காபூல் வீழ்ந்த கதை: தலிபான்களின் தந்திரம் என்ன? ஒரு டைம்லைன்..!
ஆப்கானிஸ்தான் முழுமையாக தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்து இரண்டு தினங்களாகிவிட்டது.
ஆப்கானிஸ்தான் முழுமையாக தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்து இரண்டு தினங்களாகிவிட்டது. 90 நாட்களில் தலிபான்கள் முழுமையாக காபூலை கட்டுக்குள் கொண்டுவருவார்கள் என்று கூறப்பட்ட நிலையில் வெறும் 6 நாட்களில் ஆப்கானிஸ்தான் வீழ்ந்துள்ளது. இது எப்படி சாத்தியமானது. அமெரிக்க உளவு நிறுவனங்களின் கணிப்பை தலிபான் படைகளால் எப்படி தவிடுபொடியாக்க முடிந்தது. தலிபான்களின் வெற்றி அமெரிக்காவின் தோல்வி என்றும் கூறப்படுகிறது.
கடந்த மே மாதம் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்காவும், நேட்டோவும் தனது படைகளைப் படிப்படியாக திரும்பப் பெறுவது என அறிவித்தது. அந்த அறிவிப்பே தலிபான்களுக்கு உளவியல் ரீதியாக மிகப்பெரிய ஊக்கத்தைத் தந்தது.
அமெரிக்காவும், ஆப்கானிஸ்தானும் தலிபான்களை கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம் என்று தான் நினைத்தது. ஆனால், நிலைமை அவ்வாறாக இல்லை. 3 லட்சம் படை வீரர்கள், பல பில்லியன் டாலர் செலவில் கட்டமைக்கப்பட்ட ராணுவ தளவாடங்கள் ஆப்கனிடம் இருந்ததால் அமெரிக்கா தலிபான்களை லேசாக எடை போட்டது. ஆனால், ஆள்பலம் காகிதப் புலி போல் இருந்தது. ஆபகன் படை வீரர்கள் மத்தியில் வலுவான தலைமையின்மை, ஊழல் போன்றவை 3 லட்சம் என்ற எண்ணிக்கையை வலுவிழக்கச் செய்திருந்தது. வலுவிழந்த ஆப்கன் ராணுவம் தலிபான்களிடம் வீழ்ந்த கதையை தேதிவாரியாகப் பார்ப்போம்:
ஏப்ரல் 14 2021:
அன்றைய தினம் தான் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முதன்முதலாக ஆப்கானிஸ்தானிலிருந்து மே மாதம் முதல் அமெரிக்கப் படைகள் வெளியேறும். செப்டம்பர் 11க்குள் இது முடிவடைந்துவிடும். அமெரிக்கப் படைகள் முழுமையாக வாபஸ் பெறப்படும் எனத் தெரிவித்திருந்தது.
மே 4 2021:
தலிபான் தீவிரவாதிகள் தெற்கு ஹெல்மாண்ட் மாகாணம் உட்பட 6 மாகாணங்களில் மிகப்பெரிய தாக்குதலை நடத்துகின்றனர்.
மே 11, 2021:
நாடு முழுவதும் தலிபான் தீவிரவாதிகளின் அட்டூழியம் பெருக காபூல் நகருக்கு வெளியே இருந்த நெர்க் மாவட்டம் தலிபான்களின் வசம் வருகிறது.
ஜூன் 7, 2021:
24 மணி நேரத்தில் 100க்கும் மேற்பட்ட ஆப்கன் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதுதான் நிலைமை மோசமாகிவிட்டது என்பதை உணர்த்திய நாள்.
ஜூன் 22, 2021:
தலிபான்கள், நாட்டின் வட பகுதியில் பெரும் தாக்குதல்களை நடத்தத் தொடங்கினர். தென் பகுதி தான் தலிபான்களின் பலம் பொருந்திய பகுதி எனக் கருதப்பட்ட நிலையில் வட பகுதியில் நடந்த தாக்குதல் அச்சத்தை ஏற்படுத்தியது.
