடியோ அடிப்படையில் ரஷ்யப் படையினர் முழுவதுமாக சீரற்ற நிலையில் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. மேலும், உக்ரைன் நகரங்களைத் தாக்குவதற்காக ரஷ்ய அரசு விடுத்த கட்டளைகளைப் புறக்கணிக்கும் படை வீரர்கள், தங்கள் பொருள்கள் காலியாக வருவதாகப் புகார் செய்து வருகின்றனர்.
ஷாடோப்ரேக் என்ற உளவுத்துறை நிறுவனம் ரஷ்யப் படையினர் இடையிலான உரையாடல்களை ஒட்டுக் கேட்டுப் பதிவு செய்துள்ளதில், உக்ரைனில் போர் தொடங்கிய நாள் முதல் ரஷ்ய ராணுவம் தளவாட உதவியை மேற்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.
`நிலத்தில் இருந்த ரஷ்யப் படையினர் கண்காணிக்கப்பட்டனர்; மக்கள் வாழும் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்த அவர்கள் திட்டமிட்டிருந்தனர். மேலும், ரஷ்யப் படையினரின் தொலைதொடர்பு சாதனங்களை முடக்குவதற்காக ஜாம்மர்கள் பயன்படுத்தப்படுவது தெரிய வந்துள்ளது’ என இந்த நிறுவனம் கூறியுள்ளது.
`கார்கிவ் பகுதியில் மோதலின் போது அவர்கள் அழுவது கேட்டது. அவர்களிடம் எரிபொருள் குறைவாக இருக்கிறது. வரைபடம் இல்லாததால் இடங்கள் பெரிதாக அவர்களுக்குத் தெரியவில்லை. மேலும், அவர்கள் வான் வழியாக உதவியை எதிர்பார்த்து வருகின்றனர். ஒவ்வொரு உரையாடலும் வெவ்வேறு படையினருக்கு இடையிலான ஒருங்கிணைப்பு குறைந்துள்ளதோடு, சிலர் தங்களுக்குள் மாறி மாறி சுட்டுக் கொல்கின்றனர்’ என்றும் ஷாடோப்ரேக் தெரிவித்துள்ளது.