ஆகஸ்ட் 15: இந்தியாவைப்போல் இன்று சுதந்திர தினம் கொண்டாடும் நாடுகள் எவை தெரியுமா?
வட கொரியா, பஹ்ரைன், தென் கொரியா, லீசெஸ்டைன் ஆகிய நாடுகளும் இன்று சுதந்திர தினத்தைக் கொண்டாடுகின்றன. அதன் பின்னணியை அறிவோம்:
ஆகஸ்ட் 15, நாம் இன்று நம் தேசத்தின் 75 வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறோம். 1947 ஆகஸ்ட் 15 நள்ளிரவில் நம் தேசம் விடுதலை பெற்றது. பிரிட்டன் கொடி கீழே இறங்க நம் மூவர்ணக் கொடி மேலே உயர்ந்த திருநாள் நமக்கு சுதந்திர சுவாசத்தை உறுதி செய்தது. நாம் சுதந்திரக் காற்றை சிலாகிக்க ஆரம்பித்து இன்றுடன் 75 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன.
இந்த நன்னாளில் நம்மைப் போல் இன்னும் சில நாடுகளும் சுதந்திர தினத்தை இன்று கொண்டாடுகின்றன. வட கொரியா, பஹ்ரைன், தென் கொரியா, லீசெஸ்டைன் ஆகிய நாடுகளும் இன்று சுதந்திர தினத்தைக் கொண்டாடுகின்றன. அதன் பின்னணியை அறிவோம்:
பஹ்ரைன்:
பஹ்ரைனும் நம்மைப் போல் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில் தான் இருந்தது. 1971 ஆகஸ்ட் 15ல் தனது சுதந்திரத்தை அந்நாடு அறிவித்தது. பஹ்ரைனி மக்கள் மத்தியில் ஐக்கிய நாடுகள் சபை தேசம் தழுவிய கணக்கெடுப்பு நடத்தியது. அதன் அடிப்படையில் பிரிட்டன் அங்கிருந்து வெளியேறியது. பிரிட்டனுக்கும், பஹ்ரைனுக்கும் இடையே டிசம்பர் 16-ல் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. அன்றைய தினம் தான் அங்கு தேசிய தினமாகக் கொண்டாடப்படுகிறது. இசா பின் சல்மான் அல் கலீஃபா ஆட்சிப் பீடத்தில் ஏறிய நாளும் அன்று தான்.
வட மற்றும் தென் கொரிய சுதந்திர தினம்:
வட மற்றும் தென் கொரிய நாடுகள் ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று தான் சுதந்திர தினத்தைக் கொண்டாடுகின்றனர். 35 ஆண்டுகளாக தங்களை முடக்கி வைத்த இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்த நாளை அவர்கள் விடுதலை நாளாகக் கொண்டாடுகிறார்கள். இரண்டாம் உலகப் போரின் போது கொரிய தேசங்கள் ஜப்பானின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்தன. தென் கொரிய மக்கள் இன்றைய நாளை வெளிச்சம் திரும்பிய நாளென்றும், வட கொரிய மக்கள் இந்த நாளை தந்தை பூமியின் விடுதலை நாள் என்றும் கொண்டாடுகின்றனர்.
லீசெஸ்டைன்:
ஐரோப்பாவின் ஆல்ஃப்ஸ் மலைகளில் ஆஸ்திரியா ஸ்விட்சர்லாந்து இடையே உள்ள ஜெர்மன் மொழி பேசும் மக்கள் வாழ் சிறிய நாடு லீசெஸ்டைன். இந்த நாடும் ஆகஸ்ட் 15 அன்று தான் சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது. லீசைஸ்டைன் நாடு உருவானபோது ஆகஸ்ட் 15 ஆம் தேதி தான் அநாட்டின் இளவரசர் ஜோசப் 2 பிறந்தார். மேலும் அன்றைய தினம் மேரி மாதாவின் அஸம்ப்ஷன் தினம் கொண்டாடப்படுகிறது. இதனால் அன்றைய தினம் அந்நாட்டு மக்களால் தேசிய தினமாகக் கொண்டாடப்படுகிறது.