Elon Musk: வான்டடாக வாயை கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்ட மஸ்க்.. யாரிடம் தெரியுமா.?
அதிரடியாக பேசுகிறேன் என்ற பெயரில், அமெரிக்க செனட் சபை உறுப்பினர் ஒருவரை வம்பிழுத்து, வசமாகி வாங்கிக் கட்டிக்கொண்டுள்ளார் எலான் மஸ்க்.

அமெரிக்க செனட் சபை உறுப்பினர் மார்க் கெல்லியை, துரோகி எனக் கூறி, அவரிடம் வசைப்பாடு வாங்கியுள்ளார் எலான் மஸ்க். எதற்காக அவரை துரோகி என்று கூறினார் தெரியுமா.? பார்க்கலாம்.
உக்ரைனுக்கு ஆதரவாக பதிவிட்ட மார்க் கெல்லி
அமெரிக்காவின் அரிசோனாவுக்கான செனட் உறுப்பினராக உள்ள மார்க் கெல்லி, முன்னாள் விண்வெளி வீரருமாவார். அதோடு, கடற்படை போர் விமானியாகவும் பணியாற்றியுள்ளார். இவர், சமீபத்தில் உக்ரைனுக்கு பயணம் மேற்கொண்டு, அது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். அவரது பதிவில், உக்ரைனிலிருந்து கிளம்பிவிட்டேன். அங்கு பார்த்த காட்சிகளின் அடிப்படையில், உக்ரைன் மக்களை விட்டுக்கொடுக்கக் கூடாது என்பது என் எண்ணமாக உள்ளது என கூறியுள்ளார்.
மேலும், அங்குள்ள அனைவரும் போர் நிறுத்தத்தையே விரும்புகிறார்கள். ஆனால், உக்ரைனை அப்படியே புதினிடம் விட்டுவிடாமல், அதை பாதுகாக்க ஏதாவது ஒப்பந்தம் தேவை என்றும் குறிப்பிட்டுள்ளார். உன்ரைன் பக்கம் நாம் நிற்க வேண்டும் என்பதற்கான முக்கியத்துவத்தை நான் எடுத்துரைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
துரோகி என பதிவிட்ட மஸ்க்.. பதிலடி கொடுத்த மார்க் கெல்லி
மார்க் கெல்லியின் பதிவை பார்த்த எலான் மஸ்க், நீங்கள் ஒரு துரோகி என ஒரே வரியில் குறிப்பிட்டு பதில் பதிவிட்டார்.
இதை பார்த்து கொதித்தெழுந்த மார்க் கெல்லி, துரோகியா.? எலான், சுதந்திரத்தை பாதுகாப்பது என்பது அமெரிக்காவை சிறந்ததாக்கும் மற்றும் நம்மை பாதுகாப்பாக வைத்திருக்கும் அடிப்படை கோட்பாடும் அதுதான் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவில்லை என்றால், ஒருவேளை அதை செய்யும் எங்களைப் போன்றோரிடம் விட்டுவிட வேண்டும் என பதிலடி கொடுத்துள்ளார்.

