Moon: நிலவில் எடுக்கப்பட்ட மண்ணில் முளைக்கும் செடி! நாசா விஞ்ஞானிகளே ஆச்சரியப்படும் ஆய்வு!
இதற்கான மண் எங்கிருந்து கிடைத்தது என்றால், முதன் முதலில் நிலவில் காலடி வைத்த ஆம்ஸ்ட்ராங்கே மண் அள்ளிக்கொண்டு வந்தார் என்பது நமக்கு தெரியும்.
வரலாற்றிலேயே முதல் முறையாக நிலவில் சேகரிக்கப்பட்ட மண்ணை கொண்டு செடியை வளர்த்துள்ளனர் விஞ்ஞானிகள். விண்வெளி ஆய்வில் இது முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து அமெரிக்கா, இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் விண்வெளி சார்ந்த ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. பிற கிரகங்களில் மனிதர்கள் உயிர் வாழ சாத்தியம் உள்ளதா என்பதை பொறுத்தே இந்த ஆய்வு பணிகள் அமைந்துள்ளன. சந்திரன் மட்டுமல்லாது பிற கிரகங்களிலும் இந்த ஆராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை உலக நாடுகள் கூட்டாகவும், தனியாகவும் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், நிலவில் சேகரிக்கப்பட்ட மாதிரி மண்ணை கொண்டு செடியை வளர்த்து அசத்தியுள்ளனர் விஞ்ஞானிகள்.
சந்திர மண்ணில் தாவரங்கள் வளர முடியுமா?
கம்யூனிகேஷன்ஸ் பயாலஜி இதழில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்றின் முடிவுகள் இந்த கேள்விக்கு ஆதாரத்துடன் பதில் அளித்துள்ளது. அப்பல்லோ பயணத்தின் போது சேகரிக்கப்பட்ட நிலவு மண் மாதிரிகளில் தாவரங்களை வளர்க்கப் பயன்படுத்தப்பட்ட ஒரு பரிசோதனையைக் குறிப்பிடுகிறது. ஆச்சரியப்படும் விதமாக, முதன்முறையாக , 'தாலே க்ரெஸ்' (thale cress) என்று அழைக்கப்படும் அரபிடோப்சிஸ் தலியானா என்ற பூமி தாவரமானது, சோதனையின் போது சந்திர மண் மாதிரிகளில் வளர்ந்து உயிர்வாழத் துவங்கியுள்ளது. இதற்கான மண் எங்கிருந்து கிடைத்தது என்றால், முதன் முதலில் நிலவில் காலடி வைத்த ஆம்ஸ்ட்ராங்கே மண் அள்ளிக்கொண்டு வந்தார் என்பது நமக்கு தெரியும். அதுபோன்ற பயணங்களில் இருந்து சேகரிக்கப்பட்டதுதானாம்.
1969 தொடங்கி நிலவில் இருந்து பாறைகள், கற்கள், மண் மாதிரிகளை சேகரித்து பூமிக்கு கொண்டு வந்துள்ளனர் நாசா விண்வெளி ஆராய்ச்சியாளர்கள். அதன் மொத்த எடை 382 கிலோ கிராம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்திரமாக அதனை பதப்படுத்தி வைத்துள்ளதாம் நாசா. புளோரிடா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், 1969 மற்றும் 1972 ஆண்டுக்கு இடையில் நடத்தப்பட்ட அப்பல்லோ 11, 12 மற்றும் 17 பயணங்களின் போது சேகரிக்கப்பட்ட சந்திர மண் அடங்கிய 12 மாதிரிகளை தங்கள் ஆய்வுக்காகப் பயன்படுத்தியது. சந்திர மாதிரிகளைத் தவிர, பூமியில் சேகரிக்கப்பட்ட 16 எரிமலை சாம்பல் மாதிரிகளையும் அவர்கள் இந்த ஆராய்ச்சியில் பயன்படுத்தியுள்ளனர். பின்னர் அவர்கள் இரண்டு வகையான மாதிரிகளிலும் தாலே க்ரெஸ் செடிகளை வளர்த்து பார்த்துள்ளனர்.
