Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
Sunita Williams: சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் சுனிதா வில்லியம்ஸ் காலமானது, மேலும் தாமதமாகும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பூமியில் இருந்து, சுமார் 400 கி,மீ உயரத்தில், சர்வதேச விண்வெளி நிலையமானது, பூமியைச் சுற்றி வலம் வந்து கொண்டிருக்கிறது. இது, சுமார் 90 நிமிடத்தில் பூமியை முழுவதுமாக சுற்றி வந்து விடும். அதாவது, ஒரு நாளில் சராசரியாக 16 முறை பூமியைச் சுற்றி வரும்.
விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ்:
இந்த விண்வெளி நிலையத்தில், விண்வெளி வீரர்கள் தங்கி , விண்வெளி தொடர்பான பல்வேறு ஆய்வுகளை செய்து வருகின்றனர்.கடந்த ஜூன் மாதம் ஏவப்பட்ட ஸ்டார்லைனர் விண்கலமானது, விண்வெளி பயணங்களை சோதனை செய்யும் வகையில் இரண்டு விண்வெளி வீரர்களான இந்திய வம்சாவளியான சுனிதா வில்லியம்ஸ் மற்றொரு வீரர் புட்ச் வில்மோர் ஆகியோரை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கொண்டு சென்றது.
முதலில் சுமார் எட்டு நாட்கள் பயணம் என்று திட்டமிடப்பட்ட நிலையில், விண்கலத்தின் என்ஜினில் உள்ள பல்வேறு சிக்கல்கள் காரணமாக, பூமி திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து, சிக்கல்களை சரிசெய்ய போயிங் மற்றும் நாசா தீவிரமாக முயற்சித்தும் பலனளிக்கவில்லை.
பூமி திரும்புவதில் தாமதம்:
இந்த சிக்கல்களால் ஸ்டார்லைனரின் விண்கலத்தில் பயணித்த மூத்த நாசா விண்வெளி வீரர்களான புட்ச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோரை உடனடியாக திரும்ப அழைத்து வருவதில் சிக்கல் எழுந்தது.
இந்நிலையில், போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலமானது, பாதுகாப்பு காரணங்களால் விண்வெளி வீரர்கள் இல்லாமல் , விண்கலம் மட்டும் தனியாக திரும்பியது.
இதன் விளைவாக, அவர்களை பூமிக்கு கொண்டு வர எலன் மஸ்க்கிஸ்ர்க்குச் சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் க்ரூ டிராகன் விண்கலமானது, சில வாரங்களுக்கு முன்பு விண்வெளிக்குச் சென்றது. இதன் மூலம் வில்மோர் மற்றும் வில்லியம்ஸுடன் பூமிக்குத் திரும்ப திட்டமிட்டுள்ளதாக நாசா தெரிவித்தது. இவர்கள் 2 பேரும் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் பூமி திரும்புவார்கள் எனவும் நாசா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
காரணம் என்ன?
ஆனால், இவர்கள் பூமி திரும்புவது, மேலும் தாமதமாகும் என்று அமெரிக்க விண்வெளி மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு காரணம், பூமியிலிருந்து விண்வெளி குழு சென்றால்தான் , விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்ப முடியும் என்று தகவல் தெரிவிக்கின்றன. அதாவது, அவர்களிடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்பதாகும்.
இந்நிலையில், பூமியிலிருந்து செல்லும் விண்வெளி குழுவின் பயணமானது, தாமதாகும் என்றும் , மார்ச் மாதத்திற்கு பிறகே புறப்பாடு இருக்கும் என்றும் தகவல் தெரிவிக்கின்றன.
இதனால், சுனிதா வில்லியம்ஸ் பிப்ரவரியில் பூமி திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மார்ச் மாதத்திற்கு பிறகே, பூமி திரும்ப வாய்ப்பு இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

