Devasahayam Pillai To Be Declared Saint : மதம் மாறிய ஒருவருக்கு புனிதப்பட்டம்.. கத்தோலிக்க திருச்சபையில் இது புதுசு.!
அடுத்தாண்டு, புனித பீட்டர் தேவாலயத்தில் நடைபெறும் புனிதர் பட்டம் அளிக்கும் நிகழ்வில் (Canonization) தேவசகாயம் பிள்ளை உள்ளிட்ட 6 பேருக்கு போப் ஆண்டவர் புனிதர் பட்டத்தை வழங்க உள்ளார்
ரோமன் கத்தோலிக்க திருச்சபை வரலாற்றில், 18ம் நூற்றாண்டில் இந்து மதத்தில் பிறந்து கிறிஸ்துவத்துக்கு மனம்மாறிய சாமானியர் ஒருவருக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட உள்ளது
அடுத்தாண்டு வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டர் தேவாலயத்தில் நடைபெறும் புனிதர் பட்டம் அளிக்கும் நிகழ்வு (Canonization) நிகழ்ச்சியில் தேவசகாயம் பிள்ளை உள்ளிட்ட 6 பேருக்கு போப் ஆண்டவர் புனிதர் பட்டத்தை வழங்க உள்ளார். இதற்கான முறையான அறிவிப்பை திருச்சபை கூட்டமைப்பு வெளியிட்டது
இன்றைய குமரி மாவட்டத்திலுள்ள நட்டாலம் என்னும் கிராமத்தில் 1712ஆம் ஆண்டு, உயர்க்குடியில் பிறந்தவர் தேவசகாயம் பிள்ளை. இவருக்கு பெற்றோர் இட்டப் பெயர் நீலகண்டன் என்பதாகும். இவர் திருமுழுக்குப் பெற்றபோது, "லாசர்" (Lazarus) என்பதன் தமிழ் பதமான "தேவசகாயம்" என்ற பெயரை பெற்றார். உயர் வகுப்பைச் சேர்ந்த இந்துக்கள் கிறித்தவத்தை தழுவக்கூடாது என்ற அன்றைய திருவாங்கூர் அரசரின் கட்டளையை மீறி மதம் மாறியதால் இவர் கொலை செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது. தேவசகாயம் பிள்ளை இறந்த இடம் இன்று தேவசகாயம் மவுண்ட் என்றும், ஆரல் குருசடி என்றும் அழைக்கப்படுகிறது.
அனைவரும் சமம்:
"தேவசகாயம்" என்ற பெயருடன் கிறித்தவரான நீலகண்டன், கடவுள் முன்னிலையில் மனிதர்கள் அனைவரும் சமம் என்ற உண்மையை நிலைநாட்ட பெரிதும் விரும்பியதாக கூறப்படுகிறது. இந்து மதத்தில் உயர்குடியில் பிறந்த இவர், ஏற்கனவே கிறித்தவ சமயத்தைப் பின்பற்றி வந்த தாழ்ந்த வகுப்பைச் சேர்ந்த மக்களுடன் உறவாடி வந்தார். இதன் காரணமாக, உயர் வகுப்பைச் சேர்ந்த மற்ற அரச அதிகாரிகள் தேவசகாயத்தை வெறுப்புடன் நோக்கினர். உயர் வகுப்பைச் சேர்ந்த இந்துக்கள் கிறித்தவத்தை தழுவக்கூடாது என்ற அன்றைய திருவாங்கூர் அரச கட்டளையைச் சுட்டிக்காட்டி, அவரை மீண்டும் இந்து மதத்தை ஏற்க வலியுறுத்தினர். அதைப் புறக்கணித்ததால், தேவசகாயம் மதம் மாறிய விவகாரம் மன்னரிடம் சென்றது.
First Non-Ordained Indian To Be Declared Saint By Pope Next Year
— ravidash (@ravidash2) November 11, 2021
Pope Francis will canonize Blessed Devasahayam Pillai, together with six other Blesseds, during a Canonization Mass in St Peter's Basilica in Vatican on May 15, 2022, Church officials said here on Wednesday.
தமது மனதை மாற்றிக் கொள்ளுமாறு மன்னர் விடுத்த அழைப்பை தேவசகாயம் பிள்ளை முழுமனதோடு நிராகரித்தார். இதனால் ஆத்திரமடைந்த மன்னர் மார்த்தாண்ட வர்மா, தேவசகாயத்தை சிறையில் அடைக்குமாறு ஆணையிட்டார். இந்த தண்டனை மூலம், அவரை மனம் மாற்றி கிறித்தவ மதத்தைக் கைவிடச் செய்யலாம் என்பது மன்னரின் நம்பிக்கையாக இருந்தது.
பல மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்ட பிறகும் தேவசகாயம், கிறித்தவ நம்பிக்கையில் உறுதியாக இருந்தார். இதனால் நம்பிக்கை இழந்த மன்னர், தேவசகாயத்தின் கீழ்ப்படியாமையை அரசத் துரோகமாக கருதி அவருக்கு மரண தண்டனை விதித்தார். 1752 ஜனவரி 14ந்தேதி குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் உள்ள காற்றாடி மலையில் தேவசகாயம் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று சொல்லப்படுகிறது.
2012ல் அருளாளர் பட்டம்:
2012 ஜூன் மாதத்தில் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட், தேவசகாயம் பிள்ளை உறுதியான விசுவாச வாழ்வு (heroic virtues) வாழ்ந்தார் என அறிக்கையிடும் புனிதர் பட்ட நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் பேராயத்தின் (Congregation for the Causes of Saints) ஆவணத்தில் கையொப்பம் இட்டு இவரை வணக்கத்திற்குரியவர் நிலைக்கு உயர்த்தினார். தேவசகாயம் பிள்ளையின் மறைசாட்சிய (martyr) வாழ்வின் அடிப்படையில், அவருக்கு அருளாளர் பட்டம் வழங்கவும் ஒப்புதல் வழங்கினார். இதையடுத்து நாகர்கோவில் கார்மேல் மேனிலைப் பள்ளி வளாகத்தில் 2012 டிசம்பர் 2ந்தேதி நடைபெற்ற விழாவில், தேவசகாயம் பிள்ளையை அருளாளராக உயர்த்தும் அறிவிப்பை திருத்தந்தையின் பிரதிநிதியான கர்தினால் ஆஞ்செலோ அமாத்தோ வெளியிட்டார்.
புனிதர் பட்டம்:
இந்நிலையில், ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் அங்கீகரிக்கப் பட்ட புனிதர்களின் பட்டியளில் தேவசாகாயம் பிள்ளையை சேர்க்கப்படும் அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்