ஜூலை 2 2021:
நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வர, ஆப்கானிஸ்தானில் மிக முக்கிய ராணுவத் தளத்திலிருந்துன், பாக்ரம் விமானத் தளத்தில் இருந்தும் அமெரிக்கப் படை வாபஸ் பெறப்பட்டன.
ஜூலை 5, 2021:
ஆப்கன் அரசுக்கு, எழுத்துப்பூர்வமாக அமைதி ஒப்பந்தம் தொடர்பான அறிக்கையை விரைவில் அளிப்போம் என தலிபான்கள் அறிவிக்கின்றனர்.
ஜூலை 21, 2021:
தலிபான் தீவிரவாதிகள் நாட்டின் பாதி பகுதியை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். அவர்களின் வேகமும் தாக்குதலும் அதிகரிக்கத் தொடங்கியது.
ஜூலை 25, 2021:
தலிபான் தாக்குதலை சமாளிக்க உதவுவதாக அமெரிக்கா ஒப்புக்கு வாய்மொழி உத்தரவாதம் அளித்தது.
ஜூலை 26, 2021:
மே, ஜூன் மாதங்களில் மட்டும் தலிபான் தீவிரவாதிகளால் 2400 அப்பாவி ஆப்கன் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியானது.
ஆக.6 2021:
நாட்டின் தெற்கு மாகாணமான ஜரான்ஜி தலிபான் வசமானது. தலிபான்கள் பிடியில் சிக்கி முதல் மாகாணமானது.
ஆக 13, 2021:
காந்தகார் உட்பட மேலும் நான்கு மாகாணங்கள் வீழ்ந்தன. காந்தகார் தலிபான்களின் ஆன்மிக தலைநகர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆக 14, 2021:
மஷார் இ ஷரீஃப் மாகாணம், புல் இ ஆலம் ஆகிய மாகாணங்கள் வீழ்ந்தன
ஆப்கன் அதிபர் அஷ்ராஃப் கானி நாட்டை விட்டு வெளியேறினார். தலிபான்கள் வெற்றி பெற்றுவிட்டதாக அறிவிப்பு வெளியானது.
இப்படியாக ஆப்கன் படிப்படியாக தலிபான்களின் வசம் சென்றுவிட்டது.
தலிபான்களின் தந்திரம்:
ஆப்கனின் 31 மாகாணங்களில் 15க்கும் மேற்பட்ட மாகாணங்களை வெகு குறுகிய காலத்தில் ஆக்கிரமித்தனர் தலிபான்கள். இது எப்படி சாத்தியமானது எனப் பார்த்தால், தலிபான்கள் தாங்கள் நுழையும் இடங்களில் எல்லாம் படுகொலைகளை நிகழ்த்தி அச்சத்தை விதைத்தனர். சரணடைந்தால் உயிராவது பிழைக்கலாம் என்று உளவியலை அசைத்தனர். ஏற்கெனவே லஞ்சம், ஊழல் என இருந்த ஆப்கன் ராணுவ வீரர்கள் இதற்கு எளிதில் இரையானார்கள். சமூக செயற்பாட்டாளர்கள், மனித உரிமைகள் ஆர்வலர்களுக்கும் எங்களை எதிர்க்காவிட்டால் உயிர் பிழைப்பீர்கள் என்ற ஒரே ஒரு கெடு தான் வைத்தனர். இதனாலேயே அவர்களால் எதிர்ப்புகளின்றி அடுத்தடுத்த மாகாணங்களுக்குள் நுழைய முடிந்தது.
உள்ளூர் தலைவர்களான இஸ்மாயில் கான், அட்டா முகமது நூர், அப்துல் ரஷீது தோஸ்தம் ஆகியோர் உஸ்பெகிஸ்தானுக்கு தப்பி ஓடினர்.
அதிபர் மாளிகை நிலவரமோ இன்னும் மோசமாக இருந்தது. சொகுசு சோஃபாவில் அமர்ந்து தலிபான்கள் நுழைவை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது. ஆட்சியை ஒப்படைக்கக் காத்திருந்தது போல் நடந்து கொண்டது.
எல்லோராலும் கைவிடப்பட்டது என்னவோ ஆப்கன் வாழ் அப்பாவி மக்கள்தான்.