G7 Summit: ஜி 7 உச்சி மாநாடு தொடக்கம்: ஒரு மில்லியன் டோஸ் தடுப்பூசி தானம்!
இந்த மாநாட்டில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல், பிரான்ஸ் அதிபர் மேக்ரோன், இத்தாலி பிரதமர் மரியோ தராகி மற்றும் ஜப்பான் நாட்டின் பிரதமர் யோஷிஹைட் சுகா கலந்து கொண்டுள்ளனர். மாநாட்டை, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையேற்று நடத்துகிறார்.
ஜி 7 உச்சி மாநாடு தொடங்கியது: சமூக இடைவெளியுடன் குழு புகைப்படம், ஒரு மில்லியன் டோஸ் தடுப்பூசி தானம் இன்னும் சில சுவாரஸ்யங்கள்
ஜி 7 கூட்டமைப்பின் 47-வது உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. பிரிட்டனின் கார்ன்வால் பகுதியில் செயின்ட் ஐவ்ஸ் நகரில் உள்ள காா்பில் பே பகுதியில் இந்த மாநாடு நடைபெறுகிறது.
மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல், பிரான்ஸ் அதிபர் மேக்ரோன், இத்தாலி பிரதமர் மரியோ தராகி மற்றும் ஜப்பான் நாட்டின் பிரதமர் யோஷிஹைட் சுகா கலந்து கொண்டுள்ளனர். மாநாட்டை, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையேற்று நடத்துகிறார்.
உலகை கொரோனா அச்சுறுத்தத் தொடங்கியதிலிருந்து கடந்த 2 ஆண்டுகளில் ஜி-7 நாடுகளின் தலைவர்கள்நேரில் சந்திப்பது இதுவே முதல் முறையாகும். இதனால் இந்த மாநாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
ஜி 7 வரலாறு:
முன்னேறிய நாடுகள் என்று கருதப்படும், வளர்ந்த பொருளாதாரங்களைக் கொண்ட ஏழு நாடுகள் இருக்கும் அமைப்பே Group of Seven என்றழைக்கப்படும் ஜி7. இதில் பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இடம்பெற்றிருக்கின்றன.
இந்த நாடுகள் சுதந்திரம், மனித உரிமை, ஜனநாயகம், சட்டம் ஒழுங்கு, செழிப்பு மற்றும் நிலையான வளர்ச்சி போன்ற முக்கிய கொள்கைகளோடு தங்கள் சமூகம் இருப்பதாகக் கருதி ஒரு குழுவாக இணைந்துள்ளன.
1975ல், சர்வதேசப் பொருளாதார நெருக்கடிக்கான தீர்வுகளைத் தேடும் முயற்சியில் தங்களின் யோசனைகளை பரிமாற்றிக் கொள்வதற்காக பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் , அமெரிக்கா ஆகிய ஆறு நாடுகள் கூடி சந்தித்தன. பின்னர் அடுத்த ஆண்டே கனடா சேர்ந்தது. சில வருடங்களுக்குப் பின்னர் ரஷ்யாவும் இணைக்கப்பட்டு ஜி8 நாடுகள் என்றழைக்கப்பட்டது. ஆனால், ரஷ்யாவின் உள்நாட்டு சர்ச்சைகளின் காரணமாக குழுவிலிருந்து ரஷ்யா நீக்கப்பட்டு பின்னர் மீண்டும் ஜி7 கூட்டமைப்பாகவே ஆனது.
ஆண்டுதோறும் இந்த மாநாடு இரண்டு நாட்களுக்கு நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாடு, இதன் தலைவராக சுழற்சி முறையில் இருப்பர். அந்தவகையில் இந்த ஆண்டு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையேற்று நடத்துகிறார்.
2021 மாநாட்டில் சில சுவாரஸ்யங்கள்..
2 ஆண்டுகளுக்குப் பின்னர் தலைவர்கள் நேரில் சந்தித்து நடத்து ஆலோசனைக் கூட்டமென்பதால், கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக தலைவர்கள் சமூக இடைவெளியைக் கடைபிடித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பின்னர், பூட்டிய அறைக்குள் ஜி-7 மாநாட்டின் முதல் நாள் கூட்டம் நடைபெற்றது.
போரிஸ் ஜான்சன் பேச்சு..
மாநாட்டை துவக்கிவைத்துப் பேசிய இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், "இந்த உலகம் ஒரு பெருந்தொற்றிலிருந்து மீண்டு கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில், ஏற்றத்தாழ்வுகளுக்கு இடமில்லாமல் ஒட்டுமொத்த உலகமும் மீண்டு வருவதை உறுதி செய்ய வேண்டும்.
பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகளான நம்மால் இதனைச் செய்ய முடியும் என நான் நம்புகிறேன். நாம் இந்த உலகை இன்னும் சுத்தமாக, இன்னும் பசுமையாக ஆக்க வேண்டும் என்ற இலக்கோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
2008ல் சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின்போது நாம் செய்த தவறுகளை ஒருபோதும் மீண்டும் செய்துவிடக் கூடாது. பெருந்தொற்றுக்க்குப் பின்னர் உலக நாடுகள் ஒரே மாதிரியாக மீட்சி பெறுவதை உறுதி செய்யவேண்டும்" என்று கூறினார்.
ஒரு பில்லியன் டோஸ்..
கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜி7 நாடுகள் இணைந்து தடுப்பூசி பற்றாக்குறை உள்ள நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்கி உதவ வேண்டும். ஒரு பில்லியன் டோஸ் தடுப்பூசிகளை மற்றவர்களுக்குக் கொடுத்து உதவ வேண்டும் இதில் பாதியை அமெரிக்கா கொடுக்கும் என்று பெருமிதத்துடன் தெரிவிக்கிறேன் என்றார். 2022க்குள் உலகிலிருந்து கரோனா பெருந்தொற்றை ஒழிப்பதே நமது இலக்கு என்று ஜி7 தலைவர்கள் உறுதிபடத்தெரிவித்தனர்.