India Srilanka MOU: இந்தியா-இலங்கை ராணுவ உறவில் புதிய அத்தியாயம்.. கையெழுத்தான 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்...
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி முன்னிலையில், இரு நாடுகளுக்கிடையே ராணுவம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

மூன்று நாட்கள் பயணமாக இலங்கை சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில், இந்தியா-இலங்கை இடையேயான உறவுகளை வலுப்படுத்தும் வகையில், ராணுவம், சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. அதிலும் குறிப்பாக, ராணுவ ஒத்துழைப்பில் முதன் முறையாக புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டள்ளது.
இந்தியா-இலங்கை இடையே 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
தாய்லாந்தில் நடைபெற்ற 6-வது பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டில் கலந்துகொண்டு நிறைவு செய்த பிரதமர் மோடி, நேற்று மாலை இலங்கை சென்றடைந்தார். அங்கு அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்புடன் ராணுவ மரியாதையும் அளிக்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்ட பிரதமர் மோடிக்கு, இன்று இலங்கையின் உயரிய விருதான ஸ்ரீலங்கா மித்ர விபூஷண பதக்கம் வழங்கப்பட்டது.
பின்னர், பிரதமர் மோடி முன்னிலையில், இரு நாடுகளுக்கும் இடையே 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
- மின்சார இறக்குமதி/ஏற்றுமதிக்கான HVDC இடைத்தொடர்பை செயல்படுத்துவதற்காக இந்தியா-இலங்கை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து.
- இந்தியா-இலங்கை இடையே டிஜிட்டல் மாற்றத்திற்கான வெற்றிகரமான டிஜிட்டல் தீர்வுகளை பகிர்ந்துகொள்ள, ஒத்துழைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்.
- இலங்கையின் திரிகோணமலையை எரிசக்தி மையமாக மேம்படுத்துவதில் ஒத்துழைப்புக்காக, இந்தியா-இலங்கை-ஐக்கிய அரபு அமீரக அரசுகளுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.
- இந்தியா-இலங்கை அரசுகளுக்கிடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து.
- கிழக்கு மாகாணத்திற்கான பல்துறை மானிய உதவிக்காண புரிந்துணர்வு ஒப்பந்தம்.
- இரு நாடுகளுக்குமிடையே சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறைகளில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து.
- இந்தியா-இலங்கை இடையே மருந்தியல் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது.
இந்தியா இலங்கை இடையே கையெழுத்தாகியுள்ள இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், இரு நாட்டின் வணிக உறவை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இலங்கையில் சீனா ஆதிக்கம் செலுத்த முயன்றுவரும் நிலையில், பிரதமர் மோடியின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்நிலையில், இலங்கையில் சுற்றுப்பயணத்தை நாளை முடித்துக்கொள்ளும் பிரதமர் மோடி, அங்கிருந்து ராமேஸ்வரம் வருகிறார்.





















