Pakistan : அடுத்த இலங்கையாக மாறும் பாகிஸ்தான்? விலை உயர்வால் போராட்டத்தில் இறங்கிய மக்கள்..
விலை உயர்வை திரும்பப் பெறக்கோரி லாகூர், கராச்சி, இஸ்லாமாபாத் ஆகிய இடங்களில் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
பாகிஸ்தானில் எரிபொருள் மற்றும் அத்திவாசிய பொருட்களின் விலை உயர்வு மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காட்சிகள் உலக நாடுகளையே ஆட்டம் காண வைத்தது என்பது நிதர்சனமான உண்மை. பொருளாதார வீழ்ச்சி காரணமாக அங்கு எரிபொருள், அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்ததால் மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனால் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.
அங்கு ஆட்சி மாற்றமே நடந்து புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றார். ஆனால் மக்கள் போராட்டத்தில் ராஜபக்ச ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலால் கடந்த மாதம் முழுக்க இலங்கை போர்க்களமாக காட்சியளித்தது. மேலும் இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலை இந்தியா உட்பட மற்ற உலக நாடுகளுக்கும் விரைவில் ஏற்படலாம் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் இலங்கையை தொடர்ந்து பாகிஸ்தானிலும் எரிபொருள் மற்றும் எண்ணெய் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதுதொடர்பாக அந்நாட்டின் மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், அந்நிய செலவாணி கையிருப்பு பெருமளவு குறைந்துள்ளதாகவும், இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, எரிபொருளின் மானியங்கள் திரும்ப பெறுதல் போன்றவை நடைபெற்று வருதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ,209.86 ஆகவும், டீசல் விலை ரூ.204.15 ஆகவும் அதிகரித்துள்ளது.பாகிஸ்தானில் வாரத்திற்கு இருமுறைஎரிபொருள் விலை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ரூ.60 வரை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வை திரும்பப் பெறக்கோரி லாகூர், கராச்சி, இஸ்லாமாபாத் ஆகிய இடங்களில் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதன் காரணமாக எரிபொருள் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தியும் வருகின்றனர்.
அவர்கள் அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இதனிடையே பாகிஸ்தானில் அரசு ஊழியர்கள் சம்பள உயர்வு கோரி போராட்டம் நடத்தி வருவதால் பாகிஸ்தான் அரசுக்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதேசமயம் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இவ்விவகாரத்தை கையிலெடுத்து பெரிய அளவில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளதால் பாகிஸ்தானில் உச்சக்கட்ட பதற்றம் நிலவுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்