அணு ஆயுத சோதனையை நடத்துமா வடகொரியா? : அமெரிக்கா கணிப்பது என்ன?
வடகொரியா தனது ராணுவ நவீனமயமாக்கலை மேலும் அதிகரிக்க அணு ஆயுதங்களைச் சோதிக்கத் தயாராகி வருகிறது
வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன், புதிய அணு ஆயுதக் கட்டமைப்பை உருவாக்கும் முயற்சியில் உள்ளதாகவும், அதனால் அவர் மீண்டும் அணு ஆயுதச் சோதனையை நடத்தலாம் என்றும் அமெரிக்க உளவுத்துறை அறிக்கை தெரிவித்துள்ளது. வருடாந்திர பாதுகாப்பு அச்சுறுத்தல் அறிக்கை வெளியிடும் அமெரிக்க அரசு 2023க்கான அறிக்கையில் வடகொரியா ஏவுகணைச் சோதனை நடத்துவது இன்று நேற்று நடப்பதல்ல என்றாலும் அதனை சாதாரணமாக்கும் முயற்சியின் ஒரு அங்கமாக அந்த நாட்டு அரசு அணுசக்தி திறன் கொண்ட ஏவுகணையை தொடர்ந்து சோதனை செய்யக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளது.
2006ம் ஆண்டு தொடங்கி வடகொரியா, ஆறு அணு ஆயுத சோதனைகளை நடத்தியது, ஒவ்வொரு சோதனையும் அதற்கு முன்பானதை விடத் தீவிரமடைந்து வருகிறது.அதன் கடைசி அணு ஆயுத சோதனை 2017இல் நடத்தப்பட்டது. மேலும் அடுத்தகட்டமாக வடகொரியா தனது ராணுவ நவீனமயமாக்கலை மேலும் அதிகரிக்க அணு ஆயுதங்களைச் சோதிக்கத் தயாராகி வருகிறது என்று அமெரிக்க புலனாய்வு அமைப்பின் அறிக்கை கூறியது.
"கிம் அணு ஆயுதங்கள் தனது எதேச்சதிகார ஆட்சியை பாதுகாக்கும் என நம்புகிறார். மேலும் எதிர்காலத்தில் அது வடகொரியா அணு ஆயுதசக்தி கொண்ட நாடாக உருவாக்கும் என்பதால் அதனைக் கைவிடுவதற்கான எண்ணம் தற்போது அவருக்கு இல்லை" என்று அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
கிரிப்டோகரண்சி திருட்டின் மூலம் கிடைக்கப்பெறும் நிதியைக் கொண்டு வடகொரியா தனது சோதனைக்கு நிதி அளிப்பதாகவும் அந்த அறிக்கை கூறியுள்ளது. சிங்கப்பூரைத் தளமாக கொண்டு இயங்கும் பிளாக் செயின் நிறுவனத்திடமிருந்து வட்கொரியா 625 மில்லியன் டாலர் திருடியதாக அந்த அறிக்கை குற்றம்சாட்டியுள்ளது.
கோவிட் -19 ஊரடங்கு மத்தியில் தனிமைப்படுத்தப்பட்ட நாட்டில் உணவுப் பாதுகாப்பின்மை மோசமடைந்துள்ளதாக சர்வதேச நிபுணர்கள் கூறுகின்றனர். நேற்று கொரியாவின் தொழிலாளர் கட்சியின் 8வது மத்திய குழுவின் ஏழாவது விரிவாக்கப்பட்ட முழுமையான கூட்டமானது கிம் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் கிராமப்புற மேம்பாட்டுத் திட்டங்கள் பற்றி மதிப்பாய்வு செய்யப்பட்டது என அம்மாநில செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நேற்று நடைபெற்ற இந்த கூட்டத்தில் விவசாயத்தின் வளர்ச்சிக்கான சரியான பாதையை நிறுவுவது மிக முக்கியமான மற்றும் அவசரமான பணி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடும் உணவுப்பஞ்சம்:
வட கொரியா அதன் அணு ஆயுதங்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டங்கள் மீது சர்வதேச தடைகளுக்கு உட்பட்டுள்ளது, மேலும் சமீபத்திய ஆண்டுகளில் அதன் வரையறுக்கப்பட்ட எல்லை வர்த்தகம் கோவிட் -19 ஐ தடுக்கும் நோக்கில் சுயமாகத் திணிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
வடகொரிய மக்கள்தொகையில் 40 சதவிகிதம் பேர் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் அவதிப்பட்டுவருகிறார்கள் என்கிறது ஐ.நா சபையின் புள்ளிவிவரம். இந்த நிலையில், உணவுப் பஞ்சம் தற்போது பன்மடங்கு அதிகரித்திருப்பதால், நாட்டு மக்களின் நிலை குறித்து வருத்தம் தெரிவித்திருக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். மேலும், ``ஒவ்வொருவரும் எவ்வளவு சாப்பிட வேண்டும் என்று ஒரு நாட்டின் ஆட்சியாளர் சொல்வது மிக மிகத் தவறு. உணவுக் கட்டுப்பாடு விதித்திருப்பது ஆட்சியாளர்களின் தோல்வியையே காட்டுகிறது'' என்று கண்டனங்களைப் பதிவு செய்துவருகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
வட கொரியாவின் விவசாயத் துறைக்கு அதிகம் அறியப்படாத பிரச்சனைகளில் ஒன்று, பயிர் விளைச்சலை மேம்படுத்த போதுமான உரங்களைப் பெறுவதில் உள்ள சிரமங்கள் ஆகும். அதுமட்டுமின்றி சீன அதிகாரப்பூர்வ சுங்கத் தரவுகளின்படி, வட கொரியாவுக்கான மொத்த சீன ஏற்றுமதிகள் சமீபத்திய ஆண்டுகளில் சுமார் $2.5bn முதல் $3.5bn வரை இருந்தது. ஆனால் கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை $500 மில்லியனுக்கும் குறைவாக இருந்தது. நாட்டின் மிகப்பெரிய நன்கொடையாளர் சீனா, தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து வட கொரியாவுக்கான அதன் உணவு ஏற்றுமதியை 80% குறைந்துள்ளது. கொரியாவுக்கு நன்கொடை தரும் நாடுகளிடமிருந்து வரும் உதவிகள் கடந்த பத்தாண்டுகளாக போதுமானதாக இல்லை என்று ஐ.நா. குறிப்பிட்டிருக்கிறது.
வடகொரியா சூழல் இப்படி இருக்க, 2025ஆம் ஆண்டு வரை குறைவாக உணவு சாப்பிடுங்கள் என அதிபர் கிம் ஜாங் உன் அண்மையில் கூறியது அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பசி, பட்டினியால் மக்கள் வாடினாலும், ஏவுகணை சோதனைகளை கைவிடாமல் அவ்வப்போது வடகொரியா மேற்கொள்வது உலகநாடுகளை அதிருப்தி அடைய வைக்கிறது. மக்களை வதைக்கும் இந்த உணவு பஞ்சத்தை வடகொரியா எப்படி சமாளிக்கப்போகிறது என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.