Elon Musk Twitter: டிவிட்டரில் ப்ளூ டிக் மீண்டும் நிறுத்திவைப்பு..! கலர், கலரா டிக் தர எலான் மஸ்க் திட்டம்..
பயனாளர்களுக்கு ப்ளூ டிக் வழங்கும் திட்டத்தை நிறுத்தி வைப்பதாக, டிவிட்டர் உரிமையாளர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
டிவிட்டர் நிறுவனத்தை உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் அண்மையில் ரூ.3.5 லட்சம் கோடிக்கு வாங்கினார். அதைதொடர்ந்து, தலைமை செயல் அதிகாரியின் வெளியேற்றம், 50% ஊழியர்கள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பணிநீக்கம் செய்யப்பட்டது போன்ற அடுத்தடுத்த சர்ச்சைகள் வெளியாகின. இதனிடையே, பயனர்களின் உண்மை அடையாளத்தை உறுதிபடுத்துவதற்கு பயன்படுத்தப்படும் ப்ளூ டிக் முறைக்கு இனி மாதம் 8 அமெரிக்க டாலர் கட்டணம் வசூலிக்கப்படும் என எலான் மஸ்க் தெரிவித்தார்.
அடுத்தடுத்து வெளியான புதிய அறிவிப்புகள்:
அதிக நேரங்கள் கொண்ட வீடியோ மற்றும் ஆடியோ பதிவிடும் வசதியும், பாதி விளம்பரங்கள் மட்டுமே இருக்கும், கட்டணம் மூலம் கிடைக்கும் வருமானம், சிறந்த உள்ளடக்கத்தை உருவாக்குபவர்களுக்கு வெகுமதியாகவும் பகிர்ந்து அளிக்கப்படும் என்றும், எலான் மஸ்க் அறிவித்திருந்தார். மேலும் பிரபலங்களின் அங்கீகரிக்கப்பட்ட கணக்குகளுக்கு official எனும் பேட்ச் வழங்கப்படும் எனவும், போலி கணக்குகளுக்கு parody எனும் பேட்ச் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
நிறுத்திவைக்கப்பட்ட ப்ளூ டிக் திட்டம்:
மஸ்கின் இந்த அறிவிப்பு கடும் கண்டனங்களையும், கலவையான விமர்சனங்களையும் பெற்று வந்த நிலையில், பல பிராண்டுகள் மற்றும் நபர்கள் ஆள்மாறாட்டம் செய்து கட்டணம் செலுத்தி ப்ளூ டிக் பெற்றதால் ட்விட்டரில் போலி கணக்குகள் கணிசமாக உயர்ந்தன. இதனையடுத்து கடந்த 11ஆம் தேதி கட்டணம் செலுத்தி ப்ளூ டிக் வெரிஃபைட் அக்கவுண்டை பெறும் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, வரும் 29ம் தேதி முதல் ப்ளூ டிக் பெறும் திட்டம் மீண்டும் தொடங்கப்படும் என்றும், இம்முறை இத்திட்டம் மேலும் உறுதியாக செயல்படுத்தப்படும் என்றும் எலான் மஸ்க் தெரிவித்து இருந்தார்.
Holding off relaunch of Blue Verified until there is high confidence of stopping impersonation.
— Elon Musk (@elonmusk) November 22, 2022
Will probably use different color check for organizations than individuals.
எலான் மஸ்க் புதிய அறிவிப்பு:
இந்நிலையில், டிவிட்டர் பயனாளர்கள் ஆள்மாறாட்டம் செய்வதை நிறுத்துவதில் முழு நம்பிக்கை ஏற்படும் வரை, ப்ளூ டிக் வழங்கும் திட்டத்தை நிறுத்தி வைப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். மேலும், ப்ளூ டிக் மட்டுமின்றி தனிநபர் மற்றும் நிறுவனங்களை வேறுபடுத்தும் வகையில், வெவ்வேறு வண்ணங்களால் ஆன அடையாளங்களை வழங்க உள்ளதாகவும் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், இதுவரை இல்லாத அளவிற்கு புதிய உச்சமாக, கடந்த ஒருவாரத்தில் மட்டும் புதியதாக தினசரி பயனாளர்கள் 16 லட்சம் பேரை, டிவிட்டர் நிறுவனம் பெற்றுள்ளதாகவும் எலான் மஸ்க் பெருமிதம் தெரிவித்துள்ளார்.