Israel Iran War: 400 ஏவுகணைகள்! நடுராத்திரியில் இஸ்ரேல் மீது குண்டு மழை பொழிந்த ஈரான்!
Israel Iran War: 400 ஏவுகணைகள்! நடுராத்திரியில் இஸ்ரேல் மீது குண்டு மழை பொழிந்த ஈரான்!
இஸ்ரேல் – காசா இடையே நடந்து வரும் போர் காரணமாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன ஆதரவு நாடுகள் மத்தியில் அசாதாரண சூழல் நிலவுகிறது.
நடுராத்திரியில் 400 ஏவுகணைகள்:
காசா மீதான தாக்குதலைத் தொடர்ந்து லெபனான் நாட்டில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் மீதான தாக்குதலையும் தொடர்ந்து இஸ்ரேல் நடத்தி வருகிறது. ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிராக கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த பேஜர் தாக்குதல் உலக நாடுகளை அதிர்ச்சி அடையச் செய்தது. இந்த சம்பவத்திற்கு இஸ்ரேல் நேரடியாக பொறுப்பேற்காவிட்டாலும் இதன் பின்னணியில் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் இருப்பதாக தகவல் வெளியாகியது.
பேஜர் தாக்குதல், ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டது இஸ்ரேல் மீது ஈரானுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இந்த சூழலில், இஸ்ரேல் மீது ஈரான் நேற்று திடீரென 400க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி சரமாரியாக தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் இந்த தாக்குதலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள இஸ்ரேல் தங்கள் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை:
இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய இந்த தாக்குதலை முறியடியத்துவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. உலகிலேயே மிகவும் முன்னேறிய வான் பாதுகாப்பு அம்சம் கொண்ட இஸ்ரேல் வான் படை இந்த தாக்குதலை முறியடித்துவிட்டதாக இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் நாட்டின் பிரதமர் நேதன்யாகு இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருப்பதுடன், ஈரானுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளார். ஈரான் இந்த இரவு மிகப்பெரிய தவறு செய்துள்ளது. அதற்கு தக்க விளைவை அவர்கள் சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மிகப்பெரிய போருக்கு அடித்தளமா?
ஹிஸ்புல்லா அமைப்புக்கும் ஈரானுக்கும் இடையே நெருக்கமான தொடர்பு இருந்து வருகிறது. ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய நிர்வாகிகளை கொலை செய்த இஸ்ரேல் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹசன் நஸ்ரல்லாவை கொலை செய்தது. இது இஸ்ரேல் மீது ஈரானுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது.
அமெரிக்காவில் கடந்த வாரம் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் ரஷ்யா, துருக்கி மற்றும் ஈரான் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இஸ்ரேல் – லெபனான் விவகாரம் குறித்து ஆலோசித்தனர். இந்த ஆலோசனைக்கூட்டம் முடிந்த நிலையில், ஈரான் இந்த தாக்குதலை இஸ்ரேல் மீது நடத்தியுள்ளது.
இஸ்ரேல் – காசா, ஹிஸ்புல்லா இடையேயான போர் ஏற்கனவே தீவிரம் அடைந்துள்ள நிலையில், தற்போது ஈரான் நேரடியாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியிருப்பது உலக அளவில் மிகப்பெரிய யுத்தத்திற்கு வழிவகுப்பதாக அமைந்துள்ளதாக உலக நாடுகள் வருத்தம் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.