ஆராய்ச்சியாளர்கள் எரிமலை சாம்பலைச் சந்திர மண்ணின் அதே கனிமம் மற்றும் துகள் அளவுடன் பயன்படுத்தினர். ஆராய்ச்சியாளர்கள் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேலாக நிலவு மண் மாதிரிகளை ஆய்வு செய்து, மாதிரிகளில் வளர்க்கப்பட்ட தாவரங்களின் வளர்ச்சி மற்றும் மரபணு அமைப்பைக் கவனமாகக் கண்காணித்து, சில கவர்ச்சிகரமான முடிவுகளை வெளியிட்டனர். இறுதியாக, இப்போது நிலவு மண்ணில் வளர்ந்த முதல் தாவரத்தின் புகைப்படத்தையும் விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.
விஞ்ஞானிகள் தங்களின் சந்திர மண் பரிசோதனைக்காகக் குறிப்பாக தேல் க்ரெஸைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணம், இந்த செடி பூமியில் நன்கு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதன் மரபணுவில் உள்ள ஒவ்வொரு நியூக்ளியோடைடிலிருந்தும் உயிரணுக்கள் வெளிப்படும். அதில் தோன்றும் மரபணுக்கள் வரை, அனைத்தும் மிகத் துல்லியமாக நமக்குத் தெரியும் என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஒரு விஞ்ஞானி கூறுகையில், "முக்கிய காரணம், இந்த தாவரம் உடல் ரீதியாக மிகவும் சிறியது. மேலும் இது ஒரு சிறிய அளவிலான பொருளில் வளரக்கூடிய தன்மை கொண்டது. நாங்கள் அடிப்படையில் இப்போது ஒரு கிராம் மாதிரியில் ஒரு செடியை வளர்த்துள்ளோம். ஒரு கிராம் நிலவு மண் ஒரு டீஸ்பூன் நிரம்பியதற்குச் சமம், எனவே ஒரு செடியின் பெரும்பகுதியை வளர்க்க இது எவ்வளவு சிறியது என்பதை நீங்களே கற்பனை செய்துகொள்ளலாம்." என்றார்.
ஒரே மாதிரியான கனிம கலவை இருந்தபோதிலும், சந்திரனின் மண் மற்றும் எரிமலை சாம்பல் மாதிரிகளில் வெவ்வேறு ரிசல்டை கொடுத்தன. பல சந்திர மண் தாவரங்கள் ஒரே வடிவம் மற்றும் நிறத்துடன் வளர்ந்தன, ஆனால் மற்றவை சிவப்பு-கருப்பு நிறங்களை கொண்டிருப்பதாகக் கண்டறியப்பட்டது. இந்த நிறமிகள் தாவரத்தின் மன அழுத்தத்தைச் சித்தரிக்கிறது. மேலும், சந்திர மண்ணில் வளர்க்கப்படும் தாவரங்கள் மெதுவாக வளர்ந்தன.
சந்திர மண்ணில் எடுக்கப்பட்ட மண்ணின் தாவரம் இன்னும் தொடர்ந்து வளர்வது ஆச்சரியமாக இருக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இது தாவரத்திற்கு அந்த மண் மிகவும் அழுத்தம் நிறைந்ததாக உள்ளது, ஆனாலும் கூட அது இன்னும் இறக்கவில்லை. தாவரம் தானாகச் சந்திர மண்ணுடன் அனுசரித்துச் செல்கிறது. நிலவில் தாவரங்களை எவ்வாறு திறமையாக வளர்க்க முடியும் என்பதை இந்த ஆராய்ச்சி மூலம் அறிந்துகொள்ள முடியும். எனவே, இந்த ஆய்வுகள் மூலம், பூமி தாவரங்கள் சந்திர மண்ணுடன் எவ்வாறு தொடர்பு கொள்கின்றன என்பதை நாம் நன்கு புரிந்து கொள்ள அடுத்தகட்ட ஆராய்ச்சிகள் உதவும் என்று கூறியுள்ளனர்.